கடலில் சாகசப் பயணம்...

பெங்களூரில் பிறந்து, லண்டனில் வாழும் முப்பத்து நான்கு வயதான அனன்யா பிரசாத், உலகின் கடினமான அட்லாண்டிக் பெருங்கடலைப் படகில் துழாவிக் கடந்த 'முதல் இந்திய பெண்மணி' என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அனன்யா பிரசாத்
அனன்யா பிரசாத்
Published on
Updated on
2 min read

பெங்களூரில் பிறந்து, லண்டனில் வாழும் முப்பத்து நான்கு வயதான அனன்யா பிரசாத், உலகின் கடினமான அட்லாண்டிக் பெருங்கடலைப் படகில் துழாவிக் கடந்த 'முதல் இந்திய பெண்மணி' என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்காக இவர் எடுத்துகொண்ட நேரம் 52 நாள்கள், 5 மணி, 44 நிமிடங்கள்.

ஸ்பெயின் நாட்டின் உள்ள கேனரி தீவின் 'லா கோமேரா'விலிருந்து படகை ஓட்டி, கரீபியன் தீவுகளில் உள்ள ஆன்டிகுவா வரையிலான சுமார் 3 ஆயிரம் கி.மீ. தொலைவைக் கடப்பதுதான் போட்டி.

2024 டிசம்பர் 11-இல் ஸ்பெயின் தீவைவிட்டு 25 அடி நீள படகைத் துடுப்பினால் செலுத்தி, 2025 பிப்ரவரி 1-இல் கரீபியன் தீவின் ஆன்டிகுவா வந்தடைந்தார் அனன்யா. அனன்யா தனிப் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மருத்துவர்களான இவரது பெற்றோர் ஷிவா பிரசாத், பூர்ணிமா பிரசாத் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தபோது அனன்யாவுக்கு வயது ஆறு. அங்கே பள்ளிப் படிப்பை முடித்து, வழக்குரைஞராகியுள்ளார். இவர் பிரபல கன்னட கவிஞர் ஜி.எஸ். சிவருத்ரப்பாவின் பேத்தி. தனது சாகசக் கடல் பயணம் குறித்து அனன்யா கூறியது:

'படகை செலுத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். அது உடற்பயிற்சியும் கூட.

அட்லாண்டிக் பெருங்கடலைப் படகைத் துடுப்புகளால் துழாவிக் கடக்கும் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இந்தப் போட்டி குறித்து 2018-இல் நான் அறிந்தேன். பந்தயத்துக்குத் தகுதி அடைய நான் மூன்றரை ஆண்டுகள் துடுப்பைத் துளாவும் பயிற்சியை மேற்கொண்டேன். மிகப் பெரிய அலைகள் எழும் கடலுக்குப் பொருத்தமாக என்னைத் தயார்படுத்திக் கொள்ள தொழில்நுட்ப, உடல், மன உறுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டேன்.

படகுப் பயணத்தின்போது , திசையை தீர்மானிக்கும் சுக்கான் உடைந்துவிட்டது. கடலில் குதித்து உடைந்த சுக்கானை மாற்றி, புதிய சுக்கானைப் பொருத்தினேன். ஆழ்கடலில் படகுடன் நீந்திக் கொண்டு சுக்கானைப் பொருத்துவது சிரமமான விஷயம்.

கடலில் சிப்பி இனங்கள், பூச்சிகள் படகின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொள்ளும். அதனால் படகின் வேகம் குறையும். அவற்றையும் கடலில் மூழ்கி சுத்தம் செய்ய வேண்டும். இந்த வேலைகளை படகு காற்றின் வேகத்தில் பயணிக்கும்போது, ஒன்றுபோல் செய்யவேண்டும்.

எனது 52 பயண நாள்களில் கடலில் திமிங்கலங்கள், குட்டி திமிங்கலங்கள், கடல் பறவைகள், பறக்கும் மீன்கள் அனைத்தையும் பார்த்தேன். ஒரு நாளில், 12 மணி நேரம் படகோட்டினேன். இடையில் சிறிது ஆய்வுகளை மேற்கொண்டேன். இரவில் ஐந்து முதல் ஆறு மணி நேரம் தூங்குவேன். தொழில்நுட்பம், வானிலை, சமூக ஊடக குழுக்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன், அதனால் கடலில் படகுடன் தனியாக இருப்பது போல் உணரவில்லை. ப யமாகவும் இருக்கவில்லை.

இந்தப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் படகுகள் பாதுகாப்பான கடல் பயணத்துக்காகவே சிறப்பாக உருவாக்கப்படுகின்றன. பயணத்தின்போது பசியை சமாளிக்க, சாக்லேட்டுகள், சிப்ஸ்கள் போன்றவை உண்டு. 'ரெடி டு குக்' உணவுவகைகளும் உண்டு.

அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடியது புது அனுபவம். கேக், தந்தனர். விஷேச அலைபேசியில் பெற்றோரைத் தொடர்பு கொண்டேன். படகு அலைகளினால் தூக்கி போடப்பட்டதால் ஒரு அலைபேசி கடலுக்குள் கைதவறி விழுந்துவிட்டது. இது பெரிய விஷயமல்ல.

ஆன்டிகுவாவை அடைந்து மூன்று நாள்கள் ஓய்வு எடுத்தவுடன் லண்டன் வந்து சேர்ந்தேன்' என்கிறார் அனன்யா பிரசாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com