சென்னையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மஹ்மூத் அக்ரமுக்கு 400 மொழிகளில் எழுதவும், படிக்கவும் தெரிவதோடு தட்டச்சு செய்யும் திறமை இருக்கிறது. அத்துடன் 46 மொழிகளில் சரளமாகப் பேசுகிறார்.
பன்மொழிகளில் திறமைகள் வாய்ந்த மஹ்மூத் அக்ரமிடம் பேசியபோது:
'எனது அப்பா முனைவர் சா.சி.ஷிப்லீ மொழிப்பிரியர் பணிநிமித்தமாக, இஸ்ரேல், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் சென்றிருந்தபோது, அந்த நாடுகளின் மொழிகள் தெரியாததால் கஷ்டப்பட்டார். பின்னர், ஹீப்ரு, ஸ்பானிஷ் உள்ளிட்ட 16 மொழிகளைக் கற்றார்.
அம்மா ஷி.மொ.ஆமினாள் பேகம் என்னைக் கருத்தரித்தபோது, நேரம் கிடைக்கும்போது மொழிகளைப் பற்றி அம்மாவிடம் அப்பா பேசியுள்ளார். அதனால் மொழிகள் மீதான ஆர்வம் கருவிலேயே தோன்றியிருக்க வேண்டும்.
எனது மொழிப் பயணம் நான்கு வயதில் தொடங்கியதாக அப்பா சொல்வார். எனக்கு தமிழ், ஆங்கில எழுத்துகளை எனது பெற்றோர் கற்பிக்கத் தொடங்கினர், ஆறு நாள்களில் ஆங்கில எழுத்துகளில் தேர்ச்சி பெற்றதாகவும், மூன்று வாரங்களில் தமிழின் 247 எழுத்துகளைக் கற்றதாகவும் எனது பெற்றோர் கூறுவர்.
தமிழின் பழைய எழுத்துகளையும் அப்பா அறிமுகப்படுத்தினார். 'ஓம்னிக்ளோட்'ஆன்லைன் கலைக்களஞ்சியத்தின் உதவியுடன் வெவ்வேறு மொழிகளைக் கற்கத் தொடங்கினேன். அப்போதே தட்டச்சு செய்யும் முறையையும் கற்றேன். பஞ்சாபில் உள்ள ஒரு 'உலக சாதனை அமைப்பு' என்னை சாதனை நிகழ்த்த அழைத்தது, அதை நான் வெற்றிகரமாக முடித்தேன். இதுவே எனக்கான முதல் அங்கீகாரம்.
எனது பத்தாம் வயதில், இந்திய தேசியக் கீதத்தை ஒரு மணி நேரத்துக்குள் இருபது மொழிகளில் எழுதி, எனது இரண்டாவது சாதனையை நிகழ்த்தினேன். 12-ஆம் வயதில் 400 மொழிகளை வாசிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யம் திறமையையும் பெற்றேன்.
ஜெர்மனியில் 70 மொழியியல் நிபுணர்களுக்கிடையே போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று நிமிடங்களுக்குள் ஒரு வாக்கியத்தை அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பதுடன் தட்டச்சு செய்யவும் வேண்டும். மூன்று நிமிடத்துக்குள் 24 மொழிகளில் மொழிபெயர்த்து தட்டச்சு செய்து கொடுத்து 'ஜெர்மனியின் எங் டேலண்ட்' விருதைப் பெற்றேன். இது எனது மூன்றாவது சாதனையாகும்.
நான் மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் பள்ளியில் சேர விரும்பி, இஸ்ரேலில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்லைனில் படித்து, அரபு, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஹீப்ரு போன்ற முக்கிய மொழிகளைக் கற்றேன்.
திறந்தவெளிப் பள்ளியில் வழக்கமான பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள டான்யூப் இன்டர்நேஷனல் பள்ளியில் உதவித்தொகையுடன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தேன். எனது வகுப்பில் 39 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இருந்தனர். எனது வகுப்புத் தோழர்களுடன் பேசிப் பழகி, அவர்களின் மொழிகளைக் கற்றேன்.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் மில்டன் கெய்ன்ஸில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் மொழியியல், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் அனிமேஷனில் இளங்கலைப் பட்டத்தை முடித்துள்ளேன்.
படிப்பதையும் எழுதுவதையும் தாண்டி ஒரு மொழியைப் பேசுவதற்கு பேச்சு வழக்கு, உச்சரிப்பைப் புரிந்துகொள்வது அவசியம். அதற்காக ரஷ்ய, டேனிஷ், அரபி மொழிகளில் காணொளிகளைப் பார்க்கிறேன். எனக்கு பல மொழிகள் தெரிந்தாலும் பிடித்தமான மொழி தமிழ்தான். இரண்டாவது பிடித்த மொழி ஜப்பானிய மொழி. ஜப்பானிய மொழியைக் கற்பது மிகவும் எளிது. அதன் இலக்கணமும் உச்சரிப்பும் தமிழை ஒத்திருக்கிறது.
செக், ஃபின்னிஷ், வியத்நாமிய மொழிகள் கற்க சிரமமாக இருந்தன. ஆங்கிலம் அறிந்தாலே போதுமானது என்று தமிழர்கள் நம்புகிறார்கள். பல மொழிகளைக் கற்க மக்கள் முன்வரவேண்டும்.
சென்னை ஷெனாய் நகரில் 'அக்ரம் உலகளாவிய மொழிகள்' நிறுவனத்தை எனது அப்பா 2016-இல் நிறுவி, பல மொழிகளை பயிற்றுவிக்கிறார். இந்தியா, வளைகுடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துகிறார். நானும் வகுப்புகளை நடத்துகிறேன்.
இன்னொருவருடன் நாம் பேசும்போது அவர்களுடைய தாய்மொழியில் பேசினால், அவர்கள் முழுமையாக பதில் அளிப்பார். அதற்கு பல மொழிகளைத் தெரிந்து வைக்க வேண்டும்.
தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களான திருக்குறள், தொல்காப்பியத்தை இயன்ற அளவு மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது எனது லட்சியம். ஐம்பது மொழி பேசுபவர்கள் மட்டுமே தற்போது திருக்குறளை அணுக முடியும். உலகப் பார்வையாளர்கள் தமிழின் செழுமையான பாரம்பரியத்தை அறிய வேண்டும் என்ற திசையில் பயணிக்கிறேன்' என்கிறார் மஹ்மூத் அக்ரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.