மினி திபெத்..!

திபெத்தியர்களின் குடியிருப்புகள், கலை, கலாசாரம் குறித்து அறிய ஹிமாசலப் பிரதேசத்தில் இருக்கும் தர்மசாலாவுக்குப் போக வேண்டியதில்லை.
மினி  திபெத்..!
Published on
Updated on
1 min read

திபெத்தியர்களின் குடியிருப்புகள், கலை, கலாசாரம் குறித்து அறிய ஹிமாசலப் பிரதேசத்தில் இருக்கும் தர்மசாலாவுக்குப் போக வேண்டியதில்லை. ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலத்தில் இருந்து 70 கி.மீ.

தொலைவில், கர்நாடகா மாநிலத்துக்கு உள்பட்ட கொள்ளேகால் அருகே 'ஒடையார்பால்யா'வில் உள்ள 'தோடன்லிங்' என்ற இடத்துக்குச் சென்றால் போதும். கடல் மட்டத்திலிருந்து 3,345 அடி உயரத்தில் பிலிகிரிரங்கா மலையின் அடிவாரத்தில் இந்த அகதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது.

இமயமலையில் இருக்கும் திபெத்தை 1950-இல் சீனா ஆக்கிரமித்து, தனது நாட்டுடன் இணைத்தது. திபெத்தியர்களின் குருவான தலாய் லாமா உள்பட சுமார் 80 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி, இந்தியா, நேபாளம், பூடானில் அடைக்கலமாகினர்.

இந்தியாவில், திபெத்திய அகதிகள் விவசாயம், கைவினைப் பொருள்கள் உருவாக்கும் திறமையின் அடிப்படையில் 39 இடங்களில் குடியேறினர். தென் இந்தியாவில் உள்ள 5 குடியேற்றங்களில் ஒன்றுதான் 'தோடன்லிங்' திபெத்தியக் குடியிருப்பு.

1974-இல் 3 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்தக் குடியிருப்பில் வீடுகள், மடங்கள், தங்கும் விடுதிகள், முதியோர் இல்லங்கள், குடியிருப்பு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்ளன. இங்குள்ள திபெத்தியர்கள் வனப் பகுதிகளை நெல், சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிரிடும் வளமான விளைநிலங்களாக மாற்றியுள்ளனர்.

ஸ்வெட்டர்களை பின்னி விற்பனை செய்கின்றனர். இவர்கள் திபெத்திய கலாசாரம், மதம், வாழ்க்கை முறையைப் பாதுகாத்து அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகின்றனர்.

22 கிராமங்களை உள்ளடக்கிய இந்தக் குடியிருப்பில் சுமார் 3,500 திபெத்தியர்கள் வசித்து வருகின்றனர். 'தோடன்லிங்' என்பது வசிப்பிடம் மட்டுமல்ல; திபெத்திய மரபுகள் உயிர்ப்புடன் வைக்கப்படும் ஒரு கலாசார மையமும் கூட!

ஆன்மிகப் பயிற்சிக்கும் படிப்புக்குமான மையம், மடாலயத்தில் கண்ணைக் கவரும் சுவரோவியங்கள், புத்த மதப் போதனைகளைக் குறிக்கும் சிலைகள், ஸ்தூபிகள், திபெத் கட்டடக்கலை, ஆண்டு முழுவதும் நடக்கும் பல மத விழாக்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. மடாலயத்தில் காலை, மாலை நடக்கும் பிரார்த்தனை அமர்வுகளில் சுற்றுலா பயணிகளும் பங்கேற்கலாம்.

உணவு விடுதிகளில் தென்னக உணவு வகைகளுடன் திபெத்திய உணவு வகைகளான 'மோமோஸ்', 'பாலாடை', 'துக்பா' (நூடுல்ஸ் சூப்), 'டிங்மோ' (வேகவைத்த ரொட்டி) ஐ பால், தேநீர், பாரம்பரிய திபெத்திய வெண்ணெய் தேநீர் (போ சா) , திபெத்திய பிஸ்கட்டுகள் ஆகியன கிடைக்கும். மர வேலைப்பாடுகள், தரைவிரிப்புகள், தங்க நிற ஓவியங்கள், கைவினைப்பொருள்கள் திபெத் கலை, கலாசாரம் குறித்த புரிதலை வழங்கும்.

திபெத்தியப் பண்டிகைகளான 'மோன்லம்' பிரார்த்தனை விழா, 'லோசார்' (திபெத்திய புத்தாண்டு) போன்ற தருணங்களில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கலாம்.

திபெத்திய சடங்குகள், இசை, நடனம், விருந்துகளிலும் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com