மார்கழி மாதத்தில் பனி விழும் காலைப்பொழுதில் பெண்கள் தங்களது வீடுகளின் முன் வாசலில் போடும் அழகிய கோலங்களை வரைவர். இந்த மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வோர் கருப்பொருளைக் கொண்டு கோலங்களை வரைந்து வருகிறார் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட அம்பாசமுத்திரத்தில் வசிக்கும் இயற்கை விவசாயி பா.லெட்சுமிதேவி.
அவரிடம் பேசியபோது:
'ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்களும் மார்கழியில் போற்றிப் பாடப்படுகின்றன. நாலாயிரத் திவ்ய பிரபந்தம், தேவாரப் பாடல்கள், திருவாசகம் ஆகியனவும் பாடப் பெறும்.
இந்தச் சிறப்புமிகு மார்கழியில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வோர் கருப்பொருளைத் தேர்வு செய்து பல்வேறு விதமாக ரங்கோலி கோலமிட்டு, அந்தந்த கோலத்துக்குரிய பாடல்களும், அவற்றின் பொருள் விளக்கத்துடன் எழுதுவேன். அதனைப் புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன். இறைவனுக்கு பக்தி செய்வதில் இதுவும் சிறிய தொண்டு என நான் நினைக்கிறேன்.,
திருமாலைக் குழந்தையாக உருவகித்து பெரியாழ்வார் பாடும் பாடல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்துக்கு முன்னோடியாகும். அது 'பெரிய திருமொழி' என்று அழைக்கப்பட்டாலும், 'கண்ணன் பிள்ளைத் தமிழ்', என்றே போற்றப்படுகிறது. பெரியாழ்வாரின் பாசுரங்களையே இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக எடுத்து, கோலங்களை வரைந்து வருகிறேன்.
முதல் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என ஒவ்வொன்றிலும் பத்து திருமொழிகள், ஒவ்வொரு திருமொழியிலும் குறைந்தது பத்து பாடல்கள் என்று அமைந்துள்ள சுமார் 327பாடல்களிலிருந்து மொத்தம் 30 நாள்களுக்கும் 30 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை சிக்கு கோலம், , கோட்டோவியம் இணைத்தும் தேவைப்படும் இடங்களில் வண்ணப் பொடிகளைச் சேர்த்தும் கோலமிட்டு வருகிறேன்.
அதுபோல், திருத்தாண்டகத்தில் 30 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, 30 நாள்களும் சிவனின் திருவுருவத்தை கோலமாக வரைந்து வருகிறேன். இறைவன் திருவுருவத்தைக் கோலமாக வரைவதால் அவற்றை வெளிவாசலில் அல்லாமல் வரவேற்பறை, பூஜை அறையில் வரைகிறேன். இதனை காலையில் வந்து பார்க்க முடியாதவர்கள் கூட மாலையில் வந்துப் பார்த்துச் செல்லுகின்றனர்'' என்கிறார் லெட்சுமிதேவி.
- பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.