புள்ளிகள்
உலகுக்கு 'நர்ஸ்' சேவையை அறிமுகப்படுத்தியவர் இங்கிலாந்தின் 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்'. ஓர் ஆந்தைப் பிரியையான இவர், எப்போதும் தனது பாக்கெட்டில் ஒரு ஆந்தையை வைத்திருப்பார்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரிப்பில், சி.ஆர்.சுப்பராமன் இசையில் வெளிவந்த திரைப்படம் 'பைத்தியக்காரன்'. இந்தப் படத்தில்தான் 'குயில் போல இசை பாடும்...' பாடலைப் பாட வைத்து கண்டசாலாவை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் சுப்பராமன்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
கவிஞர் வாலியின் சகோதரி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்த நேரத்தில் அவர் திருச்சி ஆண்டாள் தெருவில் இருந்த மருத்துவர் ஒருவரின் சிகிச்சையால் உயிர் பிழைத்தார்.
அந்த மருத்துவரின் பெயர் சுப்பிரமணியன்.
ஏற்கெனவே முருகப் பக்தராக இருந்த வாலி, இந்த நிகழ்வுக்குப் பின்னர் தீவிர முருகப் பக்தராக மாறினார்.
அவர் இயற்றிய பாடல்தான், 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்..' . இந்தப் பாடலைக் கேட்டு உருகாதவர் இல்லை.
இந்தப் பாடலை வாலி போஸ்ட் கார்டில் எழுதி அனுப்ப, அதை டி.எம்.எஸ். பாடினார்.
- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
சக்தி காரியலாயத்தின் புதிய புத்தக விற்பனை நிலையத்தை கல்கி திறந்துவைத்தார்.
கட்டடத்தின் மாடியில் சக்தி காரியலாயம் இருக்க, அதன் கீழே ஆங்கிலப் புத்தக நிறுவனம் இருந்தது. இதைக் குறிப்பிட்டு கல்கி பேசும்போது, 'தமிழ் வளரவில்லை. உயரவில்லை என்றெல்லாம் சொல்கின்றனர். இங்கே மிகவும் புகழ்பெற்ற ஆங்கில புத்தக நிறுவனத்துக்கு மேலேதான் தமிழ் புத்தக நிறுவனம் இருக்கிறது. ஆங்கிலத்தின் தலை மீது தமிழ் அமர்ந்திருக்கிறது'' என்றதும், கூட்டத்தினர் கரவொலி எழுப்பினர்.
-அ.யாழினி பர்வதம், சென்னை-78.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் திரைப்படப் பாடலாசிரியரும் கூட!
அவர் ஒருமுறை கூறும்போது, 'ஆரம்பத்தில் எனக்கு மெட்டுக்குப் பாட்டு எழுத வரவில்லை. ஒரு சிலர் வாய்ப்பாட்டு கற்றால், மெட்டுக்குப் பாடல் எழுதலாம் என்றனர்.
பின்னர் ஆண்டாள் எனும் பின்னணிப் பாடகியிடம் நான்கு ஆண்டுகள் வாய்ப்பாட்டு கற்றேன். கூடவே மெட்டுக்கும் பாட்டு எழுதவும் பயிற்சி எடுத்தேன். கடைசியில் 'சேனா' எனும் திரைப்படத்தில், டி-இமானின் இசையில் உன்னிமேனன், நித்தியஸ்ரீ பாடிய 'தீராத காதல் தீராதது தீர்வாகுமே உந்தன் பார்வையாலே'' எனும் முதல் பாடலை எழுதினேன்.
தற்போது முப்பது பாடல்கள் வரை எழுதியுள்ளேன். 25 நூல்களையும் எழுதியுள்ளேன்'' என்றார்.
'வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. நமக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் நம்மை விட்டுச் சென்றுவிடும். அது கடவுள் கொடுக்கும் பயிற்சி. இதையெல்லாம் சமாளித்துதான் வாழ வேண்டும். முடிந்த அளவு நல்லவனாக இருக்க வேண்டும்.
சிறுவயதில் நான் ஆசைப்பட்ட இசைக்கருவி கிடைக்கவில்லை. பின்னர் அதுபற்றி நினைக்காமல் இருந்தேன். ஒருகட்டத்தில் அது என்னிடமே வந்துவிட்டது. தள்ளி இருந்தால் நமக்குத் தேவையானது கிடைக்கும் என்பதை புரிந்துகொண்டேன்'' என்று ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
வங்கத்தில் ஆங்கிலம் படித்து உயர் அலுவலராக இருந்த பக்கிம் சந்திரர் 1864-இல் ஆங்கிலத்தில் 'ராஜமோகனின் மனைவி' எனும் தொடர்கதையை எழுதினார். அவர்தான் இந்தியாவில் முதல் நாவலாசிரியர் என்பார்கள். ஆனால், அவர் தனது தாய்மொழியான வங்க மொழியிலோ, வேறெந்த இந்திய மொழியிலோ முதலில் நாவல் எழுதவில்லை. மாறாக, ஆங்கிலத்தில்தான் எழுதினார்.
அசோகமித்திரனின் முதல் நாவலான 'கரைந்த நிகழ்கள்' என்பது திரைப்பட நாவலாகும். திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள பலரின் வரலாற்றையும், நிகழ்காலச்செயற்பாட்டையும் சேர்த்துச் சொல்லும் நாவல். 1966-67-ஆம் ஆண்டுகளில் இந்த நாவல் நா.பார்த்தசாரதியின் 'தீபம்' இதழில் தொடராக வந்தது.
மதுரை பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் எழுதிய 'பேசும் கலை' எனும் நூல் காந்தி கிராமப் பல்கலைக்கழகம், குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, மதுரை தியாகராசன் கல்லூரி ஆகியவற்றில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
'எனது சுயமரியாதை எனக்கு என்பதால், மற்றவரின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை. நான் இப்போதெல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டதாகப் பேசுகின்றனர். நல்லதுதானே! பாம்பு பல்லை இழக்காமல் இருந்தால் சரி, பெட்டிக்குள் இருப்பதால் பாம்பு புழுவாகிவிடாது. துள்ளித் துள்ளி குதிப்பதால் புழு பாம்பாக மாறுவதில்லை'' என்று கூறியிருந்தார் ஜெயகாந்தன்.
புதுமைப் பித்தன் 'ஜெமினி பிக்சர்ஸ்' நிறுவனத்துக்காக, ராஜமுக்தி, அவ்வையார் படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்தார். ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஒரு எழுத்தாளரிடம் திரைக்கதையை எழுதி வாங்கிக் கொண்டு, அதனையே படம் எடுப்பதில்லை. மாறாக, சிறந்த படைப்பாளர்களைக் கொண்டு ஒரே கதைக்கு பல்வேறு விதமாகத் திரைக்கதை, வசனம் எழுதவைத்து, பின்னர் அவற்றிலிருந்து சிறந்த அம்சத்தைத் தேர்ந்தெடுத்து திரைப்படங்களை உருவாக்கினார்.
சரித்திர நாவலாசிரியர் 'காலச்சக்கரம்' நரசிம்மா ஒருமுறை சொன்னது:
'என் அப்பா சித்திராலயா கோபு ஒருமுறை வாய்த் தவறுதலாக, என் அம்மா கமலா சடகோபனை 'டி' என்று கூறிவிட்டார்.
என் அம்மா கோபத்துடன் , 'பெண்களை இப்படி மரியாதை குறைவாக அழைக்கலாமா?' என்றார்.
உடனே என் அப்பா, 'நான் கூப்பிட்டது மரியாதை குறைவாக அல்ல; அது டியர் என்பதன் சுருக்கம்தான்' என சமாளித்தார்.
உடனே என் அம்மா, 'அப்படியா நான் உங்களை டா என்று கூப்பிடுவேன்' என்றார்.
அதற்கு என் அப்பா, 'அது மரியாதை குறைவாயிற்றே' என்றபோது, என் அம்மா, 'அது டார்லிங் என்பதன் சுருக்கம்தான்' என்றாரே பார்க்கலாம்'.