சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரங்குகளில் இசைக் கச்சேரிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், நாடகங்கள், இசைப் பேரூரைகள், செயல்முறை விளக்க உரைகள் என்று பல தினுசுகளில் இசைவிழாக்களை கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், 'மார்கழி மாற்றம்' என்ற வித்தியாசமான இசை விழா நடந்தேறியது.
2000-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியின் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அம்சம், சுமார் 200 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற சேர்ந்திசை நிகழ்ச்சி. இவர்களில் 20 பேர் செவித்திறனும், பேச்சுத்திறனும் இல்லாத நிலையில், செய்கை மூலமாக நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்தப் புதிய முயற்சி குறித்து விழாவை முன்னெடுத்து நடத்திய அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளாக வசிக்கும் பயோ டெக்னாலஜி விஞ்ஞானி ரஞ்சனி கெளசிக் கூறியது:
'அறிவியலும், கலையும் இணைந்த கலவை என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் வகையில், 'சைஆர்ட்ஸ் ரஸ்' என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கும் கலை ஆர்வமும், கலைத்திறமையும் உண்டு. அவர்களையும் உள்ளடக்கியதாக இசைவிழா சீசன் அமைய வேண்டும் என்பதற்காக, ஆறு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறேன்.
எங்களின் நிகழ்ச்சிகளில் வழக்கமான இசைக் கலைஞர்களையும் மாற்றுத் திறனாளி இசைக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து ஒரே மேடையில் கச்சேரிகள் செய்வதற்கு ஏற்பாடு செய்கிறோம். பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்கள் பாரம்பரிய இசை, நடனம் இவற்றைக் கற்றுக் கொண்டு, மிகுந்த ஈடுபாட்டோடு தங்கள் நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். பாட்டு, நடனத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே, எங்கள் நிகழ்ச்சியில் அத்தகைய பல நாட்டுக் கலைஞர்களுக்கு மேடையேற வாய்ப்புகளை அளிக்கிறோம். அவர்களுக்கு விருதுகள் அளித்து ஊக்குவிக்கிறோம்.
இந்த ஆண்டு ஒரு புதிய முயற்சியாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களையும் இணைத்து மாணவர்களின் சேர்ந்திசைக்கு ஏற்பாடு செய்தோம். அதில், கிளார்க் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான பள்ளியைச் சேர்ந்தோர் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள். அவர்களின் ஆசிரியைகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள்.
காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் 20 பேருக்கும், மற்ற மாணவ மாணவிகளுக்கும் தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் மற்றும் பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் ஆகிய மூன்று பாடல்களையும் அவர்களின் ஆசிரியைகள் சைகை மூலமாகவே பாடக் கற்றுக் கொடுத்தனர். நிகழ்ச்சி நாளன்று திரையில் பாடல் வரிகள் இடம்பெற எல்லா குழந்தைகளும் சைகை மொழியில் பாடினார்கள்.
இன்னொரு ஆசிரியர் பார்வையாளர்களை நோக்கி சைகைகளைச் செய்து காட்ட, அரங்கத்தில் இருந்த அனைவரும் பாடல் வரிகளுக்கு சைகை செய்தபடியே வாய்விட்டுப் பாடினார்கள். பார்வையாளர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, மனம் நெகிழ்ந்து பாடினர்' என்றார் ரஞ்சனி கௌசிக்.
நிகழ்ச்சியில் கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் பேசியது:
'நான் எத்தனையோ இசைக் கச்சேரிகளைச் செய்திருக்கிறேன். ஆனால், மார்கழி மாற்றம் நிகழ்ச்சியானது வித்தியாசமான அனுபவத்தை அளித்தது. வாயைத் திறந்து பாட முடியாமல் போனாலும், சைகை மொழியில் அந்தக் குழந்தைகள் வாய் அசைத்தபோது, அவர்கள் முகத்தில் தெரிந்த குதூகலத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அப்படிப்பட்ட குழந்தைகளோடு சேர்ந்து தாங்களும் சைகை மொழியிலும், வாய்விட்டும் பாடியபோது ஏராளமான பார்வையாளர்களும் மனம் நெகிழ்ந்து, கண் கலங்கினார்கள். நான் கூடக் கண்கலங்கிவிட்டேன்' என்கிறார்.
-எஸ். சந்திரமெளலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.