நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட மேலூர் கிராமத்தைச் சேர்ந்த இருபத்து இரண்டு வயதான ரியா பூர்வி, நிகழாண்டில் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தேசிய மகளிர் தொழில்முறை கோல்ஃப் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றியை தமிழகத்திலேயே முதன்முறையாகப் பெற்ற பெண் இவர்.
படகர் இனத்தைச் சேர்ந்த ரியா பூர்வியின் தந்தை சரவணன், விமானப் படையில் ஓய்வுபெற்ற குரூப் கேப்டன். இவரது தாய் சுகுணா.
கோல்ஃப் பயிற்சிக்காகவே தற்போது கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட கோலாரில் வசித்து வருகின்றனர். நீலகிரி சிட்டிசன் ஃபோரம் அமைப்பின் சார்பில் உதகையில் இவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்த ரியாவிடம் பேசியபோது:
'முதன்முதலில் எனது தாயாருடன் லக்னெள கோல்ஃப் மைதானத்துக்கு ஐந்தரை வயதில் சென்றிருந்தேன். அடுத்த 6 மாதங்களுக்குள்ளாகவே ஆறு வயதிற்குள்பட்டோருக்கான பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றேன். அதையடுத்து கர்நாடக மாநிலம் மைசூரில் இந்திய கோல்ஃப் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட தென் மண்டல அளவிலான மகளிருக்கான போட்டியிலும் தனது வெற்றியைப் பதிவு செய்தேன்.
2021- ஆம் ஆண்டிலிருந்து தொழில் முறை வீராங்கனையாக மாறினார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டேன்.
நாட்டின் பல்வேறு கோல்ஃப் மைதானங்களிலும் விளையாடி இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட வெற்றிகளைப் பதிவு செய்துள்ளேன். இந்த விளையாட்டுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் பெரும்பாலானவர்கள் படிப்பைத் தொடர்வதில்லை.
ஆனால், நான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், ஆன்லைனில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து வருகிறேன். ஆண்டுக்கு சராசரியாக 15 போட்டிகளில் பங்கேற்கிறேன். கோல்ஃ ப் விளையாட்டில் பெண்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது.
தொழில்முறை போட்டியாளர்களுக்கான பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் நான் இருப்பது பெருமையளிப்பதாகும். மிகவும் மதிப்புமிக்க இந்த விளையாட்டுக்கு அதிக அளவில் செலவும் ஆகிறது.
தமிழக அரசு என்னை ஊக்கப்படுத்தினால் என்னால் மேலும் பல சாதனைகளைப் படைக்க முடியும். எதிர்வரும் மார்ச் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல இருக்கிறேன்' என்கிறார் ரியா பூர்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.