கோலிவுட் ஸ்டூடியோ!

யூ டியூப் சேனல் நேர்காணலில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், 'சிறுவயதில் சில இசையமைப்பாளர்களுக்கு வாசித்து கொண்டிருந்த வேளையில், ஒரு இசைக்குழுவில் இருந்தேன்.
கோலிவுட் ஸ்டூடியோ!
Published on
Updated on
2 min read

திசை திருப்பிய கிட்டாரிஸ்ட் வார்த்தை !

யூ டியூப் சேனல் நேர்காணலில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், 'சிறுவயதில் சில இசையமைப்பாளர்களுக்கு வாசித்து கொண்டிருந்த வேளையில், ஒரு இசைக்குழுவில் இருந்தேன்.

அப்போது, ஒருமுறை அந்தக் குழுவிலிருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர் மதுபோதையில் என் பக்கம் திரும்பி, 'என்ன இசைக்கிறீர்கள்? நீங்கள் இசைப்பது சினிமா இசை' என்றார். அது 1985 என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில், அவர் என்ன சொன்னார் என்பதை நான் உணரவில்லை.

சில வாரங்களுக்குப் பின்னர் அது என்னுள் தாக்கியது. பிறகுதான், அவர் சொன்னது சரிதான் என்று உணர்ந்தேன். என்னைப் பற்றி அது ஆழமாக யோசிக்க வைத்தது. அப்போதுதான், நான் வாசிக்கும் இசையமைப்பாளர்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதையடுத்து, மெல்ல அதிலிருந்து விலக ஆரம்பித்தேன்.

இசையில் என்னுடைய பாணி எதுவென்று அடையாளம் காணும் பயணம் தொடங்கியது. ஆனால், அந்தத் தாக்கத்திலிருந்து முழுமையாக வெளியேற ஏழு ஆண்டுகளானது. அந்த கிட்டாரிஸ்ட் எதுவும் தவறாகக் கூறவில்லை. சில நேரங்களில் சில கருத்துகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

அவை, குறிப்பிட்ட விஷயங்களிலிருந்து வெளியேறச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது, என்னுடைய சொந்தத் தாக்கத்திலிருந்து விலகவும் எனக்கு உதவியது. அதாவது, என் இசையின் ஆன்மாவை நான் புதுப்பிக்கிறேன்'' என்று கூறினார்.

96 படத்தின் இரண்டாம் பாகம்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018-இல் '96' திரைப்படம் வெளியாகியிருந்தது. பசங்க, சுந்தரபாண்டியன் போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் '96' திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார்.

90 ஸ்கிட்ஸ், 2 கே கிட்ஸ் என பலருக்கும் இந்தத் திரைப்படம் அப்படியொரு ஃபேவரிட். அதுமட்டுமல்ல; பலருடைய பள்ளிப் பருவ நாஸ்டால்ஜிய பக்கங்களையும் இந்தத் திரைப்படம் புரட்டியது.

இத்திரைப்படத்தை சர்வானந்த், சமந்தாவை வைத்து தெலுங்கிலும் ரீமேக் செய்தார் பிரேம் குமார். '96' திரைப்படத்துக்குப் பிறகு இந்தாண்டு இவர் இயக்கத்தில் 'மெய்யழகன்' திரைப்படம் வெளியாகியிருந்தது. உறவுகளின் முக்கியத்துவத்தைப் பேசும் இந்தத் திரைப்படத்தில் மெய்யழகனாக கார்த்தி நடித்திருந்தார்.

கடந்த சில நாள்களாக '96' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டு வந்தது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அதே கதாபாத்திரங்களை வைத்து, இந்த இரண்டாம் பாகம் நகரவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

தற்போது '96' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்தியப் பதிப்பின் பேட்டியில் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர், 'நான் தற்போது '96' படத்தின் சீக்குவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கொச்சியில் தங்கி இரண்டாம் பாகத்துக்கான எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதை தாண்டி மற்றொரு திரைப்படத்தின் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். அந்தத் திரைப்படம் ஒரு சர்வைவல் டிராமா. இந்த இரண்டும் லைன் அப்பில் என்னுடைய அடுத்த திரைப்படம் '96'படத்தின் சீக்குவல்தான்'' எனக் கூறியிருக்கிறார்.

மகனை இழந்து விட்டேன் - த்ரிஷா உருக்கம்!

நடிகை த்ரிஷாவுக்கு செல்லப் பிராணிகள் என்றால் உயிர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி ஸ்டோரியில் பகிர்வதுண்டு. சூட்டிங் ஸ்பாட், வெளிநாடு என எங்கு சென்றாலும் அங்கிருக்கும் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவது பழக்கம்.

த்ரிஷாவின் குடும்பத்தில் ஒருவராக நீண்ட நாள்களாக அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணி ஷோரா. அதனுடன் விளையாடும் விடியோக்களை, புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை திடீரென ஷோரா உயிரிழந்துவிட்டதாக சோகமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதுகுறித்து தனது அவரது பதிவில், 'என் மகன் ஷோரா கிறிஸ்துமஸ் காலை அன்று உயிர் பிரிந்தான்.

இந்த இழப்பு எனக்கு எவ்வளவு துயரமானது என்றும் என் வாழ்க்கை இனி அர்த்தமற்றதாக நான் உணர்கிறேன் என்றும் என்னை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த அதிர்ச்சியில் நானும், என் குடும்பத்தினரும் உறைந்துபோய் இருக்கிறோம். இதிலிருந்து மீண்டு வர எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்'' என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் ரெட்ரோ!

சூர்யாவின் 44-ஆவது படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஒருபக்கம் சூர்யா 44 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், இன்னொரு பக்கம் ஆர்.ஜே.பாலாஜியின் சூர்யா 45-க்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் மும்முரமாகியிருக்கின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் சூர்யாவின் 44 படத்தில் பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், டாணாக்காரன் தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாரயணின் இசையில் காதலும், கோபமுமாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. தற்போது இதன் டைட்டில் டீஸர் வெளியாகியிருக்கிறது. டீசரில் அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப் பஞ்சாயத்து என ஆக்ஷன் மோடில் இருக்கும் கோபம், பகை எல்லாத்தையும் விட்டுவிட்டு காதல் மோடிற்கு ஆயத்தமாகிறார் சூர்யா. ஆனால், அவையெல்லாம் சூர்யாவை விட்டதா? என்ற கேள்வியுடன் இந்த டீஸர் வெளியாகியிருக்கிறது. காதல், ஆக்ஷன் மோடின் உச்சத்தில் சூர்யாவின் 'ரெட்ரோ' அவதாரம் எடுத்திருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.