அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்னமும் பதவி ஏற்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே அவரது அதிகாரம் தூள் பறக்கிறது. பலன் பத்திரிகைகள் 'டான்' என்றே அவருக்கு பட்டம் சூட்டிவிட்டன.
'முதலில் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப் போகிறேன்'' என்றார். அடுத்து பனாமா கால்வாயில் 'அமெரிக்காவின் வியாபாரக் கப்பல்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்'' என பனாமா அறிவித்ததும், 'கூடுதல் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்.
இல்லாவிடில் பனாமா கால்வாயை அமெரிக்கா பராமரிக்கும்'' என்றார். இதற்கு காரணம் உண்டு. பனாமா கால்வாய் திட்டமே கைவிடப்பட்டபோது அமெரிக்கா அதற்கு நிதியுதவி செய்ததுடன் முடிந்தும்கூட சில காலம் அதுவே பராமரித்தும் வந்தது. பிறகு பனாமாவிடம் ஒப்படைத்தது என்பது வரலாறு.
அடுத்து கீரின்லாந்து. வட அமெரிக்காவை ஒட்டியுள்ள தீவு இது. ஆனால் இருப்பதோ டென்மார்க் வசம். கீரீன்லாந்து முதலில் நார்வே, டென்மார்க்குக்குச் சொந்தமாய் இருந்தது. பிறகு நார்வேயுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, டென்மார்க் வசம் வந்தது. பல ஆண்டுகள் தன் காலனியாக வைத்திருந்து, பிறகு 2009-இல் கீரின்லாந்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து, அன்றிலிருந்து இன்று வரை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது.
கீரின்லாந்து உலகின் மிகப் பெரிய தீவு. நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய தீவுகளைக் கொண்டது. இங்கு 18 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.ஆனால் தீவுகளின் மொத்த ஜனத்தொகையே 57 ஆயிரம் பேர்தான். 17 நகரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஐநூறு பேர் வசிக்கின்றனர்.
மே-25 முதல் ஜூன் 25 வரை இருபத்து நான்கு மணி நேரமும் சூரியன் இருக்கும். இதனால் 'நள்ளிரவு சூரியன் தீவு' என அழைப்பர். இந்தத் தீவு வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் பயணிக்க உதவும் குறுகலான துருவப் பாதையில் உள்ளது.
கீரின்லாந்தை பராமரிக்க டென்மார்க்கால் இயலவில்லை. இதனால் இங்கு அமெரிக்கா கடற்படை தளங்களை அமைத்துள்ளது.
சோவியத் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்க வேண்டியுள்ளது. மேலும் வான்படை தளத்தை அமைத்து அது சார்ந்த படைவீரர்களும் சில நகரங்களில் உள்ளனர். இதனால், 1867-ஆம் ஆண்டு முதலே, 'கீரின்லாந்தை தங்களிடம் விற்று விடு' என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. மேற்கு இந்திய தீவுகள் கூட முதலில் டென் மார்க்கிடம்தான் இருந்தது.
1917-ஆம் ஆண்டு சமயம் முதல் உலக யுத்தம் துவங்கும் நிலையில் இருந்தது. அமெரிக்கா நிர்பந்தித்து மேற்கு இந்திய தீவுகளை வாங்கிவிட்டது. அப்போதே கீரின்லாந்தையும் கேட்டது டென்மார்க் தரவில்லை. இதனால் அடிக்கடி ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தீவுக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சூழலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்துள்ளார். அவரிடம் எப்போதுமே வெட்டு ஒன்று; துண்டு இரண்டுதான். ஆக கீரின்லாந்தை விற்கிறாயா அல்லது நானே எடுத்துக் கொள்ளட்டுமா? என கேட்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.