'ஏன் சுமி? உங்கூடப் படிச்ச.. அந்தப் பொண்ணு.. அம்சா.. உனக்கு ரொம்ப ஃபிரண்டா?'' என்று ஊரிலிருந்து சில வருடங்கள் இடைவெளிக்குப் பின்னர் வந்திருந்த அத்தை கேட்டதற்கு என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை .
அம்சா.... !! அவள் என் தோழியா?, எதிரியா? எனக்கே தெரியவில்லை. 'சட்'டென என் மனம், எங்கள் ஊர்ப் பள்ளியின் ஐந்தாம் வகுப்புக்குப் போய்விட்டது.
'சுமதியும், அம்சாவும் சண்டைப்பா.. ரெண்டு பேரும் பேச மாட்டாங்க'' என்று என் வகுப்பில் முதல் பெஞ்சிலிருந்து, கடைசி பெஞ்ச் வரை யாரைக் கேட்டாலும் இப்படித்தான் சொல்லுவார்கள். அது டீச்சர் வரை போய், அவங்க எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு, ' என்ன ரெண்டு பேரும் பேசிக்க மாட்டீங்களாமே?
நீங்க நல்ல பிள்ளைகள்னு எல்லாரிட்டயும் சொல்லிட்டிருக்கேன். என் வகுப்பில இருக்கற பிள்ளைகள் இப்படி இருக்கலாமா? எங்கே ரெண்டு பேரும் கை குடுங்க பார்க்கலாம்'' என்றதும், முதலில், கையை நீட்டியது அம்சா. என் கை கொஞ்சம் தயங்கியபோது, டீச்சரே, என் கையை இழுத்து , அம்சாவின் கையோடு சேர்த்துவிட்டார்கள்.
அடுத்த நாள் அம்சாவே என்னிடம் தயங்கி, என்ன பேசுவதென்று தெரியாமல், ' வீட்டுப் பாடம் எழுதிட்டயா?'' என்றாள்.
' ம்... நீயி?''
'நானும் எழுதிட்டேன். உன் கவுனில ரோஜாப் பூ நல்லாயிருக்கு?'' என்றாள். உடனே அம்சாவை எனக்குப் பிடித்துவிட்டது.
'எங்க அம்மா போட்டது?'' என நான் பெருமையாக, கவுனைத் தூக்கிக் காட்டினேன். நான் படித்த பள்ளியில் வாரம் ஒரு நாள் மட்டுமே யூனிஃபார்ம். அம்மா துணிகளில் அழகாய்ப் பூவேலை செய்வாள்.
டீச்சரெல்லாம் கூட சில சமயம் என் டிரஸ்ஸை பாராட்டுவதுண்டு. ஆனாலும், இப்போது, அம்சாவே சொன்னதும் எனக்கு ரொம்பப் பெருமையாய் இருந்தது. 'என்னைஎல்லாரும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும்' என்ற என் மனநிலையை, அதற்காகவே என்னைச் சுற்றிலும் ஒரு கூட்டம் இருப்பதை நன்கு உணர்ந்திருந்தவளாய், அம்சா நடந்துகொண்டதை நான் அப்புறமாய் காலேஜ் , வேலை என்று போய்த்தான் புரிந்துகொண்டேன்.
அந்த அளவு புரிதல் அவளுக்கு அந்த வயதிலேயே வரக் காரணம், அவள் குடும்பச் சூழலும், வளர்ந்த விதமும் கூட இருக்கலாம்.
அம்சாவின் பாராட்டால் உச்சி குளிர்ந்துபோய், 'இனிமேல் அவளுடன் சண்டையே போடக் கூடாது' என நான் நினைத்ததெல்லாம், அன்று, காலையில், அவள் சுசீலா டீச்சர் கேட்ட கேள்விக்கு என்னை முந்திக் கொண்டு பதில் சொல்லவும், அப்படியே மாறிவிட்டது.
அவளை நான் முதல் முதலில் பார்த்தது கூட அப்படி ஒரு வேளையில்தான்!
அப்போது நான் நான்காம் வகுப்பில் இருந்தேன். படிப்பு, பாட்டு, நடனம் என்று எல்லாவற்றிலும் முதல். அதனால் வகுப்பிலும், துறுதுறுவென்றிருப்பேன். எல்லா டீச்சருக்கும் பிடித்தவளாய் நான் இருந்தாலும், எனக்கு, சுசீலா டீச்சரை ரொம்பப் பிடிக்கும். அவங்க கட்டும் புடவையில் அது எந்த கலராய் இருந்தாலும், எங்கேயாவது கொஞ்சம் ரோஸ் கலர் இருக்கும். எனக்கு ரோஸ் கலர் பிடிக்கும்.
டீச்சர் ரொம்ப நீட்டாகப் புடவை கட்டுவார்கள். தினம் பூ வைத்துகொண்டு வருவார்கள். டீச்சர் வந்ததுமே, ஒரு மென்மையான நறுமணம் எங்களை, சூழ்ந்துகொண்டு, ஏதோ புது உலகில் இருப்பதுபோல் நாங்கள் வகுப்பில் சந்தோஷமாய் இருப்போம்.
உள்ளே நுழைந்ததும், 'புத்தகம், நோட்டை, அதற்கு வலிக்குமோ?' என்ற பாவத்துடன் மென்மையாக, டேபிளில் வைத்து விட்டு, எங்கள் எல்லாரையும் பார்த்து சிரிப்பார்கள். நான் எப்போதுமே முதல் பெஞ்ச். டீச்சர் வந்ததும், என்னைத்தான், ஆஃபீஸ் ரூமிலிருந்து தண்ணீர் எடுத்துவருவது, சாக்பீஸ் எடுத்து வருவது எல்லாம் சொல்லுவார்கள்.
ஒரு பத்து நாள்தான் இருக்கும். திடீரென ஒருநாள், இந்த கடு கடு சாந்தா டீச்சர் எங்கள் வகுப்புக்கு வந்து, 'இனி சுசீலா டீச்சர் ஐந்தாம் வகுப்புக்கு . நான்தான் உங்களுக்கு...'' என்று சொல்லி விட, எனக்கு உடனே, 'ஐந்தாம் வகுப்பு போய் விட மாட்டோமா?' என்றிருந்தது. ஐந்தாம் வகுப்பு முழுவதும், எங்களுக்கு சுசீலா டீச்சர்தான். 'தினம் அவங்களைப் பார்க்கலாம்' என்ற ஆசையுடனேயே ,ஒருவழியாய் நான்காம் வகுப்பை முடித்தேன்.
ஐந்தாம் வகுப்பில், முதல் நாள் அன்று, எங்கள் சுசீலா டீச்சர் முழுக்க, முழுக்க ரோஸ் கலரில் ஒரு புடவை கட்டிக் கொண்டு தாமரைப் பூப்போல மிதந்து வந்தார்கள். வழக்கம் போல முதல் பெஞ்சில் நான். என்னைப் பார்த்ததும் சிரித்தார். அவ்வளவுதான். 'ஏய் என்னைப் பார்த்துதானேப்பா சிரிச்சாங்க''ன்னு எல்லார்கிட்டேயும் கேட்டு, 'ஆமாப்பா'' என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.
'இன்னிக்கு முதல் நாள். நாம ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் படிப்போம்'' என்று போர்டில் ஒரு நாலு வரிப் பாடலை எழுதிப் போட்டார். திரும்பி எங்களைப் பார்த்து, 'இப்போ நான் ஒரு அஞ்சு நிமிசம் தரேன். நல்லாப் படிச்சுட்டு, யாராவது, பார்க்காமச் சொல்லுங்க இந்தப் பாட்டை...'' என்றார். இது எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவங்க அப்படிச் சொன்னா, நான்தான் முதல்ல சொல்லுவேன். டீச்சரும் என்னையே சிரிப்புடன் பார்த்துக்கிட்டு இருக்காங்க. திடீர்ன்னு, பின்னாடி பெஞ்சிலேர்ந்து, ' டீச்சர் நான் சொல்றேன்'' என்று ஒரு குரல். வெடுக்கெனத் திரும்பினேன்..
டீச்சர் கூட ஆச்சர்யமாப் பார்த்தாங்க. அப்போதுதான் நான் அம்சாவை முதல் முதலாகப் பார்த்தேன்.
'உன் பேரு என்ன? புதுசா சேர்ந்திருக்கியா?''
'ஆமா டீச்சர். என் பேரு அம்சவல்லிங்க டீச்சர். எங்க அப்பா இந்த ஊர்ல வேலைக்கு வந்துட்டாங்க அதான் இங்கே சேர்ந்திருக்கேன்'' என்றாள்.
'பார்க்காம சொல்றயா?'' என்று டீச்சர் கேட்ட அடுத்த நொடியில் கண்ணை மூடிக் கொண்டு, கடகடவென, நாலு வரியையும் ஒப்பித்துவிட்டாள்.
நான் கூட இத்தனை வேகமாகச் சொல்ல மாட்டேன். டீச்சர், ' வெரி குட்'' என்றதுடன், எல்லாரையும் கைதட்டச் சொன்னார்கள். நான் சத்தம் வராமலேயே கைகளைத் தட்டும் பயிற்சியில் இருந்தேன்.
'அம்சவல்லி.. கும்சவல்லி பேரப் பாரு நல்லாவே இல்லை. என் பேரு எவ்வளவு சின்னதா, அழகா இருக்கு, சுமதின்னு' என்று மனதில் நினைத்துகொண்டு நான் அவளையே பார்த்துகொண்டிருந்தேன்.
அந்த வகுப்பு முடிந்ததும், நான் என் சிறு படையுடன் போய் அவளைப் பார்த்த போது, முதலில் கேட்ட கேள்வி, 'அந்தப் பள்ளிக்கூடத்தில நீ எத்தனாவது ரேங்க் வாங்குவ?'' என்றுதான்.
' ம்... பஸ்ட்தான் எப்பவும். எப்போவாச்சும். ரெண்டாவது...'' என்று அவள் சிரித்துகொண்டே இரண்டு விரல்களைக் காட்டினாள். ஒரு பச்சைக் கலர் பாவாடை, மஞ்சள் கலர் சட்டை போட்டிருந்தாள். சட்டையில் பட்டன் இல்லாமல் பின் குத்தியிருந்தாள்.
அப்போதெல்லாம், கவுன், ஸ்கர்ட் என்று போட்ட பிள்ளைகள் ஓரளவு வசதியான வீட்டுப் பிள்ளைகளாகவும், சீட்டிப் பாவாடை, சட்டை போட்ட பிள்ளைகள் கொஞ்சம் வசதி குறைந்தவர்களாவும் இருந்தனர். நீண்ட இரட்டை சடையை மடித்து, மஞ்சள் கலர் ரிப்பனால் கட்டி, முன்னால் போட்டிருந்தாள். நெற்றியில், ஒரு கோடாக விபூதி பூசியிருந்தாள்.
' ஏய் சுமதி உனக்குப் போட்டி வந்திருச்சுப்பா? இனி நீ அவ்வளவோதான். இந்தா இந்த அம்சுதான் இனிமே ஃப்ர்ஸ்டு ரேங்க்கு.... என்னப்பா....'' என்று ஒரு பெண் சொல்ல, அங்கே, எனக்கு எதிராக, அம்சாவுக்கு ஆதரவாக என ஒரு அணி உருவாகிவிட்டது.
'இங்க பாருப்பா.... என்ன அம்சுன்னு சொல்லாதே. அம்சான்னு சொல்லு. இல்ல... அம்சவல்லின்னு கூப்பிடு. அம்சுன்னா எனக்குப் பிடிக்காது...'' என்று தனக்கு ஆதரவாகப் பேசிய பெண்ணிடம் அவள் சொல்ல அப்போதே நான் தீர்மானித்துவிட்டேன். அவளை எப்போதும் அம்சு என்றே கூப்பிடுவது என்று, அதிலிருந்து ஆரம்பித்தது, எனக்கும் அம்சாவுக்குமான பனிப் போர்.
காலாண்டுப் பரீட்சையில் அம்சாவே முதல் ரேங்க். அதை என்னால் தாங்கவே முடியவில்லை. ஏதோ ஜன்ம விரோதி போல அவளைப் பார்க்க ஆரம்பித்தன். எங்கே போனாலும், எனக்கென ஒரு அணி, என் பின்னாலே வருவது போல, இப்போது அம்சாவின் பக்கமும் ஒரு படை இருந்தது. அம்சா வந்த இரண்டாவது நாளே சுசீலா டீச்சர், அவளை முதல் பெஞ்சில் உட்கார வைத்து விட்டார். என்னருகே இல்லாமல், எனக்கு எதிர் வரிசையில் இருந்தாள்.
'எங்க சுசீலா டீச்சருக்கு.. தண்ணீர் சாக்பீஸ் எடுத்து வைப்பது. போர்டைத் துடைத்து வைப்பது..'' என நான் செய்தது எல்லாம் அவள் செய்து அவங்களுக்கு செல்லப் பிள்ளையாகி விட்டாள். அவள் முதல் ரேங்க் வாங்கியது, முதல் பெஞ்சுக்கு வந்தது எல்லாவற்றையும் தாங்கிக் கொண்ட எனக்கு, அவள் டீச்சரின் மனதில் இடம் பிடித்தது தான் பொறாமையை, ஆத்திரத்தை உண்டாக்கிவிட்டது.
தினம் ஏதாவது காரணத்தை வைத்து அவள் என்னுடன் பேச வருவாள். நான் அப்போதெல்லாம் அவளை,''அம்சு, அம்சு'' என்று கூப்பிட்டு அவள் முறைப்பதைப் பார்த்து சிரித்துகொண்டிருப்பேன். அவள் நெற்றியில் எப்போதும் ' பளிச் 'சென்று விபூதி ஒற்றை கோடாகப் பூசியிருப்பாள். அதன் பொடி கொஞ்சம் அவள் மூக்கில் உதிர்ந்திருக்கும்.
அது அப்படியே அவள் மூக்கிலேயே சாயங்காலம் வரை இருக்க வேண்டும். அப்படி ஒரு விநோத வழக்கம் அவளுக்கு..!
யாராவது சொன்னாலும் , துடைக்கப் போனாலும் சண்டையே போட்டு விடுவாள். அம்சாவுக்கும் அவ்வளவு கோபம் வரும் என்று எனக்கு அப்போதுதான் தெரிந்தது. தினம் ஒரு வம்பு என்ற சாக்கிலாவது அவளிடம் நான் பேசி விடுவேன் ஒரேடியாகப் பேசாமல் போனது என்றால்? அது அந்த ஊஞ்சல் சண்டைக்குப் பின்னர்தான்!
எப்போதுமே, விளையாடும் இடத்தில், என் அணிக்கும், அம்சாவின் அணிக்கும் சின்னச் சின்ன சண்டைகள் வந்துகொண்டே இருக்கும். பொதுவாக, அம்சா வந்துதான் சமாதானம் ஆகும். விளையாடும் இடத்தில் அன்று புது ஊஞ்சல் மாட்டியிருந்ததால், எப்போது மணி அடிக்கும், ஊஞ்சலுக்கு ஓடுவோம் என்றிருந்தது.
அன்று என்னவோ டீச்சர் அதிசயமாக என்னிடம், நோட்டை எடுத்துகொண்டு வரச் சொல்லி விட, என் படைகளிடம் ஊஞ்சலில் இடம் பிடிக்கச் சொல்லி விட்டு, நான் டீச்சர் பின்னால் வேகமாய் ஓடினேன்.
நான் வந்து பார்த்தபோது, அம்சாவும், அவளைச் சேர்ந்தவர்களும் ஊஞ்சலில் ஏற்கெனவே இடம் பிடித்திருக்க, என் படை அவர்களுடன் சண்டையை ஆரம்பித்திருந்தது. அம்சாவும் என்னவோ, விட்டுக் கொடுக்காமல், 'நாங்கதான் முதல்ல வந்தோம்' எனக் கத்திக் கொண்டிருந்தாள். ஊஞ்சலில், ஏற்கெனவே அம்சாவின் தோழிப் பெண் ஒருத்தி உட்கார்ந்துவிட்டாள். லேசாக ஆடியபடி அவள் இருந்தது வேறு எனக்கு எரிச்சலைக் கிளப்பியது. புது ஊஞ்சலில் அம்சாவின் ஆள் உட்கார்ந்தது, அம்சா கத்தியது, எல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
'கொஞ்ச நேரம் நீங்க சறுக்கு ஆடிட்டு வாங்க, அப்புறமா நாங்க ஊஞ்சல் தரோம்' என்று அவள் என்னவோ அம்சாவும் ராணி போல் எங்களிடம் ஆணையிட, என் படை கூட கொஞ்சம் பின் வாங்கியது. ஆனால், எனக்குப் பொறுக்கவில்லை. அம்சுவின் மேலிருந்த அத்தனை ஆத்திரமும் ஒன்றாய்ச் சேர்ந்து கொள்ள, நான் , வேகமாய்ப் போய், ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பிடித்து, சட்டெனக் கீழே தள்ளி விட்டேன். அந்தப் பெண் எதிர்பாராமல் கீழே விழுந்ததில், பயந்து விட்டாள். காலில் அடி வேறு. அழ ஆரம்பித்து விட்டாள்.
எனக்கு உள்ளே பயமாக இருந்தாலும், ஆடிய ஊஞ்சலைப் பிடித்து நிறுத்தி அதில் ஏறி உட்கார்ந்துவிட்டேன். இரண்டு கைகளாலும் ஊஞ்சல் கம்பியைப் பிடித்துக் கொண்டு என் படையைப் பெருமையாகப் பார்த்தேன். அம்சா, கீழே விழுந்த பெண்ணை ஓடி வந்து தூக்கிவிட்டாள். அதன் பின்னர் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், 'வாங்கப்பா, நாம் சறுக்கு ஆடலாம். வலிக்குதா, சரியாய்ப் போயிடும், வா..'' என்று அடிபட்ட பெண்ணின் தோளைப் பிடித்தபடி அவள் தோழிகளுடன் நடந்து போனாள்.
கொஞ்ச தூரம் போனவள் அந்தப் பெண்ணப் பிடித்தபடி, என்னை ஒரு நொடி திரும்பிப் பார்த்தாள். வெறுப்பு, கோபம், வருத்தம் என எல்லாம் கலந்த அந்தப் பார்வையும், அவள் நெற்றியின் அந்த விபூதிப் பூச்சும், என்னை நடுங்கச் செய்துவிட்டது. அதற்குப் பின்னர் ஒருநாளும் அவள் என்னோடு பேசவே இல்லை.
அந்த ஊஞ்சல் நிகழ்ச்சிக்குப் பின்னர் , எப்போது அம்சாவை நினைத்தாலும், அவளின் அந்தப் பார்வைதான் கண்முன்னே தெரியும். அதனாலேயே அவளுடன் பேசத் தயங்கினேன். என்னவோ, அம்சாவும் அவளாக என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். அந்த வருடம் முடிய சில மாதங்களே இருந்த நிலையில், அப்படியே போய் விட்டது. நான் செய்தது தப்பு என்பதாலோ இல்லை.
'ஆறாம் வகுப்புக்குப் போயாச்சு.. இனிப் பெரிய பிள்ளைகள்'' என்று அம்மாவும், டீச்சரும் சொன்னதாலோ நான் முதல் நாளே அம்சாவுடன் பேசிவிட வேண்டும் என்ற ஆசையுடன் ஆறாம் வகுப்பில் நுழைந்தேன். ஆனால், அம்சா வரவில்லை. அடுத்த நாள், அதற்கடுத்த நாள், ம்ஹூம் வரவே இலல்û. ஒரு வாரமே ஆகிவிட்டது அம்சாமட்டும் ஸ்கூலுக்கு வரவில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது. வேறு வழியில்லாமல், அம்சாவிடம் நன்றாகப் பேசும் அந்தப் பெண்ணிடம் போய், 'ஏன் அம்சா வரவில்லை?'' என்று கேட்டுவிட்டேன்.
' ஐய... உனக்குத் தெரியாதா? அவங்க அப்பா செத்துப் போயிட்டாங்கல்ல... அதனால அது இனிமே படிக்க வராது'' என்று சர்வ அலட்சியமாய் சொன்னாள்.
எனக்குப் புரியவில்லை. எப்படிப் படிக்காமல், ஸ்கூலுக்கு வராமல் இருக்க முடியும்? அப்பாவே இல்லாமல் ஒரு வீடு எப்படி இருக்கும்?
' எங்கூடப் படிக்கிற ஒரு பொண்ணுக்கு அப்பாவே இல்லையாம்? யாரும்மா அவங்களுக்கு எல்லாம் செய்வா?'' என்று மிகக் கவலையுடன் அம்மாவிடம் கேட்டேன்.
'இனிமே அவங்க அம்மாதான் எல்லாம் செய்வாங்க. பாவம்'' என்றாள் அம்மா. இருந்தாலும், சில வேலைகள், வெளியே போவது, சைக்கிளில், வெளியே கூட்டிப் போவது, சர்க்கஸ் போவது... இதற்கெல்லாம் யாருடன் போவாள்?
அம்சாவின் வீட்டில் அப்பா இல்லை என்பதை என்னாலே நினைத்தும் கூடப் பார்க்க முடியவில்லை. கடைக்குப் போவது, வெளியே போவது ஊருக்குக் கூட்டிப் போவது, சில சமயம் எனக்கும், தம்பிக்கும் டிரெஸ் மாட்டுவது என வீட்டில் நடக்கும் நான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் அப்பா இருக்க, அப்படி ஒருத்தர் இல்லாமல், அவள் வீட்டாரும் , குறிப்பாக அம்சாவும் என்ன செய்வாள் ? பாவம் அம்சா? என்று நினைத்த , அடுத்த நொடியில், அவள் மேல் இருந்த வெறுப்பு, பகை எல்லாம் ஓடிப் போக, அன்பு வெள்ளமாய் பெருகி ஓடத் துவங்கி விட்டது. உடனே அம்சாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
அவள் வீடு அம்மன் கோயிலுக்கு எதிரே இருக்கிறது என்று யாரோ பேசிக் கொண்ட நினைவில், அந்தப் பக்கம் போனேன். கோயிலுக்குப் பக்கத்தில், எல்லாம் கொஞ்சம் பெரிய வீடுகளாய் இருக்க, எதிரில் இருந்த சின்னச் சின்னக் குடிசை வீடுகளில், ஒன்றின் வாசலில் அவள். அம்சாதான்.
நான் அவளை அங்கே எதிர்பார்க்கவே இல்லை. பக்கத்தில் உள்ள வீடுகளில் கேட்கலாம் என்று இருக்கும்போது, அவளைத் திடீரெனப் பார்த்தது எனக்கே அதிர்ச்சியும், அவளைப் பார்த்து விட்டோம் என்ற பதட்டமும் சேர, நான் அவளைப் பார்த்த படி ஓடினேன். அந்தச் சின்ன வீடுதான் அவளுடையது என என்னால் நம்பவே முடியவில்லை. ஏனோ அம்சாவைப் பார்க்க ப் பாவமாய் இருந்தது. வீட்டு எதிரே ரோட்டோரமாக , அவள் அம்மா இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள்.
அம்சா, அம்மாவுக்குத் துணையாக ஏதோ செய்து கொண்டிருந்தாள். கையில் ஏதோ பாத்திரம். ஒரு அழுக்குப் பாவாடை, மேலே ஏதோ ஒரு சட்டை அதற்கு மேல், ஒரு கிழிந்த அழுக்குத் துண்டைப் போட்டுக் கொண்டு,இருந்தாள். ஒரு சடை அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. முக்கியமாக எனக்கு உறுத்தியது. அவள் நெற்றியில், விபூதி இல்லை .
' அம்சு, அம்சு ' என்று நான் மெதுவாகக் கூப்பிட்டேன். அவ்வளவுதான், கையில் இருந்ததைக் கீழே போட்டுவிட்டு, உள்ளே ஓடிவிட்டாள்.
'யாரும்மா? கூடப் படிக்கிறயா? நான் அவ அம்மாதான் என்ன சொல்லு?''
'இல்லை.. ஏன் அம்சு ஸ்கூலுக்கு வரலை?''
'அது எப்படி வரும் இவங்க அப்பா செத்துப் போயிட்டாருமா நான்.இதோ பாரு.. . இந்த இட்லி வித்துத்தான் பொழைக்கணும். இந்தப் புள்ளக்குக் கீழே இன்னும் ரெண்டு புள்ளங்க இருக்கு. வளர்க்க வேணாமா? இந்தப் புள்ளையை எப்படிப் படிக்க வைக்கறது? பள்ளிக் கோடம் அனுப்புறது? சொன்னாப் புரியலை அதுக்கு . ஏய் இந்தாடி, ஒரு நிமிசம் வந்துட்டுப் போடினா...உன்னப் பாக்கணும்னு வந்திருக்கு பாரு.... அது ஒரு கிறுக்கு.. மூஞ்சியைத் தூக்கி வைச்சுகிட்டு, தினம் அழுதுட்டு உட்காந்திருக்கு.''
எனக்கு அவள் சொன்னதில் புரிந்தது, அம்சா இனிப் பள்ளிக் கூடம் வரமாட்டாள் என்பதுதான்.
' ஏய்.. . வா புள்ள வெளில... அது வராது .. நீ நாளக்கு வேணா வா... நான் பேசி சமாதானமா சொல்லி வைக்கிறேன். பள்ளிக் கோடம் போவ முடியலைன்னு இருக்கு. நல்லாப் படிக்குதுதான். வீட்டு நெலைமை இப்படி ஆயிடுச்சே... என்ன செய்யறது?'' என்று அவள் அம்மா ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தாள் . நான் திரும்பி விட்டேன்.
வீட்டுக்குப் போவதற்காக நான் திரும்பி ஓடியபோது, நான் போட்டிருந்த கவுனில், பையில், கலகலவென்ற சத்தம். ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டேன். அம்சா ஜோராக, ஐந்து கல் விளையாடுவாள். அவளுடன் யாராலும் போட்டி போட முடியாது.
எங்கே இருந்தோ பொறுக்கி எடுத்து, நல்ல உருண்டையாக, பளபளவென்ற கூழாங்கற்களைப் பொக்கிஷம் போல வைத்திருப்பாள். விளையாடும்போது, எல்லார் கண்ணும் அந்த அழகான கற்கள் மேல்தான் இருக்கும். எத்தனை உயரத்துக்குத் தூக்கிப் போட்டாலும், வளைந்து, நெளிந்து ஒரு கல் கூட கீழ விழாமல் பிடித்து விடுவாள்.
அவளுக்குக் கொடுப்பதற்காக, என்னிடம் இருந்ததிலேயே மிகவும் நல்ல கற்களாகத் தேர்ந்தெடுத்து என் பையில் வைத்திருந்தேன். அவள் வீட்டுப் பக்கம் நின்றபோது கூட, என் ஒரு கை அந்தக் கற்களைப் பிடித்தபடி, பையின் உள்ளேயேதான் இருந்தது. ஐயோ அவள் அம்மாவிடமாவது கொடுத்திருக்கலாமே என்றிருந்தது. திரும்பிப் போலாமா? நேரமாகி விட்டது. அம்மா தேடுவாள். அத்தை வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன். அத்தை வீட்டில் எட்டிப் பார்த்து விட்டுத்தான் போக வேண்டும்.
அத்தை வீட்டுக்குப் போய்க் கொண்டே யோசித்தபோதுதான் திடீரென என் நினைவுக்கு வந்தது.
நான், எப்பவும் போல், அவளை 'அம்சு 'என்றே கூப்பிட்டு விட்டேன். 'அம்சா 'என்று கூப்பிட்டிருந்தால் நிச்சயம் வந்திருப்பாள். நானும் பேசியிருப்பேன். இனி நானும் இந்த ஸ்கூலில் இல்லை. அம்சா. அப்பாவுக்கு வேறு ஊரில், வேலையில் சேரணும். நானும் போகிறேன். உன்னுடன் பேசத்தான் வந்தேன் என்று அவளிடம் சொல்லி, இந்தா உனக்காக இந்த கல் கொண்டு வந்தேன் என்று கொடுத்திருக்கலாம். என்னைப் பார்த்ததும் அவள் வீட்டுக்குள் ஓடியதே என் கண்ணில் நின்றது.
அடுத்த நாள் எப்படியாவது போய், 'அம்சா' என்று கத்திக் கூப்பிட்டு அவளுடன் பேசிவிட்டு இந்தக் கல்லையும் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துகொண்டவுடன் தான் தூக்கமே வந்தது. ஆனால், அடுத்த நாள் அம்மா என்னை வெளியே விடவே இல்லை. சாமான் எல்லாம் கட்டவேண்டும். அன்று இரவே ஊருக்குப் போகணும் என்று சொல்லி விட்டாள். எங்களை வழியனுப்ப அத்தை வந்திருந்தாள்.ஆனால் அப்போது அம்சாவுக்குக் கொடுக்க வைத்திருந்த கல் எல்லாம், என் சாமானோடு ஐக்கியமாகி எங்கே யோ எடுக்க முடியாமல் இருந்தது.
அப்புறம் நான் அம்சாவைப் பார்க்கவே இல்லை. ஊரிலிருந்து அத்தை ரொம்ப வருடங்களுக்குப் பின்னர், என் திருமணத்துக்கு வந்தவள், ' ஏய் சுமி, உன் கூடப் படிச்சுதாமே அம்சான்னு ஒரு பொண்ணு அவ எங்கே என்னப் பார்த்தாலும் உன்னைப் பத்திக் கேட்பா..'' என்றதும், அம்சாவுக்கும் என்னோடு பேச ஆசை இருந்ததைப் புரிந்து கொண்டதும், இதற்காகவாவது அந்த ஊருக்கு ஒரு தடவைபோக வேண்டும் என நினைத்தேன்.
ஒரு வருடமானதும் என் குழந்தையைப் பார்க்க வந்தபோதும், அத்தை அம்சாவைப் பார்த்ததை அவள் என்னைக் கேட்டதைச் சொன்னாள். இப்போது அம்சாவைப் பற்றிக் கேட்டதும் அவள் நினைவுகளில் மூழ்கி விட்ட என்னை நடுங்க வைத்தது.
திடீரென அத்தை சொன்ன,. 'அந்தப் பொண்ணு இப்போ இல்லைடா சுமி.. பாவம் போயிட்டா...'' என்ற வார்த்தைகள்..
'என்ன.. அம்சா போய் விட்டாளா...'' என்று எப்போதாவது ஊருக்குப் போனால், 'அம்சாவுடன் பேசிவிட வேண்டும்' என்று மனதின் மூலையில் என்றோ சாப்பிட்ட ஜவ்வு மிட்டாய் இனிப்பைப் போல ஒட்டிக் கொண்டிருந்த நினைப்பு இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைய ஆரம்பித்தது.
' எப்படி அத்தை ? ' என்று நான் அதிர்ச்சியுடன் கேட்க, ' ஏதோ வியாதி. வைத்தியம் பார்க்க வழியில்லை. . காசில்லாத கொடுமை. வறுமைதான் வேறென்ன' என்று எளிதாகச் சொல்லி விட்டாள்.
வறுமை. நான் கடைசியாக அம்சாவைப் பார்த்தது கூட அப்படித்தான். ஆனால் அப்போது அதுதான் வறுமை எனப் புரியாத வயது! ஒரு சாயம் போன பாவாடை, மேலே சட்டை.. அதை மூடியிருந்த அழுக்குத் துண்டு இப்படித்தான் நான் பார்த்தபோது அவள் இருந்தாள்.ஒரு நிமிடம்தான் ! என்னைப் பார்த்ததும் வீட்டுக்குள்ளே ஓடிவிட்டாள். நானும் பேசாமல் வந்து விட்டேன். இனி? ?
அம்சாவுடன் நான் பேசவே முடியாது . என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.
' ஏய் , என்ன இது ? எப்பவோ சின்ன வயசில கூடப் படிச்ச பொண்ணு செத்துப் போனதுக்கு.. இப்படி அழறே? உனக்கே பத்து வயசில பொண்ணு இருக்கா இப்போ...?''
'தினமும் சண்டைதான் போடுவோம்.. ஆனா.. அவளுடன் பேச வேண்டும் என்று மட்டும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்' என்று அத்தையிடம் இப்படிச் சொல்ல ஏனோ மனம் வரவில்லை. இப்போது..
என்னுடன் பேசாமலேயே அவள் நட்பை ஆழமாய் என்னுள் விதைத்து விட்டாள் அம்சா.
அம்சாவிடம் நான் கொடுக்காமல் விட்ட ஐந்து கல் இன்னும் என் பெட்டியில் அப்படியே பத்திரமாக இருக்கிறது. அன்று அவளுக்குக் கொடுக்க என்று எடுத்துச் சென்றபோது அந்தக், கூழாங்கற்கள் என் கைகளின் வியர்வை ஈரத்தோடு பிசுபிசுவென ஒட்டிக் கொண்டிருந்ததைப் போல, 'அம்சு.... ஸாரி.. ஸாரி.... அம்சா எனும் அன்புத் தோழியின் நினைவுகள்...' என்ற ஈரத்துடன் என்றும் கரையாமல் என் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அம்சா என் தோழி