சங்க இலக்கியத்தின் காதல் பாடல்கள் தமிழரின் காதல் வாழ்க்கையை விளக்குவதோடு தமிழரின் ரசனையையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. பாடிய புலவரின் கற்பனை வளம் என்று வாதிட்டாலும் மக்களின் மனம் கவர்ந்த பாடல்களே காலம் கடந்து நிற்கும் இயல்புடையன என்பதால் சங்க இலக்கியங்களை நமது சமூகத்தின் ரசனை என்று கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
காதலனின் குரலாக வரும் காதலுக்கும், காதலியின் மனமாக வெளிப்படும் காதலுக்கும் உள்ள வேறுபாடுகள் நுட்பமாக வெளிப்படுவதில் புலமையின் சிறப்போடு காதலின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. காதலி தனது காதலைத் தோழியிடம் வெளிப்படுத்தும் பொழுது தனது காதல்,
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
(குறுந்தொகை-3)
என்று கூறுகிறாள்.
சங்கத் தமிழரின் மனம் எளிமையானதாகவும் தெளிவானதாகவும் இருந்ததற்கான உதாரணமாகவும் இந்தப் பாடலைக் கொள்ளலாம். தனது காதல் இந்த உலகை விடப் பெரியது. வானத்தை விட உயர்வானது. கடலை விட ஆழமானது. மலையில் வளரும் கருங்கோல் குறிஞ்சிப் பூ பூக்கும் செடியானது திண்மையாக இருப்பதைப் போல உறுதியானது.
குறிஞ்சிப்பூவிலிருந்து கிடைக்கும் தேனைப் போல இனிமையானது என்கிறாள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பாடலின் மொழி சுலபமாக இருப்பதை உணர முடிகிறது. தெளிவான மனமே எளிதாக எதனையும் வெளிப்படுத்த வல்லது. இதே போல மற்றுமொரு எளிய ஆனால் வலிமையான பாடல்,
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீஆகி யர்எம் கணவனை
யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே
(குறுந்தொகை-49)
இந்தப் பாடலை அது சொல்லும் உணர்வை எவரும் விளக்கிக் கொண்டிருக்க அவசியமில்லை. எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நீயே என் கணவன் நானே உன் மனையாள் என்று சொல்வதில் காதலின் உறுதிப்பாடும் காதலருக்கிடையிலான புரிதலும் வெளிப்பட்டுவிடுகிறது.
காதலி, தனது கணவனின் தகுதியை அறிந்தும் அவனைக் காதல் செய்கிறாள். இவள் செல்வக் குடும்பத்தில் பிறந்தவள். காதலனோ அத்தகைய வசதி இல்லாதவன் என்றாலும், அவனை இவளுக்குப் பிடிக்கிறது. இதனை ஐங்குறுநூற்றுப் பாடல் காட்டுகிறது.
அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ்
மான்உண்டு எஞ்சிய கலுழி நீரே
(ஐங்குறுநூறு-203)
காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இங்கே காதலிக்கு சுவை கூட மாறிப் போயிருக்கிறது. என் தாயார் எனக்குத் தந்த தேன் கலந்த பாலை விட என் தலைவனின் ஊரில் மான் உண்டு எஞ்சியிருந்த கலங்கிய தண்ணீர் சுவையாக இருந்தது என்கிறாள்.
காதல் எப்படிக் குறைகளைக் காணாது, நிறைகளை உலக அளவுக்கு விரித்துக் கொள்ளும் என்பதற்கு இத்தகைய உணர்வுகள் உதாரணம். உண்மையில் காதலுக்குக் கண் இல்லை என்பது சரியல்ல. காதலின் கண்கள் எல்லாவற்றையும் நிறைவுடனும் நேர்மறையாகவும் காணும் இயல்புடையன என்பதே உண்மை.