கொப்பரையில் கலைவண்ணம்

திருமணங்களில் விருந்தினர்களைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லும் பொம்மைகள், காய்கனி சிற்பங்கள், பனிக்கட்டி சிற்பங்கள் என பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றிருக்கும்.
கொப்பரையில் கலைவண்ணம்
Published on
Updated on
2 min read

திருமணங்களில் விருந்தினர்களைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லும் பொம்மைகள், காய்கனி சிற்பங்கள், பனிக்கட்டி சிற்பங்கள் என பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றிருக்கும்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, பிரபல சமையல் கலை நிபுணர் அறுசுவை அரசு நடராஜனின் மகள் ரேவதியின் கைவண்ணத்தில் கொப்பரைத் தேங்காயில் உருவாக்கப்பட்ட சில உருவங்கள் இடம் பெற்றிருந்தன.

புதுமையான இந்தக் கலையைப் பற்றி அவரிடம் பேசியபோது:

'திருமணங்களில் சுவையான உணவுகள் தயாரிப்பு, உபசரிப்புடன் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதுமே உண்டு. அப்படி யோசித்தபோதுதான் இந்த எண்ணம் உருவானது.

தேங்காயின் கொப்பரை வெகுநாள்கள் கெடாமல் இருக்கும். அதன் வெளிப்புறம் பழுப்பு நிறத்திலான தடித்த தோல் இருக்கும். அதன் உள்ளே இருக்கும் கொப்பரைத் தேங்காயின் உள்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த பழுப்பு, வெண்மை இரண்டையும் வைத்து கலைநயம் மிகுந்த ஓவியங்களை உருவாக்க முடியும்.

முதலில் நல்ல திடமான கொப்பரைத் தேங்காய்களைத் தேர்ந்தெடுத்து, எச்சரிக்கையுடன் மேல் ஓட்டுப் பகுதியை உடைத்து நீக்கிவிட்டு கொஞ்சமும் சிதைவு இல்லாமல் கொப்பரையைத் தனியாக எடுக்க வேண்டும். அதையே அழகான உருவங்களை உருவாக்கப் பயன்படுத்துகிறேன்.

கொப்பரையின் மீது எந்த உருவத்தையும் நாம் உருவாக்கலாம். அது அவரவர் ஓவியத் திறமையைப் பொறுத்தது. தாமரை, ரோஜா போன்ற பூக்கள், மாம்பழம், வாழைப்பழம், அன்னாசி போன்ற பழ வகைகள், பிள்ளையார், கிருஷ்ணர், சிவன், லட்சுமி, ராமர், பெருமாள் என்று கடவுளர்களின் உருவங்களையும் கொப்பரைத் தேங்காயில் செதுக்க முடியும். இவைதான் என்று இல்லை.

நீங்கள் விரும்பும் எந்த உருவத்தையும் கொப்பரையின் மீது கொண்டுவருவது சாத்தியமே! நமக்கு எந்த உருவம் வேண்டுமோ? அந்த உருவத்தை முதலில் கொப்பரை மீது ஊசியால் வரைந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு கூர்மையான ஒரு கத்தியைக் கொண்டு அந்த அவுட் லைனுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் தேவையில்லாத கொப்பரையின் பழுப்பு நிறத் தோல் பகுதியை அகற்ற வேண்டும்.

'சித்திரமும் கைப் பழக்கம்' என்பது இந்த கொப்பரையைப் பொருத்தவரை ரொம்ப சரி. நாம் பழகப் பழக கொப்பரையில் எந்தவித உருவமானாலும், மிக எளிதாகவும், கச்சிதமாகவும் உருவாக்கிவிடமுடியும். பெரும்பாலான திருமணங்களில் கடவுள் உருவங்களையே உருவாக்கித் தரும்படிக் கேட்கிறார்கள்.

திருமணம் முடிந்து, மண்டபத்திலிருந்து புறப்படும்போது, புதுமணத் தம்பதிகளுக்கு அந்த ஓவியக் கொப்பரைகளை அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவோம். கொப்பரைகள் பல மாதங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும் என்பதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு எடுத்துச் செல்வார்கள்.

சில வருடங்களுக்கு முன்பாக, 'திருமணத்தின்போது மணமக்கள் தங்களுடைய உருவத்தையே கொப்பரையில் வரைந்து தர முடியுமா?' என்று கேட்டார்கள். அதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றினேன். அதன் பிறகு, பலரும் இது போலவே விருப்பம் தெரிவிக்க, அதன்படியே நான் செய்து கொடுத்திருக்கிறேன்'' என்கிறார் ரேவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.