3 மாதத்தில் அஜித்தின் இரண்டு படங்கள்!
அஜித்தின் 'விடாமுயற்சி' பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக 'லைகா' நிறுவனம் ஜனவரி 1-இல் தெரிவித்திருந்தது.
'குட் பேட் அக்லி' படமும் முன்பு பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தார்கள். ஆனால், பிறகு அந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது.
ஏப்ரல் 10-இல் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், பிரசன்னா, சுனில் என பலரும் நடித்திருக்கின்றனர்.
'கிரீடம்' படத்துக்குப் பின்னர் அஜித் நடிக்கும் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தள்ளி வைக்கப்பட்டுள்ள 'விடாமுயற்சி' படமும் கூடிய விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாத இடைவெளிக்குள் அஜித்தின் மற்றொரு திரைப்படமான 'குட் பேட் அக்லி' படமும் வெளியாகவிருக்கிறது.
நண்பரை கரம் பிடித்த சாக்ஷி!
துணை நடிகையாகவும், நாயகியாகவும் இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். சின்னத் திரைத் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பிரபலமான சாக்ஷி தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ராவைத் திருமணம் செய்துள்ளார். ஜனவரி 2-இல் கோவாவில் ஐ.டி.சி. நட்சத்திர ஹோட்டலில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. நிகழ்வில் இரு வீட்டாரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பதிவில் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி.
அந்தப் பதிவில் இடம்பெற்ற தகவல்:
'சைல்ட்ஹூட் நண்பர்கள் முதல் அனைவரும்... கோவா வானத்தின் கீழ் காதலுக்கும் கடலலைகளுக்கும் இடையே நானும் நவ்னீத்தும் 'என்றென்றைக்கும்' இணைந்திருப்பதாக சத்தியம் செய்துள்ளோம். இதோ வாழ்நாள் முழுமைக்குமான காதல், சிரிப்பு, முடிவில்லாத நினைவுகள் பயணமாகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சாக்ஷி. இவரது திருமண செய்தி ரசிகர்களுக்கு இனிமையானதாக அமைந்துள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் பிக்பாஸ் சீசன் 3-ன் புகழ்பெற்ற பங்கேற்பாளர் சாக்ஷிக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
விஷாலுக்கு என்ன ஆச்சு?
விஷால் நடிப்பில் உருவாகியிருக்கிற 'மதகஜராஜா' படமும் பொங்கல் ரிலீஸாக வெளியாகியுள்ளது.
2012-இல் இந்தப் படத்தை முடித்த படக் குழு 2013 பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால், சில பிரச்னைகளால் ரிலீஸாகாமல் தாமதமானது. தற்போது 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 'மதகஜராஜா' வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் விஷால் பாடிய பாடல், சந்தானத்தின் காமெடி போன்ற விஷயங்களும் படத்தின் மைலேஜை கூட்டி எதிர்பார்ப்பையும் அப்போதே ஏற்படுத்தியது. இந்தத் திரைப்படம் வெளியாவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானதும், சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் எதிர்பார்த்திருப்பதாகப் பதிவிட்டனர்.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னை லீலா பேலஸில் அண்மையில் நடைபெற்றபோது, அதில் பங்கேற்ற விஷாலின் தோற்றம் பலரையும் அதிர்ச்சியாக்கியது. அதுமட்டுமல்ல, மேடையில் பேசும்போது மைக் பிடிக்க முடியாமல் நடுக்கத்துடன் காணப்பட்டார் விஷால். பிறகு, அவரை படக் குழுவினரோடு மேடையில் தொகுப்பாளர் டி. டி. அமர வைத்தார். அவருக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாகவும் தொகுப்பாளர் தெரிவித்தார்.
சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் விஷாலின் உடல்நிலை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டு வந்தது. இப்போது அப்போலோ மருத்துவமனை விஷாலின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 'விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு முழுமையாக ஓய்வெடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.' என குறிப்பிட்டிருக்கின்றனர்.
பெண்கள் பக்கம் நிற்க வேண்டும்
'அமரன்' பட ஹிட்டுக்கு பின்னர், சிவகார்த்திகேயன், சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25-ஆவது படம். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100-ஆவது படம். படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவிருக்கிறது.
இதற்கிடையில் முருகனின் அறுபடை வீட்டுக்கும்ஆன்மிகப் பயணம் சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். கடந்த 6-ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலிருந்து ஆரம்பித்து திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி என அடுத்தடுத்துச் செல்லவிருக்கிறார்.
அவ்வகையில், திருச்செந்தூரில் தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், 'அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசனம் செய்யணும்ங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை. இன்னைக்குத் திருச்செந்தூரில் ஆரம்பிச்சு தரிசனம் செய்தேன். இனி அடுத்தடுத்த படை வீடுகளுக்குச் செல்ல வேண்டும். இது கடந்த மாதமே திட்டமிட்டிருந்தேன். ஆனால், பெஞ்சல் புயல் வந்ததால் தள்ளிப்போனது. 'அமரன்' வெற்றி, நன்றிகள், இன்னும் பல வேண்டுதல்கள் என இந்த ஆன்மிகப் பயணத்தில் இருக்கும்' என்றார்.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் கொடுமை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கக் கூடாது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்ம எல்லாரும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும். அவர்களுக்குத் தைரியம் கொடுக்க வேண்டும். இனி இது மாதிரியான கொடுமைகள் நடக்கக் கூடாது. கடவுளிடமும் இதையே வேண்டுதலாக வைக்கிறேன்' என்றார் சிவகார்த்திகேயன்.