பெரிய மேளா!

பெரிய மேளா!

தென் திசையை நோக்கி பயணித்து வந்த சூரியன், வட திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் நாள் தை மாதப் பிறப்பான 'மகர சங்கராந்தி' ஆகும்.
Published on

தென் திசையை நோக்கி பயணித்து வந்த சூரியன், வட திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் நாள் தை மாதப் பிறப்பான 'மகர சங்கராந்தி' ஆகும். சூரியன் கடக ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேசிப்பதால் 'மகர சங்கராந்தி' என்கிற பெயர் வந்தது.

மகர சங்கராந்தியை தமிழ்நாட்டில், 'தை பொங்கல்' என்றும், குஜராத்தில் ' உத்தராயணம்' என்றும், கர்நாடகாவில் 'சுக்கி ஹப்பா' என்றும், மகாராஷ்டிரத்தில் 'மகி சங்கராந்த்' என்றும், ஒடிஸ்ஸாவில் 'மகர செளலா' என்றும், அஸ்ஸாமில் 'மாக்' அல்லது 'புகாலி பிஹு' என்றும், மேற்கு வங்கத்தில் 'பெளஷ் கிராந்தி' என்றும், பஞ்சாபில் 'லோஹ்ரி' என்றும், காஷ்மீரில் 'ஷிஷூர் சான்க்ராத்' என்றும், உத்தர பிரதேசம், பீகாரில் 'கிச்சேடி' என்றும் கூறுகின்றனர்.

மகர சங்கராந்தியையொட்டி, மேற்கு வங்கத்தில் கங்கா சாகர் தீவுக்கு ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருகை புரிகின்றனர். இமயமலையில் உற்பத்தியாகும் புனித கங்கை நதியானது, பல்வேறு மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து கடைசியில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் 'கங்கா சாகர்' என்று அழைக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 'சாகர் த்வீப்' என்று அழைக்கப்படும் 'சாகர் கடற்கரை' சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது.

மகர சங்கராந்தியன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளில் உள்ள நாகா சாதுக்கள், சந்நியாசிகள், பக்தர்கள் கங்கை நதி கடலுடன் சேரும் இடமான கங்கா சாகரில் நீராடுகின்றனர். இது 'கங்கா சாகர்மேளா' என்னும் ஒரு பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதனால் அவர்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிட்டும் என்கிற உறுதியான நம்பிக்கை உள்ளது.

சுமார் இரண்டே கால் லட்சம் பேர் வசிக்கும் இந்த சாகர் த்வீப் தீவுக்கு கடந்த ஆண்டில் மகர சங்கராந்தியன்று ஒரு கோடி பேர் வந்து நீராடினார்கள். இந்தாண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதைவிடகூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னணியில், சத்ய யுகத்தில் நடந்த ஒரு புராண நிகழ்வும் உண்டு. சகர மன்னன் அஸ்வமேத யாகம் செய்வதற்காக வைத்திருந்த குதிரை, இந்திரனால் களவாடப்பட்டு, கபில முனிவரின் ஆசிரமத்தில் மறைவாகக் கட்டப்பட்டிருந்தது. குதிரை காணாமல் போனதால் சகர மன்னன், தன்னுடைய 60 ஆயிரம் புத்திரர்களையும் தேட அனுப்பியபோது, தியானத்தில் இருந்த கபில முனியின் ஆசிரமத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையைக் கண்டு, முனிவர் தான் அதை களவாடிவிட்டார் என்கிற எண்ணம் கொண்டனர்.

இதனால் சினம் கொண்ட முனிவர் 60 ஆயிரம் பேரையும் தன் பார்வையால் பஸ்பமாக்கி நரகத்துக்குப் போகும்படி சபித்தார். பின்னொரு காலத்தில் கபில முனிவரின் வழிகாட்டுதலின்படி, சகர மன்னனின் பரம்பரையில் வந்த பகீரதன், தவமிருந்து தேவலோக நதியான கங்கையை பூமிக்கு வரவழைத்து, அந்தப் புனித நீரால் தன் முன்னோர்களுக்கு மோட்சப் பிராப்தியை அளித்தான்.

கங்கா சாகர் மேளா நடக்கும் இந்த இடத்தின் அருகில்தான், அந்தக் காலத்தில் கபிலமுனி ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது. இங்கு கபிலமுனிக்கு கோயில் ஒன்றும் உள்ளது. பக்தர்கள் கங்கையில் நீராடி விட்டு, இந்தக் கோயிலுக்கு வந்து நாராயணனின் அம்சமான கபில முனியின் அர்ச்சாவதார மூர்த்தியைத் தரிசித்து, அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் முக்தியையும், மோட்சப்ராப்தியையும் அருள வேண்டுவர்.

'சப் தீர்த்த பார் பார்

கங்கா சாகர் ஏக் பார்'

எத்தனை புண்ணிய தீர்த்தங்களில் எத்தனை முறை நீராடினாலும் கிடைக்காத மோட்சப் பிராப்தி, கங்காசாகரில் ஒருமுறை நீராடினாலே கிடைத்துவிடும் என்பதே பக்தர்களின் கோஷமாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்