பூத்துக் குலுங்கும்...

பெங்களுரு வருபவர்கள் பார்த்து வியப்பது வழிநெடுக மரங்களையும், பூத்துக் குலுங்கும் பூக்களையும்தான்!
பூத்துக் குலுங்கும் மரங்கள்.
பூத்துக் குலுங்கும் மரங்கள்.
Published on
Updated on
2 min read

பெங்களுரு வருபவர்கள் பார்த்து வியப்பது வழிநெடுக மரங்களையும், பூத்துக் குலுங்கும் பூக்களையும்தான்!

மைசூரு மன்னர் சாமராஜேந்திர உடையார் ஜெர்மனியில் இருந்து ஜி.ஹெச். ஃகிரெம்பிலிக்ஸ் என்ற தாவரவியல் நிபுணரை வரவழைத்து அவர் மூலமாக, பல ஜொலிக்கும் பூக்களின் விதைகளைப் பயிரிட்டார். இவை ஆப்பிரிக்கா, கோஸ்டாரிகா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவையாகும். பல நூறாண்டுகளாக, இவை பூத்துக் குலுங்கி வருகின்றன.

இவற்றின் சிறப்புகள் என்னவென்றால், ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு மரம் பூத்துக் குலுங்குவதுதான்.

ஊதா மலையாத்தி மரங்களில் இருந்து பூக்கள் ஜூன் முதல் அக்டோபர் வரையும், ஆப்பிரிக்க துலிப் மரங்களில் இருந்து பூக்கள் ஜூலை முதல் டிசம்பர் வரையும் காட்டுத் தீ மரங்களில் இருந்து பூக்கள் ஜனவரி முதல் மார்ச் வரையும், வசந்தராணி மரங்களில் இருந்து பூக்கள் ஜனவரி, பிப்ரவரியிலும், பவழ மலர் அல்லது புலிசூக, யூக் மரங்களில் இருந்து பூக்கள் ஜனவரி, பிப்ரவரியிலும் பூக்கின்றன. மரமல்லிகையில் இருந்து 'பன்னீர் புஸ்பம்' எனும் பூக்கள் செப்டம்பர், அக்டோபரிலும், ரோஸ்மர மலரில் இருந்து பூக்கள் ஜனவரி, பிப்ரவரியிலும், பூக்கள் பூக்கும்.

ஸ்ரீநகரில் சின்னார் மரங்கள்

முகலாய மன்னர் ஜஹாங்கீர் காஷ்மீரை நேரில் கண்டபோது மயங்கி, 'பூமியின் சொர்க்கம்' என அழைத்தார். அதற்கு அழகுகூட்ட சினார் மரங்களை நட்டார். அதன்பலன் இன்று சினார் காஷ்மீரின் பாரம்பரிய சின்னமாகிவிட்டது. இதோடு, காஷ்மீரின் 'தேசிய மரம்' அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

மரத்தின் இலைகள் சீசனில் ரத்த சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களைப் பெறும். அதன் அடியில் நிற்கும்போது, சொர்க்கத்தில் சுகமான இடமாக மாறுகிறது.

'சினார் மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்று அதன் வசீகரத்தை அனுபவித்து செல்லுங்கள்' என்றே சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் சொல்லும் அறிவுரை.

காஷ்மீர் மக்கள் தங்கள் இடத்தை நேசிப்பது போல் சினார் மரத்தையும் நேசிக்கின்றனர். தால் ஏரியின் நடுவில் ஒரு தீவு உள்ளது. அதன் நான்கு முனைகளிலும் நான்கு சினார் மரங்கள் கம்பீரமாக நிற்கும் காட்சியைப் பார்க்கும்போது, அழகோ அழகு. காஷ்மீரி மொழியில் மரம் 'போயின்' என அழைக்கப் படுகிறது.

இந்துக்கள் இந்த மரம் காஷ்மீர் குல தெய்வம் தேவி பவானியுடன் சம்பந்தப்பட்டது என்கின்றனர். இதன் பட்டைகள், இலைகள் மருந்துகளுக்குப் பயன்படுகின்றன.

காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சினார் மரங்கள் உள்ளன. 2018-இல் எடுக்கட்ட ஒரு கணக்குப்படி, 34, 606 சினார் மரங்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.