தொடர வேண்டும்..
225 வாரங்கள் வெளிவந்த ஆசிரியரின் 'பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்!' தொடருக்கு இடைவேளை அளித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இடைவேளை முடிந்து மீண்டும் விரைவில் தொடர வேண்டும். 1973-1997 இந்திய அரசியலை நுணுக்கமாக படம் பிடித்து காட்டிய இந்தத் தொடரை விரைவில் நூலாக வெளியிட வேண்டும் என்பதே எனது அவா.
-க.ரவீந்திரன், ஈரோடு.
பிரமிப்பு..
இந்திய அரசியல் குறித்து இதுவரை நாம் அறியாத தகவல்களை, உண்மைகளை, மறைந்திருந்த சூட்சுமங்களை, ' பிரணாப்தா என்னும் மந்திரச்சொல்' அரசியல் தொடர் மூலம் சுவைபடத் தந்தார் ஆசிரியர்.
அரசியலில் நுழைய நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல; சாதாரண குடிமகனுக்கும் கூட இந்தத் தொடர் அருமையான அரசியல் பாடம்.
-முகதி.சுபா, திருநெல்வேலி - 11.
வரப்பிரசாதம்...
இன்றைய தலைமுறை அரசியல்நோக்கர்கள், அரசியல்வாதிகள், இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் இந்தத் தொடர். இன்றைய தலைமுறையினர், முந்தைய அரசியலை அறிய முடிந்தது. தில்லி அரசியலில் நடைபெறும் சூழ்ச்சிகளை 'ராஜதந்திரம்' என்று கூறுவர். அந்தச் சூழ்ச்சிகளைப் புட்டுப் புட்டு எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
-ஜே.கே.என்.பழனி, குடியாத்தம்.
தெளிவான கட்டுரை
மத்திய, மாநில அரசுகளின் ஆளுமைகள், செயல்பாடுகள் குறித்தும், தலைவர்களைக் குறை சொல்லாமல், மிக நிறைவாகப் பாராட்டி எழுதப்பட்ட அற்புதமான தொடர். எனது 71 ஆண்டு வாழ்நாளில் படித்த மிகவும் அருமையான, ஆழமான, தெளிவான அரசியல் கட்டுரை.
-ஏ.சுபாஷ்சந்திரன், ராசிபுரம்.
வேண்டாம் இடைவெளி...
மகா அரசியல் சரித்திரத் தொடருக்கு இப்போதைக்கு இடைவெளி என்பது எனக்குள் பெரும் பதற்றத்தை உருவாக்கிவிட்டது. இடைவிடாத எழுத்துப் பயணத்தில் உங்களுக்கு சிறிது ஓய்வு நிச்சயமாக தேவைதான். ஆனால் அது நீண்ட இடைவெளியாக இருந்துவிடக் கூடாது. விரைவில் தொடர வேண்டும் இந்தத் தொடர்.
-டாக்டர் கே,பி, இராமலிங்கம், முன்னாள் எம்.பி.
அற்புதமான தொகுப்பு
24 ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றை மிக அழகாக, தெளிவாகத் தொகுத்து எழுதிய ஆசிரியரைப் பாராட்டுகிறோம். முந்தைய தலைமுறை அரசியல் நிகழ்வுகளை அறிய உதவும் அற்புதமான தொகுப்பு.
-வே.சதாசிவம், வத்திராயிருப்பு.
ஆய்வுத் தொடர்...
முக்கிய நிகழ்வுகளையும் அதன் பின்னணியையும் உள்ளது உள்ளபடியாக, யாருடைய மனதும் புண்படாதவாறு தொகுக்கப்பட்டுள்ள நல்லதொரு தொடர் இது. இந்தியாவில், ஏன் வெளிநாடுகளில் கூட அரசியல் படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வு நோக்கில் பயன்படும் வகையில் எழுதப்பட்டுள்ளதே இதன் சிறப்பு.
-தி.பிரவீன்குமார், கே.ஜி.எஃப்.
வரவேற்கிறோம்...
'பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்' தொடர் குறித்த வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள், புத்தக வடிவம் பெறும்போது அதில் இணைக்கப்படும்.