ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முடி உதிராமல் தடுக்க வழி என்ன?

என் வயது ஐம்பது. கடந்த 15 ஆண்டுகளாக, சர்க்கரை உபாதை இருந்துவருகிறது. முடி உதிர்வும் இருக்கிறது. இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன சாப்பிடலாம்?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முடி உதிராமல் தடுக்க வழி என்ன?
Published on
Updated on
2 min read

என் வயது ஐம்பது. கடந்த 15 ஆண்டுகளாக, சர்க்கரை உபாதை இருந்துவருகிறது. முடி உதிர்வும் இருக்கிறது. இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன சாப்பிடலாம்?

-திருமதி மணி, வெள்ளக்கோவில்.

சர்க்கரை உபாதையில் துவர்ப்பு, கசப்புச் சுவையுடைய மருந்துகள் நல்ல பலனளிக்கின்றன. அவை உட்புற வரட்சி, நொதநொதப்பைக் குறைப்பதால், 'பேன்கிரியாஸ்' எனும் கணையத்தின் உட்புற கோசாணுக்களிலிருந்து சுரந்து வெளியேறும் இன்ஸூலின் அளவை சீராக்குகின்றன.

பயறு, பழைய நெல், எள்ளு, விளாம்பழம், நாவல் பழம், மஞ்சள், நெல்லிக்காய், திரிபலை, வேங்கைக் கஷாயம் போன்றவை இந்தச் செயலைச் செய்வதற்கு உகந்தவை. சர்க்கரை உபாதையின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் உடலை வலுவிழக்காமல் பலமாக வைத்திருப்பதிலும் 'கோமூத்ர சிலாஜித்' எனும் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடல் மெலிந்து பலம் குன்றியவனாக இருப்பவர்களுக்கு லேசான அதே சமயத்தில் உடல் வலுவூட்டக் கூடிய உணவைப் பரிந்துரை செய்ய வேண்டும். இதற்கு உதாரணமாக, அவலைக் குறிப்பிடலாம். உடல் பருமனாகவோ அல்லது பலம் உடையவனாகவோ இருப்பின் கனமானதும், அதே சமயத்தில் உடலை மெலியச் செய்யக் கூடியதான பொருளையே உட்கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கு சிறந்த உதாரணமாக சூடாக்கப்பட்டு பதப்படுத்தாத தூய தேனைக் குறிப்பிடலாம்.

சர்க்கரை உபாதைக்கான தீர்வை ஆயுர்வேதம் சற்று கடினமான சிகிச்சை முறைகளையே எடுத்துக் கூறுவதால், அதைப் பற்றிய விவரம் நாம் அறிந்திருப்பதும், முடிந்தால் செய்து பார்ப்பதற்கும் முயற்சி செய்ய வேண்டும். உடல் வலு நன்றாக இருந்தால், வேப்பெண்ணெய் அல்லது கடுகெண்ணெயைப் பருகச் செய்து அதன் முழு பலனும் உடலில் சேர்ந்துவிட்டதை அறிந்த பிறகு வாந்தி, பேதி மூலம் உட்புறக் கழிவுகளை அகற்ற வேண்டும்.

அதன்பிறகு, எனிமா அதாவது மூலிகைக் கஷாயங்களால் ஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் வஸ்தி எனும் சிகிச்சை முறையால் குடல் வாயுவை அகற்றி, உட்புறம் முழுவதுமாக சுத்தம் அடைந்த நிலையில், கறிகாய் மற்றும் மாமிஸ சூப்புகள் தயாரித்துப் பருகச் செய்து உடலைத் திடப்படுத்த வேண்டும்.

உடல் வலுவில்லாத மெலிந்த நபர்களுக்கு மற்றும் வலுவிழந்த சாதாரண உடல் வாகு கொண்டர்களுக்கும் மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறையானது மேலும் பலவீனப்படுத்தும் என்பதால், அவர்கள் அனைவரும் இருபத்து ஐந்து மில்லி நெல்லிக்காய் சாறு எடுத்து, அதில் இரண்டு கிராம் தூய மஞ்சள் தூளைச் சேர்த்து ஐந்து அல்லது ஆறு சொட்டுகள் தேனும் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, சர்க்கரை உபாதையின் தாக்கம் குறைந்துவிடும்.

மாலையில் இருபத்து ஐந்து மில்லி தண்ணீர்விட்டான்கிழங்கின் சாற்றை ஐம்பது மில்லி இளஞ்சூடான பசும்பாலுடன் கலந்து இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன் சாப்பிடுவதும் நல்லதே.

ஐநூறு மில்லி கிராம் படிகாரக்கல்லைப் பொடித்து, தேங்காயின் கண் பகுதியைத் திறந்து, உள்ளே கொட்டிய பிறகு, நீர் ஊற்றிப் பிசைந்த களிமண்ணைப் பூசி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலை இளநீரை மட்டும் எடுத்துப் பருக, சர்க்கரையின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் பெறலாம் என்ற ஒரு குறிப்பையும் ஆயுர்வேத நூலில் காண முடிகிறது.

உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். இதனால் தோள்பட்டை சதை காய்தல், நரம்புத்தளர்ச்சி, சிறுநீரக- கண் பாதிப்புகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

அறுபது கிராம் தர்ப்பைப் புல் வேரில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து ஐநூறு மில்லியாக வற்றும் வரை கொதிக்கவிட்டு, அந்த நீரை ஒரு நாளில் பலதடவை சிறுகச் சிறுகப் பருகவும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com