காமாட்சி பாட்டி வீடு
அ.கௌரிசங்கர்
மூன்று நாள்கள் கொட்டி தீர்த்த மழை மேலும், மேலும் தன்னுடைய வீரியத்தைக் காட்டி கொண்டிருந்தது. இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை ஓரம் கட்டிவிட்டு, உள்ளூர் ரயில்களில் செல்வதே உத்தமம் என்ற முடிவுக்கு பலரும் வந்துவிட்டனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் இருந்து ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து, நான் பரங்கிமலை வரவேண்டும். பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் வரை உள்ளூர் ரயிலில் சென்று, அங்கிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலம், ராயப்பேட்டை சென்றால், நான் வேலை பார்க்கும் வங்கிக் கிளை வந்துவிடும்.
சிறு நகரங்களில் உள்ள கிளைகளில் சில வருடங்கள், கிராமங்களில் உள்ள கிளைகளில் சில வருடங்கள் என்று 25 வருடங்கள் வேலை பார்த்து முடித்தவுடன், கிடைத்த பதவி உயர்வின் அடிப்படையில் சென்னை மாநகரத்தில் ஒரு பெரிய கிளையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெறும் வரை, அடுத்த 15 வருடங்களுக்கு நகரங்கள், பெரு நகரங்களில் மட்டுமே வேலை பார்த்தால் போதும்.
வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்கு தவிர்க்க முடியாதது இடமாறுதல்தான். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் பணியிடமாறுதல் என்றால், வாடகைக்கு வீடு கிடைப்பதற்கு மட்டுமே சிரமம். பிற வசதிகள் எளிதில் கிடைப்பதால், மற்றவை சுலபமாக மாறிவிடும். பேருந்து வசதிகள் இருக்கும். கடைகள் இருக்கும். குறிப்பாக, குழந்தைகள் படிப்பதற்கு நல்ல பள்ளிகள், கல்லூரிகள் கிடைக்கும். இருந்தாலும், மூன்று வருடங்கள் அல்லது நான்கு வருடங்கள் அங்கு இருந்து விட்டால், கண்டிப்பாக வேறு ஒரு இடத்துக்கு மாறுதல் வந்து விடும்.
மூன்றாவது வருடம் ஆரம்பத்திலேயே மனதளவில் இடமாற்றத்துக்குத் தயார் செய்து கொள்ளுவது என்பது தேவையானதாகிவிட்டது. ஆரம்பத்தில் கடினமாகத் தெரிந்தது, நாளடைவில் பழகிவிட்டது. அப்படி இட மாறுதல் வரும்பட்சத்தில், பல நேரங்களில் குழந்தைகளின் கல்வியை மனதில் கொண்டு, கணவன்மார்கள் மட்டுமே தனியாக புது இடங்களில் தங்கள் வாழ்க்கையை அமைத்துகொள்ள பழகிக் கொள்ளுவார்கள். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்.
அன்றைய தினம் வேலை முடிந்து, மாலை ஆறு மணியளவில், வழக்கம் போல ஷேர் ஆட்டோ பிடித்து, எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன் நான். பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கிய பின்னர், ஆதம்பாக்கத்துக்குச் செல்லவேண்டும். ஒரு மணி நேரத்துக்குள் வீட்டுக்குச் சென்று விடலாம்.
ரயில் நிலையத்தில் கூட்டம். பணிநிமித்தமாக, அலுவலகங்களுக்கு வந்து பின்னர் வீட்டுக்குத் திரும்பும் பல தரப்பினர் தாங்கள் ஏற வேண்டிய ரயில்களுக்காக 'வழி மேல் விழி' வைத்து காத்திருந்தனர்.
சென்னையில் காலை நேரங்களில் வெளியிடங்களில் இருந்து மாநகரத்தின் மையப் பகுதிக்கு ஊழியர்கள் வருவதால், உள்ளூர் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். அந்த அளவில் மாலை நேரங்களில் அலுவலகங்களில் இருந்து தங்களுடைய வீடுகளுக்கும் இருப்பிடங்களுக்கும் நகரத்தின் மையப் பகுதிகளில் இருந்து திரும்பி செல்பவர்கள் இருப்பதால், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். எதிர் தரப்பில் வரும் ரயில்களின் பெட்டிகள் பல காலியாக இருக்கும்.
ரயில் நிலையத்தில், பெஞ்சு ஒன்றில் அமரப் போன நான், பெஞ்சில் தலை சாய்த்து உறங்கியும் உறங்காமலும் முனகிக் கொண்டிருந்த மூதாட்டியைப் பார்க்க நேர்ந்தது. அவருடைய வாயில் இருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. முகம் சரியாக தெரியாத நிலையில், ஓரமாக அமர்ந்த நான், உள்ளுணர்வு தூண்ட அந்த மூதாட்டியை கூர்ந்து பார்க்கவும் தான் எனக்கு தெரிந்தது - இவரை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று.
மூதாட்டியை பற்றிய நினைவை புறந்தள்ளிவிட்டு, நடைமேடையில் வந்து நின்ற ரயிலில் ஏற முயன்ற நான், உள்ளுணர்வு தடுக்க, அந்த ரயிலை தவிர்த்தேன். இதுபோன்று இரண்டு ரயில்களை தவறவிட்டேன். அவரை இன்னார் என்று அறியாமல், ரயிலில் ஏறுவதில்லை என்று இறுதியில் முடிவு செய்த நான், பழைய நினைவுகளை மெதுவாக கிளறி பார்த்தேன். சட்டென்று பொறி தட்டியது. அந்த மூதாட்டி - 'காமாட்சி பாட்டி'.
அப்போது நான் வேலை பார்த்து கொண்டிருந்த வங்கிக் கிளை அமைந்திருந்த இடம் ஒரு சிறிய கிராமம். கடைகள் உண்டு. ஹோட்டல்கள் இரண்டு மட்டுமே உண்டு. ஒன்று சைவம் - இன்னொன்று அசைவம். ருசியை மறந்துவிட்டு அவர்கள் தரும் உணவை உண்ணும் தைரியம் இருந்தால் மட்டுமே அந்த ஹோட்டல்களுக்கு செல்ல வேண்டும்.
திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், ஸ்ரீவைகுண்டம் நகரத்துக்குச் செல்வதற்கு முன்பாக இடதுபுறம் திரும்பி எட்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் வந்து விடும் நான் வேலை பார்த்த ஊர் - தீத்தாம்பட்டி. இந்த சிறிய கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள் இரண்டும், கூட்டுறவு வங்கிக் கிளை ஒன்றும் இருந்தன. சிறிய மருத்துவமனை ஒன்றும் இருந்தது.
இங்கு வேலை பார்க்கும் என்னைப் போன்ற தனியாக வசிக்கும் ஊழியர்களுக்கு உணவு தரும் இடம் அந்த ஹோட்டல்கள் மட்டும்தான். மிஞ்சிப் போனால், 300 வீடுகள் இருக்கும். ஒரு சிறிய ஆரம்பப் பள்ளி மட்டுமே உண்டு. பெரிய பள்ளிக்கூடம் என்றால், ஸ்ரீவைகுண்டம் செல்ல வேண்டும். இங்கு பல ஹோட்டல்கள், கடைகள் உண்டு. ஸ்ரீவைகுண்டத்தில் தங்கி என்னுடைய கிளைக்கு தினமும் செல்ல முடிந்தாலும், வேலை பளுவின் காரணமாக தீத்தாம்பட்டியிலேயே தங்கிவிட்டேன்.
இதுபோன்ற சிறிய கிராமங்களில் மழை வந்துவிட்டால், அங்கு தங்கியிருக்கும் மக்கள் படும் அவதிகளைச் சொல்லிவிட முடியாது. மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும், வங்கிக் கிளையை சரியாக பத்து மணிக்குள் திறந்து வைத்துவிடவேண்டும். சிறிய சாலைகளில் பெருக்கெடுத்தோடும் தண்ணீரில், இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது என்பது வம்பை விலைக்கு வாங்குவது போலத்தான். நான் தங்கியிருந்தது ஒரு வீட்டின் பின் அடுக்கில். வீட்டின் முன்புறம் அதன் உரிமையாளர் இருந்தார். காலியாக இருந்த பின்கட்டில் நான் தங்கியிருந்தேன். இரண்டு அறைகள், ஒரு கழிவறை.
தங்குவதற்கு சிரமங்கள் இல்லை. வயிற்றுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்தான் சிக்கல் இருந்தது. அப்போது தான், வங்கியில் வேலை பார்த்த பியூன் தங்கராஜ் ஒரு வீட்டுக்கு கூட்டி சென்றான். வீடு இரண்டு தெருக்கள் தள்ளி இருந்தது. ஐந்து நிமிடங்களில் சென்று விடலாம்.
மிகவும் சிறிய வீடு. ஒற்றை அறை மட்டுமே. அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி. இட்லி போன்ற உணவு பதார்த்தங்களை விற்று கொண்டிருந்தார். விலையும் மிகவும் குறைவு. கலப்படம் இல்லாத உணவு. ஒரு நாளைக்கு 25 பேர் வரை அங்கு வந்து உண்டு விட்டு சென்றனர். மதியம் மிதமான உணவு. பல நகரங்களில், கிராமங்களில் வேலை பார்த்து பழகிக்கொண்டதால், இங்கு வந்து உண்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை.
அப்படியே காலமும் கடந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் காமாட்சி பாட்டி தந்த உணவே என்னுடைய வயிற்றை நிரப்பியது. அந்த இரண்டு வருடங்களில், மூன்று முறை காமாட்சி பாட்டி, தூத்துக்குடியில் வசித்து வந்த அவருடைய மகளைப் பார்ப்பதற்கு சென்று வந்தார். ஒருமுறை சென்றால், குறைந்தபட்சம் பத்து நாள்கள் வரை அங்கிருந்து விட்டு வருவது அவர் வழக்கம். இட்லி விற்று, உணவு பரிமாறி, சேர்த்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான ரூபாயை மகளிடம் தந்துவிட்டு, பேரன், பேத்திகளைப் பார்த்து விட்டு வருவது அவருக்கு அளவற்ற சந்தோஷத்தை அளிக்கும்.
திரும்பி வந்தவுடன் அவர் கையில் நூறு ரூபாய் இருந்தாலே அதிகம். அதை பற்றி அவர் கவலைப்படவேயில்லை. அவருடைய மகள், பேரன், பேத்திகள் தான் அவருடைய உலகம். அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றாலே, பாட்டியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். அவர் தூத்துக்குடி செல்லும் நாள்களில் கிராமத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு, பலவிதமான வயிற்று பிரச்னைகளுக்கு ஆளானவர்கள் அதிகம். தனது குடும்பத்தினரை பார்க்கச் செல்லும் ஒருவரை தார்மிக முறையில் தடை செய்வது சரியல்ல என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது.
எப்படியோ இரண்டு வருடங்கள் கழிந்தவுடன் இட மாறுதல் அடிப்படையில், நான் கோவை அருகில் உள்ள உடுமலைப்பேட்டை கிளைக்கு வந்து சேர்ந்தேன். மூன்று வருடங்கள் அங்கு வேலை பார்த்தேன். பொள்ளாச்சி கிளையில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். பழனி கிளையில் மூன்று வருடங்கள் வேலை பார்த்தவுடன், பதவி உயர்வு கிடைத்து சென்னை கிளைக்கு வந்து சேர்ந்தேன். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழிந்து அன்று தான் நான் காமாட்சி பாட்டியை பார்த்தேன்.
எனக்கு மனதை என்னவோ செய்தது. காமாட்சி பாட்டிக்கு ஏதாவது செய்தாக வேண்டும். விறுவிறுவென்று, ரயில் நிலையத்தில் இருந்த ஒரு கடைக்கு சென்று ஒரு கப் தேநீர், ஒரு பாட்டில் தண்ணீர், ரொட்டி வாங்கிக் கொண்டு, மீண்டும் பாட்டியை அணுகினேன். முகத்தில் தண்ணீர் தெளித்தேன். கண்களைத் திறந்து என்னை பார்த்தார். நான் மெதுவாக என்னை பற்றி தெரிவித்தேன். அந்த நிலையிலும் என்னை தெரிந்துகொண்டு அவர் விசாரித்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
'தம்பி, நல்லா இருக்கீங்களா? உங்க வீட்டிலே எல்லோரும் நல்லா இருக்காங்களா?'
பாட்டியை மெதுவாக எழுப்பி பெஞ்சில் சாய வைத்தேன். அவரை அணைத்தவாறு ரொட்டியை சிறு துண்டுகளாகப் பிரித்து, அவருடைய வாயில் ஊட்டினேன். தேநீர் அருந்த தந்தேன். பத்து நிமிடங்கள் கழிந்தன. அவருடைய கண்களில் தெளிவு தெரிந்தது. அதன் பிறகு என்னை நன்றாக பார்த்து சிரித்தார். எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவர் எத்தனை நேரம் உண்ணாமல் இருந்திருக்கிறார் என்று என்னால் உணரமுடியவில்லை.
என்னுடைய மனம் மிகவும் வேதனித்தது. அதன் பிறகு நான் வேறு எதுவும் சிந்திக்கவேயில்லை. அவரை அணைத்துகொண்டு, ரயில் நிலையத்தின் வெளியே வந்தேன். அவரிடம் எதுவும் பேச முயற்சிக்கவேயில்லை. ஒரு ஆட்டோ அமர்த்தினேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டின் வாயிலில் ஆட்டோ நின்றவுடன், என்னுடன் இறங்கிய பாட்டியைக் கண்டவுடன், மனைவியில் முகத்தில் கேள்விக்குறிகள்; மகன், மகள் முகங்களில் ஆச்சரியக் குறிகள், ஒரு சந்தோஷ களை. அம்மா வழியிலும், அப்பா வழியிலும் பாட்டி, தாத்தா போன்றவர்களின் பாசத்தைப் பெற முடியாமல் இத்தனை வருடங்கள்
தவித்துகொண்டிருந்த அவர்களுக்கு பாலைவனத்தில் அலைந்து திரிந்தவர்கள் தண்ணீர் நிரம்பிய குடங்களைப் பார்த்தது போல முகங்களில் அளவு கடந்த சந்தோஷம்.
'இப்போது எதுவும் கேட்கவேண்டாம்' என்று சாடையாக மனைவியிடம் தெரிவித்த நான், காமாட்சி பாட்டியை வீட்டில் இருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்று படுக்கவைத்தேன். எத்தனை நாள் களைப்போ தெரியவில்லை. அடுத்த மூன்று நிமிடங்களில் அவர் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்று விட்டார்.
இதற்கிடையில் மனைவி, குழந்தைகளிடம், 'தீத்தாம்பட்டி கிராமத்தில் நான் வேலை பார்த்தது; பாட்டி வீட்டில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உணவு உண்டது; மூன்று முறை காய்ச்சலால் நான் அவதிப்பட்ட நேரத்தில், பாட்டி சுக்கு கஷாயம் வைத்து எனக்கு தந்தது; தலைக்கு ஒத்தடம் கொடுத்தது; ரசம் வைத்து தந்தது; மொத்தத்தில் என்னை அவருடைய பிள்ளையாகவே நடத்தியது..' போன்ற விவரங்களை விலாவாரியாகச் சொன்னேன்.
விடிந்தவுடன், ஒரு நாள் விடுப்பு எடுத்துகொண்டு பாட்டியை தீத்தாம்பட்டி கிராமத்தில் விட்டு விட்டு வருவதாக சொன்னேன். அன்றைய தினமும் கழிந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிறிது தாமதமாக எழுந்தேன்; பல் தேய்த்துவிட்டு, அறையை நோட்டமிட்டவன், பாட்டி இல்லாதது கண்டு திடுக்கிட்டேன்.
எனக்கு ஒரு நிமிடம் தூக்கிவாரி போட்டது.
ஒரு வேளை மனைவி அவரை அனுப்பி விட்டாரோ? அல்லது பாட்டி மெதுவாக எழுந்து எவரிடமும் சொல்லாமல் கிளம்பி விட்டாரோ? மற்றவர்களுக்கு சிரமம் தரவேண்டாம் என்று நினைத்து விட்டாரோ? - இப்படி பலவிதமான சிந்தனைகள் மனதை கிளற, விறு விறுவென்று அடுக்களைக்கு சென்றேன்.
அங்கு காமாட்சி பாட்டி தோசை சுட்டு கொண்டிருந்தார். குளித்து, நெற்றியில் திருநீர் பூசி, குங்குமப் பொட்டு வைத்திருந்தார். மனைவி தந்த சேலை ஒன்றை கட்டியிருந்தார். மகனும், மகளும் சப்பு கொட்டி கொண்டு தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர். பாட்டியின் முகத்தில் தெரிந்த புன்முறுவல், என்னை ஒரு நிமிடம் திக்குமுக்காடச்செய்து விட்டது. அந்த புன்முறுவலும் அவர் தந்த உணவும்தானே, என்னை இரண்டு வருடங்கள் வளர்த்தது. மனைவி வாசல் கதவின் அருகில் அமர்ந்து கொண்டு, இவர்களை பார்த்து கொண்டிருந்தார்.
என்னை பார்த்த மனைவி சைகையால் வரச் சொல்ல, நானும், அவளும், மொட்டை மாடிக்கு சென்றோம். மனைவி பேச நான் கேட்டுக்கொண்டு இருந்தேன்.
'காமாட்சி பாட்டியை அவருடைய உறவினர் பிரபல ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை செய்யலாம் என்று சொல்லி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். பாட்டியிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் வாங்கிவிட்டு, இதோ வந்து விடுகிறேன் என்று சொன்ன உறவினர், வரவேயில்லை. சாப்பாடு, டீ, தண்ணீர் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. இப்படியாக காலை எட்டு மணியில் இருந்து அவர் ரயில் நிலையத்தில் பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்திருக்கிறார். மழை காரணமாக குளிர் காற்று; வயிற்று பசி; இவை எல்லாம் அவற்றை தாக்க, அவர் கிட்டத்தட்ட நினைவு இழக்கும் தருவாயில் தான் நீங்கள் அவரை பார்த்திருக்கிறீர்கள். பாட்டிக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. விடியற்காலையில் நான் படுக்கையை விட்டு எழுந்தவுடனே என்னிடம் ஒரு பழைய சேலையை கேட்டார். அடுத்த அரை மணி நேரத்தில், குளித்து ரெடியாகிவிட்டார். குளித்து விட்டு வந்தவர், நான் அடுக்களையில் வேலை பார்ப்பதை கண்டவுடன், அவராகவே முன்வந்து குழந்தைகளுக்கு தோசை சுடுவதற்கு தயாராகிவிட்டார். எனக்கு என்னமோ என்னுடைய அம்மாவின் நினைவு வந்து விட்டது. எனவே நான் அவரை தடை சொல்ல விரும்பவில்லை. குழந்தைகள் இதுவரை நூறு தடவைக்கும் மேல் அவரை 'பாட்டி', 'பாட்டி' என்று கூப்பிட்டு கூப்பிட்டு அன்பு தொல்லை தர ஆரம்பித்துவிட்டார்கள்.'
'உமா, நீ சொல்வது சரிதான். ரயில் நிலையத்தில் மனிதாபிமானம் இல்லாமல் அநாதையாக விட்டுச்சென்ற ஒருவரிடம் மீண்டும் இவரை ஒப்படைப்பது எனக்கு சரியாகப்படவில்லை. பாட்டியை பார்த்துக்கொள்ள எவரும் இல்லாத நிலையில் நமக்கு ஒரே வழி தான் இருக்கிறது. நாம் ஆதம்பாக்கத்தில் எனக்கு தெரிந்த ஒரு முதியவர் இல்லத்தில் அவரை சேர்த்து
விடலாம். நமக்கு பணத்துக்கு எந்தவிதமான குறையும் இல்லை. பராமரிப்பு செலவுக்கு பணமும் தந்துவிடலாம். அவரை இப்படியே விடுவது சரியாக படவேயில்லை.'
'எனக்கும் அது தான் சரியாகப்படுகிறது.'
மேற்கொண்டு பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் இருவரும் மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தோம்.
காலை உணவை முடித்த நான் அன்றைய தின நாளிதழை வாசித்துகொண்டிருந்தேன். மகனும், மகளும் மெதுவாக அருகில் வந்து என்னுடைய தோளில் கைகளை வைத்து பின்னிக் கொண்டனர். அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால், அவர்களிடம் கண்டிப்பாக கோரிக்கைகள் சில இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். நான் அமைதியாக இருந்தேன்.
'டாடி; பாட்டியை ஊரில் கொண்டு விட போறீங்களா?'
'அவுக ஊரில் பாட்டிக்கு யாரும் இல்லை இப்போது. இதே ஆதம்பாக்கத்தில் இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம். நாமும் தேவைப்படும்போது சென்று பார்த்து விட்டு வரலாம். தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற பண்டிகை நாள்களில் பாட்டியை நம்முடைய வீட்டுக்கு அழைத்து வரலாம்.'
'டாடி; உங்ககிட்ட ஒரு சின்ன கோரிக்கை. கண்டிப்பா நீங்க கோவிச்சிக்கக் கூடாது. எங்களுக்கு உங்க வழியிலே அல்லது அம்மா வழியிலே பாட்டி - தாத்தாக்கள் இல்லை. இவர்களின் அன்பும் பாசமும் எங்களுக்கு கிடைக்கவேயில்லை. எங்களுடைய பள்ளி நண்பர்கள் அவர்களுடைய பாட்டிகள், தாத்தாக்களை பற்றி கதைகள் சொல்லும்போது, எங்களுக்கு வருத்தமா இருக்கும். பாட்டி நம்ம கூடவே இருக்கட்டும் டாடி. அழகாக சமைக்கிறாங்க. நல்லவங்களா தெரியுது. நீங்க முடியாதுன்னு சொல்லவே கூடாது டாடி. உடம்புக்கு முடியாத அம்மாவுக்கும் ஒத்தாசையாக இருக்கும்.
கொஞ்சம் யோசிங்க டாடி.'
இரண்டு நிமிடங்கள் பேசாமல் இருந்தேன். குழந்தைகளின் ஏக்கத்தை கண்டிப்பாக பூர்த்தி செய்யவேண்டும் என்று ஒரு நிலையில் தோன்றிய அளவில், மனைவியை எப்படி சரிக்கட்டுவது என்பது கேள்விக்குறியாக இருந்தது. அந்த நேரத்துக்குச் சொல்லி வைக்கலாம் என்று சொல்லி வைத்தேன்.
'எனக்கு ஆட்சேபணை இல்லேங்கடா பசங்களா. அம்மாவை ஒரு வார்த்தை கேட்டுவிடலாம்.'
'தேவையில்லை டாடி; அம்மா சொல்லித்தான் நாங்க உங்க கிட்ட வந்தோம்.'
காமாட்சி பாட்டி எங்களுடனேயே வாழ ஆரம்பித்தார்.
வீட்டில் உள்ள நான்கு பேரின் ஒப்புதல் கிடைத்து இன்றோடு ஆறு வருடங்கள் ஆகின்றன. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, காமாட்சி பாட்டியே ஒரு கன்சல்டன்ட். சிறிது சிறிதாக பாட்டியின் சமையல் சாகசங்கள் பெண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. சமையல் சந்தேகங்கள் தீர்த்தல்; மருத்துவக் குறிப்புகள் தருதல் - இப்படி பல்வேறு சேவைகளை அவர் மிகவும் இலவசமாகவே தர ஆரம்பித்தார். அவருடைய வழிகாட்டுதலின்பேரில், ஊறுகாய் தயாரித்தல், இட்லி பொடி தயாரித்தல் என்று பெண்கள் சுய தொழில் முனைவோர்களாக மாற ஆரம்பித்தனர்.
இன்றைய தேதியில் - வாரம் இருமுறை - சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை - மதியம் ஒரு மணி நேரம் பாட்டியின் சமையல் வகுப்புகள்; கிட்டத்தட்ட முப்பது பெண்கள் கலந்து கொண்டு கலக்கிக் கொண்டு வருகிறார்கள். அதில் பத்து பெண்கள், மெனுக்களை பாட்டியிடம் இலவசமாகத் தெரிந்துகொண்டு, அவர்கள் வீடுகளில் செய்து பார்த்து, காணொளிகள் எடுத்து, யூடியூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தங்களுடைய சமையல் குறிப்புகளை பகிர்ந்துகொண்டு ஏராளமான பார்வையாளர்களை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டார்கள்.
பாட்டி வந்தவுடன் வீட்டின் கலகலப்புக்குப் பஞ்சமே இல்லை. எப்போதும் சிரித்த முகம்; அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம்; சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாசத்திற்கு பஞ்சம் இருந்தே வந்தது. அந்த பஞ்சத்தை தீர்க்கும் பஞ்சலோசனியாக திகழ ஆரம்பித்தார் காமாட்சி பாட்டி. ஆனால் இதில் எனக்கு தான் சிறிது மனவருத்தம்.
பாட்டியின் வருகைக்கு முன்பு, என்னுடைய வீட்டை, 'வங்கி மானேஜர் வீடு' என்று சொல்லிவந்த அக்கம்பக்கத்தினர், இப்போதெல்லாம், 'காமாட்சி பாட்டி வீடு' என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.