பழமை மாறாமல்..!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை, மாலை வேளைகளிலும், விடுமுறை நாள்கள், பண்டிகை தருணங்களிலும், தெருக்களில், கோயில் மைதானங்களில் ஒன்று கூடும் சிறுவர் , சிறுமியர் ஓடியாடி விளையாடியும், ஆடிப்பாடியும் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர்.
பழமை மாறாமல்..!
Published on
Updated on
3 min read

பெ.பெரியார்மன்னன்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை, மாலை வேளைகளிலும், விடுமுறை நாள்கள், பண்டிகை தருணங்களிலும், தெருக்களில், கோயில் மைதானங்களில் ஒன்று கூடும் சிறுவர் , சிறுமியர் ஓடியாடி விளையாடியும், ஆடிப்பாடியும் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர்.

மணல் வீடு கட்டுதல், கூரிய கற்களை நட்டு வைத்து கோயிலாகக் கருதி வழிபடுதல், கூட்டாஞ்சோறு சமைத்து உண்ணுதல் உள்ளிட்டவற்றில் கிராமப்புறக் குழந்தைகளுக்கு கூடுதல் ஈடுபாடும், மன மகிழ்வும் கிடைத்தது.

நவீன கணினி யுகத்தில் மின்சாதனப் பொருள்களில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை மூழ்கியுள்ளனர். இதனால், ஒரே தெருவில் வசிப்போரும்கூட ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத நிலையில் உள்ளனர். ஆனால் பழசை மாறாமல் இன்றும் புதுமைகளைப் போன்று கூடிவாழ்ந்து வழிபாடுகள், முறைகளைக் கடைப்பிடிக்கும் கிராமங்கள் சேலம் மாவட்டத்தில் இன்றும் உண்டு. சிலவற்றை அறிவோம்:

விளையாட்டு மாரியம்மன்

ஐம்பது ஆண்டுக்கு முன்னர் குழந்தைகள் விளையாடுவதற்கு கட்டிய கோயில், 'விளையாட்டு மாரியம்மன்' என்ற பெயரில் வழிபாட்டு தலமாகவே மாறிவிட்டது.

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோயில் அருகிலுள்ள நந்தவனத் தெருவில்தான் இந்தக் கோயில் உள்ளது.

இங்கு வசித்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தெருவில் ஒன்றுகூடி ஓடியாடி விளையாடி மகிழ்ந்து பொழுதுபோக்கியுள்ளனர். அப்போது இவர்கள் ஒன்றிணைந்து கூரிய கற்களைக் கொண்டு வந்து தெருவில் நட்டு வைத்து அம்மனாகக் கருதி, மஞ்சள் குங்குமிட்டு அலங்கரித்து பூஜைகளை நடத்தி விளையாடியுள்ளனர். விளையாட்டாக ஏற்படுத்திய இக்கோயிலை அப்புறப்படுத்த மனமில்லாத மக்கள் இந்த அம்மனுக்கு 'விளையாட்டு மாரியம்மன்' என்றே பெயர் சூட்டி வழிபடத் தொடங்கினர்.

விளையாடிய அப்போதைய குழந்தைகள், தற்போது முதியவர்களாவிட்ட நிலையிலும், ஆண்டுதோறும் ஒன்று கூடி பொங்கலிட்டு, வழிபாடு நடத்தி மகிழ்ந்து வருகின்றனர்.

கல்வெட்டுக்கு வழிபாடு

இருநூறு ஆண்டுகளுக்கு முன் சன்னாசி என்று அழைக்கப்பட்ட முனிவர்கள் சிலர், சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பகுதியில், முகாமிட்டு ஆன்மிகப் பரப்புரை செய்துள்ளனர்.

கிராமங்களில் தங்கி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவர்களாகவும் சேவை செய்துள்ளனர்.

சூரியன், சந்திரன், சிவலிங்கம், ஆன்மிகச் சக்கரம், எழுத்துகள், குறியீடுகள் பொறித்த கல்வெட்டுகளை இவர்கள் பல கிராமங்களில் நட்டு வைத்துள்ளார். இந்த கல்வெட்டுக்கள் 'சன்னாசி கல்வெட்டு', 'கோமாரி கல்வெட்டு' என்ற பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன.

சிங்கிபுரம், பழனியாபுரம், மத்துôர், தளவாய்பட்டி, சென்றாயன்பாளையம், படையாச்சியூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இந்தக் கல்வெட்டுகள் இன்றளவிலும் மக்கள் வழிபாட்டில் இருந்து வருகின்றன. பேளூரில் வாழப்பாடி பிரதான சாலையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால், வசிஷ்டநதிக்கரையில் உள்ள அங்காளம்மன் கோயில் எதிரேயுள்ள சன்னாசி கல்வெட்டை தரைத்தளத்தில் இருந்த திட்டு அமைத்து உயர்த்தி, அண்மையில் மறுபிரதிஷ்டை செய்தனர்.

'சன்னாசி கல்வெட்டை அகற்றி அருகிலேயே உயரமான திட்டு அமைத்து மறு பிரதிஷ்டை செய்து யாக வேள்வி பூஜைகளை நடத்தினோம். கால்நடைகளை அழைத்துச் சென்று முன்னோர்கள் வழியில் சிறப்பு பூஜைகளைச் செய்தோம்.

கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் இந்த கல்வெட்டிற்கு அழைத்துச் சென்று வழிபட்டால் நோய் நீங்கி கால்நடைகள் குணமாகுமென இன்றளவும் நம்பிக்கை தொடர்ந்து வருகிறது' என்கிறார் பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி.

வங்காநரி வழிபாடு

சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனுôர், மத்துôர், பெரியகிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில், மார்கழி மாதத்தில் பயிர்களை அறுவடை செய்தவுடன் தை மாதத்தில் புதிய சாகுபடி செய்வதற்கு முன், 'நரி' முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது.

ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று வங்காநரியைப் பிடித்து ஊர்வலமாக கிராமத்துக்குக் கொண்டு சென்று காலில் கயிறு கட்டி கோயில் மைதானத்தில் ஓடவிட்டு, பொங்கல் பண்டிகையை நிறைவு செய்வர். இந்த விநோத விழா வங்காநரி ஜல்லிக்கட்டு, நரியாட்டம் என்ற பெயரில் நூறு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வந்தது.

வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், நரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. இதனால், வங்காநரி வழிபாடு இந்த ஆண்டு நடைபெறவில்லை.

'வங்காநரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் விலங்கு அல்ல. தரிசு நிலங்களிலும், சிறு வனப்பகுதிகளிலும், நீர்நிலையொட்டிய புதர்களிலும் வாழும் சிறு விலங்கு. இந்த வங்காநரியை பிடித்து எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், கோயில் மைதானத்தில் கூடியிருக்கும் மக்களின் முகத்தில் காண்பித்து விட்டு, மீண்டும் அந்த நரியை அதன் வாழிடத்திலேயே விட்டு விடுவோம். காளை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததைப் போல வங்காநரி ஜல்லிக்கட்டுக்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்கின்றனர் கிராம மக்கள்.

சப்த கன்னிகள் வழிபாடு

இயற்கை சக்திகளை தெய்வங்களாக முன்னோர்கள் வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து உருவச்சிலை வழிபாட்டு முறை உருவாகியது. சப்த கன்னிமார்கள் வழிபாடு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

ஆதிபராசக்தி தனது உடலை ஏழு சக்திகளாகப் பிரிந்து, மக்களுக்கு அருள்பாலித்து காத்திட சப்த கன்னியரை உருவாக்கியதாகவும், சப்த மாதாக்கள் என்னும் கன்னிமார் பெண் தெய்வங்களை வழிபட்டால், வற்றாத வளம், குறையாத செல்வம், ஞானம், யோகம், ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

முதலாவது கன்னிமார்: சிந்தனை, படிப்பு, படைப்பு வழங்கும் பிரம்மனின் அம்சமான ஸ்ரீ பிராம்கிக்கு சர்க்கரைப்பாகு புட்டு படையல்.

இரண்டாவது கன்னிமார்: உடல் நலம், நிம்மதி, அமைதி, மங்களம் தரும் மகேஸ்வரனின் அம்சமான ஸ்ரீ மாகேஸ்வரிக்கு சுண்டல், நீர் மோர் படையல்.

மூன்றாவது கன்னிமார்: தைரியம், ஞானம், வீரம், இளமையும் வழங்கும் முருகனின் அம்சமான ஸ்ரீ கெளமாரிக்கு எலுமிச்சை சாதம் படையல்.

நான்காவது கன்னிமார்: பாதுகாப்பு, வேலை, திருப்தி, சந்தோஷம், செல்வம் அளிக்கும் நாராயணின் அம்சமான ஸ்ரீ வைஷ்ணவிக்கு பாயச வகை படையல்.

ஐந்தாவது கன்னமார்: இன்புற வாழ்வு பேணவும், ஆயுள் பலம் பெறவும், சொத்து சுகம் சேரவும், அழகு பெறவும் அருள்தரும் இந்திரனின் அம்சமான ஸ்ரீ இந்திராணிக்கு பலாச்சுளைகள் படையல்.

ஆறாவது கன்னிமார்: எதிரிகளை அழித்து பாதுகாப்பளிக்கும் வராக மூர்த்தியின் அம்சமான ஸ்ரீ வராகிக்கு, கிழங்கு வகைகள், தயிர்சாதம், முறுக்கு, எள்ளுருண்டைகள் படையல்.

ஏழாவது கன்னிமார்: நோயற்ற வாழ்வு தரும் கபால பைரவரின் அம்சமான ஸ்ரீ சாமுண்டிக்கு அவல் சாதங்கள் படையல்.

'சிந்து சமவெளி நாகரிக காலத்துக்கு முன்பே, தமிழர்கள் சப்த கன்னிமார்களை வழிபட்டு வருகின்றனர். கன்னிமார்களை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். சப்த கன்னிமார்களை அவர்களுக்கு உண்டான படையல் மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்' என்கிறார் தமிழாசிரியர் சிவ. எம்கோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com