அரசியல் தூய்மைக்கு ஆறு லட்சம் காலடிகள்!

பயணங்கள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. பெளத்தத்தை சீனாவுக்கு கொண்டு சேர்த்தது யுவான் சுவாங்கின் நெடும்பயணம்.
அரசியல் தூய்மைக்கு ஆறு லட்சம் காலடிகள்!
Published on
Updated on
2 min read

பயணங்கள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. பெளத்தத்தை சீனாவுக்கு கொண்டு சேர்த்தது யுவான் சுவாங்கின் நெடும்பயணம். பரிணாம வளர்ச்சியைக் கண்டறிந்தது டார்வினின் கப்பல் பயணம். இந்திய மண்ணை உலகுக்கு அறிமுகப்படுத்தியது வாஸ்கோடகாமாவின் நீர்வழிப் பயணம்.

இலக்குகளை நோக்கிய தேடலே யாத்திரையாக மாறுகின்றன. அப்படி ஒரு நோக்கத்துடன் 'சத்தியத்தைத் தேடி' நடைபெற்ற காந்தியின் கால்கள் இந்தியாவை குறுக்குவெட்டாக அளந்தவை. உப்பு சத்தியாகிரகம், ஹரிஜன் யாத்திரை, நவகாளி யாத்திரை... என மக்களிடையே தன்னறத்தை விதைக்க 79 ஆயிரம் கி.மீ. நடந்திருக்கிறார். தனது வாழ்நாளின் அந்திமக் காலத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் காந்தி. அவர் நடந்து கடந்த தொலைவு பூமியை இருமுறை சுற்றி வந்ததற்கு நிகர்.

இவையெல்லாம் எதற்கு? அவசியம் இருக்கிறது. நடைபயணம் என்பது கவன ஈர்ப்பு அல்ல; அது ஓர் அரசியல் ஆயுதம். அதை உணர்ந்தே தனது கால்தடத்தை தேசம் முழுக்கப் பதித்தார் காந்தி. எண்பது ஆண்டுகள் கழிந்தும் காந்தியின் நடை அரசியல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஈரோட்டில் இருந்து செயல்படும் 'முனை' என்ற இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்பு ஓட்டுக்கு லஞ்சம் பெறுவதற்கு எதிராகத் தொடர் பிரசாரம் செய்து வருகிறது. தொடர்ச்சியாக 400 கி.மீ. அண்மையில் நடைபயணம் செய்து, அந்த அமைப்பைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கவனம் ஈர்த்துள்ளனர்.

இதுதொடர்பாக அமைப்பின் ஆலோசகரும் வழக்குரைஞருமான கிருஷ்ணனிடம் பேசியபோது:

'விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு அறக்கல்வி பயிற்சியை அளித்து வருகிறோம். இதற்கென ஒவ்வொரு கல்லூரியிலும் நுழைவுத் தேர்வு நடத்தி தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்து

8 மாதங்கள் சான்றிதழுடன் கூடிய பயிற்சியை அளிக்கிறோம். அதில் இருந்து தன்னெழுச்சியாக உருவெடுத்த இளைஞர்கள்தான் 'முனை' என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

தூய்மையான அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டுமென்றால், அவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் நேர்மையுடன் இருப்பது அவசியம். அதனை வலியுறுத்தி 'முனை' அமைப்பைச் சேர்ந்த சிபி, அனு ஸ்ரீ, செளமியா ஸ்ரீ, அர்ச்சனா, லைலா பானு, கெளதம் ஆகிய ஆறு கல்லூரி மாணவர்கள் கோவை போத்தனூர் காந்தி நினைவகத்தில் இருந்து கடந்த மாதத்தில் பிரசார நடை

பயணத்தைத் தொடங்கினர். திண்டுக்கல் காந்திகிராம் வழியாக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட வேதாரண்யத்தை அவர்கள் 6 லட்சம் காலடிகளில் நடந்து சென்றனர்.

இந்தப் பயணத்தின்போது, அவர்கள் சந்தித்தது பெரும்பாலும் கிராமவாசிகள். மொத்தம் 18 நாள்கள் அந்த மாணவர்களுக்கு உணவு வழங்கி உபசரித்து அன்பு காட்டிய மக்களிடம் நேர்மையான ஜனநாயகத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

வாக்குக்கு பணம் வாங்கும் மக்களில் 90 சதவீதம் பேர் தங்களது செயல் தவறானது என்பதை உணர்ந்துள்ளனர்.

ஆனால், அதனை சரியென நிரூபிக்க வலுவற்ற நியாயங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். புரிதலும், விழிப்பும் அவர்களுக்கு ஏற்பட்டால் அடுத்தத் தலைமுறையில் இருந்தாவது அப்பழுக்கற்ற அரசியலை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முடியும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பெருந்தலையூர் கிராமத்தில் இதே கல்லூரி மாணவர்கள், விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். அதன் பயனாக தேர்தலின்போது அந்த கிராம மக்கள் வாக்குக்கு பணம் வாங்க மறுத்துவிட்டனர். அந்த மனநிலை அனைத்து வாக்காளர்களுக்கும் உருவாக வேண்டும் என்ற பெருங்கனவை சுமந்து கொண்டு இயங்குகிறோம். என்றாவது ஒரு நாள் மெய்ப்படும்'' என்கிறார் கிருஷ்ணன்.

அறக்கல்வி ஆசிரியர்களில் ஒருவரும், குக்கூ காட்டுப்பள்ளி நிறுவனருமான சிவராஜ் கூறியதாவது:

'அண்மைக்காலமாக சமூகத்தில் வெறுப்பு மனநிலையும், அவநம்பிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, ஜனநாயக அரசியல் மீது வன்முறை பார்வைதான் உள்ளது. இளைஞர்களிடையும், மக்களிடையேயும் நிலவும் இந்தப் போக்கை அஹிம்சையால் மட்டுமே மாற்ற முடியும். அதன் நீட்சியாகவே இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு பாத அடிகளும் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல பயணத் தடங்கள். மனிதர்கள் சிறுக சிறுக தொலைத்துக் கொண்டிருக்கும் இயற்கையையும், அறத்தையும் மீட்டெடுத்து பாதுகாக்க இதுபோன்ற முனைப்புகளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம்'' என்கிறார்.

பல நேரங்களில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளின் நேர்மையை விமர்சிக்கும் நாம், மகாத்மாவின் ஒரு வாக்கியத்தை நினைத்து பார்க்க தவறிவிடுகிறோம். 'மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் ஒருபோதும் நல்லவர்களாகிவிட முடியாது' என்பதுதான் அது. மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com