
வாழ்வதற்கான போராட்டம் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. ஏதாவது ஒரு சிக்கல் ஏற்படும்போது, மனித இனம் அதிலிருந்து தன்னை விடுவித்துகொள்ள எத்தனிக்கிறது.
அப்படி தனியாகப் போராடி உலகின் வெவ்வேறு இடங்களில் சிக்குண்டவர்களின் கதைகளைக் கொண்டு, ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான படங்களைப் பார்க்கலாம்:
127 ஹவர்ஸ்
'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்குப் பின்னர் டேனி பாய்ல் இயக்கிய இந்தத் திரைப்படத்தின் தலைப்பே கதை சொல்லிவிடும். பெரிய பாறைச் சரிவுகளில் சைக்கிளிங் மேற்கொள்ளும் நாயகன் ஒரு சிறிய விபத்தில் பாறைகளுக்கு இடையே கை மாட்டிக் கொண்டு, 127 மணி நேரம் போராடி எப்படித் தப்பித்தார் என்பதுதான் கதை.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ஸ்பைடர் மேன் சீரிஸில் ஹாரியாக நடித்த ஜேம்ஸ் ஃபிராங்கோ கதாநாயகனாக நடித்தார்.
ஆப்டர் எர்த்
வில் ஸ்மித் , ஜேடன் ஸ்மித் இருவரும் நடித்திருந்தாலும், களத்தில் ஜேடன் மட்டுமே போராடுகிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகான பூமி எப்படி இருக்கும்? மிகவும் மோசமான காற்று மண்டலமும், வித்தியாசமான உயிரினங்களுக்கும் இடையே மாட்டிக் கொள்கின்றனர் மகனும், அப்பாவும்.
அவர்கள் வேறு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்துக்குச் செல்லும் வழியில் நடக்கும் விபத்தில் தந்தைக்கு காலில் முறிவு ஏற்பட ஒற்றை ஆளாய் தங்கள் கிரகத்துக்குத் தகவல் அனுப்பும் பணி மகனுக்கு. சீரியலின் தாக்கத்தில் இதற்கு கதை எழுதியவர் வில் ஸ்மித் . இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன். விமர்சகர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதுவும் சர்வைவிங் சினிமா தான்.
லைப்ஆஃப் பை
புதுச்சேரியைச் சேர்ந்த குடும்பம் தாங்கள் நடத்தும் மிருகக் காட்சிசாலையிலிருந்து மிருகங்களை கனடாவுக்கு கப்பல் வழியாக கொண்டு செல்கின்றனர். அப்போது நேரும் விபத்தில் பை என்ற சிறுவனும், ரிச்சர்ட் பார்க்கர் என்னும் புலியும், இன்னும் சில விலங்குகளும் சிறிய படகில் தப்பிக்கின்றனர்.
புலியுடன் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட சிறுவன் எப்படி பிழைத்தான், புலி என்ன ஆனது என்பதுதான் படம். ஆங் லீ இயக்கிய இந்த திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பையும், விருதுகளையும் குவித்தது. கடவுள் நம்பிக்கையையும், உயிர் வாழ ஏங்கும் சிரத்தையையும் ஒரு சேரப் பேசியது. நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட லைஃப் ஆஃப் பை சர்வைவல் சினிமாவில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது
தி மார்ட்டியன்
உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ரிட்லி ஸ்காட் எழுபத்தெட்டு வயதில் இயக்கிய திரைப்படம். பூமியில் போராடியது போதும் என்று ஒட்டு மொத்தமாய் செவ்வாய் கிரகத்தில் போராடும் கதைக்களம். விண்வெளி வீரரான நாயகன் ஒரு புயலில் சிக்க, அவர் இறந்து விட்டதாய் எண்ணிய அவரின் குழுவினர் பூமிக்குத் திரும்புகின்றனர்.
தனியாளாய் சிக்கிக் கொண்ட நாயகன் ஒரு வழியாக பூமிக்கு தகவல் அனுப்ப, மீண்டும் அவரைக் காப்பாற்ற நிகழும் போராட்டம் தான் கதை. செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் காட்சிகளெல்லாம் படத்தில் உண்டு. இப்படி வெவ்வேறு சவால்களிலிருந்து உயிர் வாழ்வதற்கான போராட்டம் நம்மை இன்னும் செதுக்குகிறது. அனுபவமாய் ஆழப் பதிந்து நம்மை இன்னும் மனிதநேயத்துடன் வைத்திருக்கிறது.
ஐ எம் லெஜன்ட்
புற்றுநோய்க்காகத் தயாரிக்கப்பட்ட வைரஸ் தவறாகச் செயல்பட்டு நகரத்தின் முக்கால்வாசி மக்களை இறக்கச் செய்கிறது. எஞ்சி இருப்பவர்களும் ரத்தக் காட்டேரிகள் போன்று மாறித் திரியும் அந்த நகரத்தில் பாதிக்காமல் இருப்பது ஒரு ராணுவ வைரலாஜிஸ்ட்டும் (வைரஸ் ஆராய்ச்சியாளர்) அவர் வளர்க்கும் நாயும்தான்.
அங்கு சுற்றிக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடும் அவர் வைரஸை அழிக்க வழி கண்டுபிடித்தாரா என்பது மீதிக் கதை. வில் ஸ்மித் நடித்த இத்திரைப்படத்தில் அவர் கூடவே இருக்கும் சாம் என்கிற நாய் உடனான அவரது நேசம் நம்மை உறைய வைக்கும்.
இப்படி தனியாளாய் போராடக்கூடிய கதைக்களத்தில் அவர்களுக்குத் துணையாக வரும் கதாபாத்திரங்களின் ஸ்கெட்ச் எப்போதுமே மிக முக்கியமானது. அது நிறைவேறிய படம் ஐ எம் லெஜண்ட். இந்த படத்தின் இயக்குநர் ஃபிரான்ஸிஸ் லாரன்ஸ்.
பரீய்டு
முழுக்க முழுக்க ஒரு சவப் பெட்டிக்குள் உருவான திரைப்படம். ஒரே கதாபாத்திரம். நாயகன் கண் விழித்தபோது, தான் ஒரு சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணரும்போது படம் தொடங்குகிறது.
பெட்டிக்குள் லைட்டர், டார்ச், குட்டி செல்போன் இவை மட்டும் உடனிருக்க அவர் எதிர்கொள்ளும் போராட்டம், எந்த முடிவுக்கு இட்டுச் செல்கிறது என்பதை சலிப்புத் தட்டாமல் சொல்லியிருப்பார்கள். முழுக்க நம்மை உறைய வைக்கும் இந்தப் படத்தில் ரே ரெனால்ட்ஸ் நடித்திருக்கிறார்.
டெட்பூல், க்ரீன் லேண்டர்ன் என்று சூப்பர் ஹீரோவாக நடித்த ரெனால்ட்ஸþக்கு இது சவால் விட்ட கதைக்களம். இயக்குநர் ராட் ரிகோ.
கேஸ்ட் அவே
ராபர்ட் செமிக்ஸ் இயக்கி, 2000- ஆம் ஆண்டில் வெளிவந்த சர்வைவிங் சினிமா. விமான விபத்தில் சிக்கி யாருமில்லாத தீவை அடையும் மனிதன் நான்கு ஆண்டுகள் ஒற்றை ஆளாய் போராடும் கதை.
டாம் ஹேங்ஸ் நடிப்பில் இந்தப் படம் தொட்ட உணர்வுகள் இணையில்லாதவை. தீவை அடையும்போது இருந்த உருவத்துக்கும், நான்கு ஆண்டுகளில் மெலிந்து ஒல்லிக் குச்சியாய் மாறிய உருவத்துக்கும் உள்ள வித்தியாசம், டாம் ஹேங்ஸின் உழைப்பை பறைசாற்றும்.
ஒரு கால்பந்துக்கும் முக்கியமான கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது. நிச்சயமாய் நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும் திரைப்படம்.