பழைமையுடன் புதுமை!

தூய பருத்தி துணிகளில் இயற்கை மூலிகை வண்ணங்களைப் பயன்படுத்தி, புராணக் கதைகளை வரைவதே கருப்பூர் கலம்காரி ஓவியம்.
ஓவியம்
ஓவியம்
Updated on
2 min read

தூய பருத்தி துணிகளில் இயற்கை மூலிகை வண்ணங்களைப் பயன்படுத்தி, புராணக் கதைகளை வரைவதே கருப்பூர் கலம்காரி ஓவியம். தேர்ச் சீலைகள், தோரணங்கள், கோயில்களில் பயன்படும் இந்த ஓவியங்கள் முழுவதும் கைகளால் மட்டுமே தீட்டப்படுகின்றன.

அந்தக் காலத்தில் கலைஞர்களே துணியைக் கையால் நெய்து, சாயமிட்டு, அச்சு செய்து, கையால் வரைந்தனர். தங்களைச் சுற்றியிருந்த தாவரங்கள், மரப்பட்டைகளிலிருந்து கிடைத்த இயற்கை வண்ணங்களை ஈச்ச மட்டை, பனை மட்டை போன்ற இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி வரைந்தனர். இதற்காக நிறைய கதைகள், புராணங்களைப் படித்து, வரைந்து உருவகப்படுத்தினர்.

17- ஆம் நூற்றாண்டிலிருந்து வரையப்படும் இந்த ஓவியம் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சிக்கல்நாயக்கன்பேட்டை, அரியலூர் மாவட்டம் கருப்பூர் கிராமங்களில் மட்டுமே தீட்டப்படுகின்றன. முன்பு பரவலாக இருந்த இந்தக் கலையில் தற்போது மிகச் சிலரே ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலை பாரம்பரியத்திலிருந்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், சிக்கல்நாயக்கன்பேட்டையைச் சேர்ந்த நாற்பத்து ஐந்து வயதான ராஜ்மோகனிடம் பேசியபோது:

'ஆந்திர மாநிலத்தில் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கலம்காரி ஓவியம் தொடங்கியது. அங்கிருந்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்து இங்கு வந்த கலைஞர்கள், மன்னர்களுக்கு உடைகளை கலம்காரி ஓவியத்தால் அலங்கரித்தனர். விழாக் காலத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளைத் துணியில் வரைந்து தந்தனர். மன்னர் காலம் முடிவுக்கு வந்த பிறகு வெளிநாட்டவர், இங்குள்ள மக்கள் விரும்பிக் கேட்கும் வடிவில் செய்து கொடுத்து வந்தனர்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கலம்காரி ஓவியங்கள் வெவ்வேறு வகைகளில் வரையப்படுகின்றன. அவையெல்லாம் ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். இதனால், கலம்காரி ஓவியம் என்றாலே சாதாரணமாக துணியில் வரைவது மட்டுமே எனப் பலரும் நினைக்கின்றனர். ஆனால், கருப்பூர், சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம் ஒரு கதையே சொல்லும். 20, 30 அடி நீள துணியில் ராமாயணம் போன்ற புராணக் கதைகளை வரைந்து, ஓவியம் மூலம் மக்களுக்கு உணர்த்துவதே இக்கலையின் சிறப்பம்சம். இந்தக் கலை காலப்போக்கில் நலிவுற்றது.

இந்தச் சூழ்நிலையில் எனது தந்தை ஆர். எம்பெருமாள் பாரம்பரியமான கலம்காரி ஓவியத்தில் காலத்துக்கேற்ப பல மாற்றங்களைப் புகுத்தி, இந்தக் கலையை அழிவிலிருந்து மீட்டெடுத்தார். கலை என்பது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் ரசனை, சூழ்நிலைக்கேற்ப மாறுவது இயல்பு. இதையறிந்து கொண்ட எனது தந்தை இக்கலையில் பல்வேறு சிந்தனைகளைப் புகுத்தியதால், வெளிநாடுகளிருந்தும் கேட்டு வாங்கும் அளவுக்கு இக்கலை உயர்ந்தது. அமெரிக்காவிலுள்ள பவுடன் கல்லூரிக்கு இயேசு காவியத்தை வரைந்து கொடுத்தார்.

இதேபோல, பல்வேறு நாடுகளில் அந்தந்த புவி சார்ந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கலையை முன்னெடுத்துச் சென்றார். இக்கலையில் என்னென்ன புதுமைகளைப் புகுத்த முடியுமோ, அவை அனைத்தையும் செய்தார்.

இதையெல்லாம் 1980 - 90-களில் செய்தது ஆச்சரியமாக உள்ளது. இதைப் பாராட்டி அவருக்கு 'சில்ப் குரு' விருது, தேசிய விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. அவர் 2016 -ஆம் ஆண்டில் காலமானார். அவரது சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு நாங்களும் காலத்துக்கேற்ப பல்வேறு புதுமைகளைச் செய்து வருகிறோம்.

எங்களது தாத்தா காலத்தில் 100 அடி நீளம் வரை செய்தனர். தந்தை காலத்தில் 40 - 50 அடியாக இருந்த நிலையில், நாங்கள் 20 அடி நீளத்துக்கு செய்கிறோம். இந்த 20, 30 அடி நீள கலம்காரி ஓவியத்தைக் கூட மிகச் சிலரே விரும்பிக் கேட்கின்றனர்.

தற்போதைய தலைமுறையினரும் 20, 30 அடி நீளத் துணிகளில் வரைய விரும்பவில்லை. இதை வாங்குவதற்கும் ஆளில்லை. எனவே, காலத்துக்கேற்ப இரண்டடி, மூன்றடி என சிறிய அளவிலான துணியில் என்னென்ன கருத்துகளைச் சொல்ல முடியுமோ, அதைச் செய்து வருகிறோம். இதுபோல செய்தால்தான் இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும்.

இதனால், தசாவதாரத்தை மூன்றுக்கு மூன்று அடி அளவுள்ள துணியில் செய்கிறோம். விநாயகரை பொருத்தவரை உட்கார்ந்த நிலையில்தான் இருக்கும். விநாயகரை ஒரே மாதிரியாக வரையாமல், நின்ற கோலத்தில் வரைவது உள்பட பல்வேறு புது வடிவங்களில் புதுமைகளைச் செய்து வருகிறோம்.

கிருஷ்ணர், ராமர், சிவன் - பார்வதி, புத்தர் உள்ளிட்ட தெய்வ உருவங்களிலும் பழைமையை மாற்றாமல் புதுமைகள் புகுத்தப்படுகின்றன. யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகளை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறோம். மேலும், சிக்கல்நாயக்கன்பேட்டை சேலையிலும் இக்கலையைப் புகுத்தி வருகிறோம்.

இந்தப் புதிய சிந்தனைகளை மக்களும் விரும்புவதால், இந்தக் கலைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இவை எல்லாம் எங்களது தாத்தா காலத்திலேயே இருந்தாலும், காலப்போக்கில் கைவிடப்பட்டது. அதை மீண்டும் கொண்டு வருகிறோம். இதுபோல செய்தால்தான் இக்கலை தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்.

இந்தக் கலையை முறையாகப் பயிற்சி பெற்று நிபுணத்துவத்துடன் இருப்பவர்கள் பத்து பேருக்குள்தான் உள்ளனர். இதுதொடர்பான பயிற்சி முகாம்கள் நிறைய நடைபெற்றாலும், அவற்றால் பயனில்லை. இந்தக் கலையில் நிறைய வரலாறு, புராணங்களைப் படிக்க வேண்டும்.

நிறைய வரைய கற்றுக் கொள்ள வேண்டும். எனவே, இக்கலையைக் குருகுல முறையில் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இருந்து கற்றுக் கொண்டால்தான் தேர்ச்சி பெற முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால், இக்கலையில் மேலும் கலைஞர்கள் உருவாகி வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

இல்லாவிட்டால் இந்தக் கலை அழிந்துவிடும்'' என்கிறார் ராஜ்மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com