தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றில் மட்பாண்டங்கள்!

வாழ்க்கைக்கு அவசியமான உணவு அளிக்கும் உழவுத் தொழிலுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றில் மட்பாண்டங்கள்!
Published on
Updated on
3 min read

வாழ்க்கைக்கு அவசியமான உணவு அளிக்கும் உழவுத் தொழிலுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். பொங்கல் பண்டிகையின்போதும், மற்ற இறைவழிபாட்டின்போதும் மட்பாண்டம் என்ற மண்பானை முக்கிய இடம் பெறுகிறது.

மனிதன் நாகரிகம் அடைவதற்கு முன், உணவு உற்பத்தி செய்ய தொடங்கிய புதிய கற்காலத்தில், அன்றாட தேவைகளுக்கு கையால் செய்யப்பட்ட பானைகளை வடிவமைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்தினான். இத்தகைய பானைகள், பானை ஓடுகள் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களில் புதிய கற்கால அகழ்வராய்சிகளில் கிடைத்துள்ளன.

இதனையடுத்து வந்த இரும்புக் காலத்தில் மனிதன் முன்னேற்றம் அடைந்து, சக்கரத்தில் வைத்து செய்யப்பட்ட பானைகள், செய்து சூளையில் வைத்து சுட்டு பயன்படுத்தினர். இந்தக் காலத்தைச் சேர்ந்த பானைகள் தமிழநாடு முழுமையிலும் தொன்மைச் சிறப்புமிக்க இடங்களில் கிடைக்கின்றன.

சூளையில் வைத்து சுடும்பொழுது, பானையின் உட்பகுதி கறுப்பு நிறமாகவும், வெளிப்பகுதி சிவப்பு நிறமாகவும் காணப்படும். இத்தகைய பானைகளையும், பானை ஓடுகளையும் 'கறுப்பு - சிவப்பு பானை' என அழைப்பர்.

இந்தக் காலத்தில் மனிதன் பெரிதும் நாகரிகம் அடைந்த நிலையில் எழுத்துகளையும் தனது பெயரையும் பானை மீது பொறிக்கும் நிலைக்கும் மனிதனின் உயர்ந்த நாகரிகம் அடைந்த நிலையைக் காண்கிறோம். பானை மீது பொறிக்கப்பட்ட எழுத்துகள், பண்டைய தமிழ் எழுத்துகளாக 2,600 ஆண்டுகள் பழமை உடையதாக விளங்குகின்றன.

எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளுடன் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்தக் குறியீடுகள் வரலாற்று ஆய்வுக்கு இன்றியமையாததாக விளங்குகிறது. இந்தக் குறியீடுகளின் தொடர்ச்சியாக எழுத்துகள் தோன்றியதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன.

குடவோலை: பண்டைய நாள்களில், கிராம சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஓட்டு பெட்டிகளாக மண்பானைகள் பயன்பட்டதாக அகநானூறு கூறுகிறது. 'குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முதுபாழ் கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்'- (அகம் 77 - 6 - 7) இதுபோன்ற முறையில்தான் பண்டைய நாளில் கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைதான் உத்திரமேரூர் கல்வெட்டு 'குடவோலை முறை' எனச் சிறப்பித்துக் கூறுகிறது.

கோயில்களுக்கு வேண்டிய பானைகள், குடங்கள், சட்டிகள், கலசங்கள் அகல் விளக்குகள் போன்றவற்றையும் செய்து அளித்திருக்கின்றனர். குயவர்களின் நலனுக்காக, நிலங்கள் அளிக்கப்பட்டன. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலம், குசக்காணி, குசபட்டி, குசவன் நிலம், குலாலவிருத்தி என்றெல்லாம் அழைக்கப்பட்டன.

இதுமட்டுமல்லாமல் பண்டைய நாளில் இறந்தவர்களை தாழிகளின் உள்ளே வைத்து புதைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளன. முதுமக்கள் தாழிகளான அவற்றையும், பெரிய மண்பானைகளையும் செய்து அளித்துள்ளனர். சங்க இலக்கியமான புறநானூறு 'கலஞ்செய்கோவே' 'கலஞ்செய்கோவே' (புறம் : 228) என்று அவர்களை குறிப்பிடுகிறது.

பண்டைய நாளில் மண்பாண்டத் தொழில் பெருமளவில் நடைபெற்று வந்ததால் 'குசக்காணம்', 'சக்கரகாணிக்கை', 'திரிகை ஆயம்' போன்ற வரிகள் விதிக்கப்பட்டதை கல்வெட்டுகள் அளிக்கும் செய்தியினால் அறிய முடிகிறது. வேட்கோவர்களின் பெருமை பற்றிய அறியவும் சான்று உள்ளது.

நாகப்பட்டினத்தில் சூளாமணி புத்த விகாரம் அமைக்க முதலாம் இராஜ ராஜசோழனால், 'ஆனைமங்கலம்' என்ற ஊர் தானமாக அளிக்கப்பட்டது. அப்பொழுது, அப்பகுதியில் எல்லைகளை வரையறுத்து அரசனுக்கு கையொப்பம் இட்டு தெரிவித்ததை இந்தப் பகுதியில் உள்ள ஊர்களைச் சேர்ந்த 'வேட்கோவர்கள்' பலர் கையொப்பம் போட்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் ஆனைமங்கல செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது பெருமை அளிக்கக் கூடியதாக விளங்குகிறது.

மேலும் சிந்து சமவெளி நாகரிகப் பண்பாட்டில் கிடைத்த களிமண் அச்சுகளில் காணப்படும் எழுத்துகளும், தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் ஒற்றுமைகள் காணப்படுவது தமிழ்நாட்டு வரலாற்றின் தொன்மைச் சிறப்புக்கு அரிய சான்றாக விளங்குகிறது. இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பானை ஓடுகளுடன் துளையிட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை மிகவும் வரலாற்றுச் சிறப்புடையவையாக விளங்குகிறது.

உணவு சமைத்தவுடன் நீரை வடிய வைக்க இது பயன்பட்டிருக்க வேண்டும். மாங்குடி அகழ்வாராய்ச்சியில் துளையிட்ட பானையின் விளிம்புப் பகுதியில் மீன் குறியீடு காணப்படுவது இத்தகைய பானைகள் மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்பதை உணர்த்துகிறது.

பொதுவாக, தொல்லியல் ஆய்வில் பானை ஓடுகள் அரிய அடிப்படை வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியை அறிவதற்கும் தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை அறிந்து கொள்ள இவை பெரிதும் உதவுகின்றன.

கீழடி, கொடுமணல், கொற்கை, மாங்குடி, அழகன் குளம், வல்லம், உறையூர், கருவூர், அரிக்கமேடு, தேரிருவேலி மாளிகைமேடு (விழுப்புரம்) பட்டரைப்பெரும்புதூர், சென்னானூர், துலுக்கர்பட்டி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பண்டைய தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஒடுகள் கிடைத்துள்ளன.

அயல்நாடுகளான யவனம், சீனம் போன்ற அயல்நாடுகளுடன் தமிழ்நாடு கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பை அறிந்துகொள்ள அரிட்டைன், ரெளலடட், ஆம்பொரா, சீன நாட்டு பானை ஓடுகள் போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த பானை ஓடுகள் அமைகின்றன.

வேட்கோவர்: இத்தகைய சிறப்பு வாய்ந்த மட்பாண்டங்களை உருவாக்கும் 'குயவர்கள்' இன்றும் கிராமங்களில், அனைத்து ஊர்களிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றார்கள். இறைவழிபாடு மட்டுமல்லாமல், திருமணம் போன்ற சடங்குகளிலும் மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குகிறது.

இன்றும் ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் இறைவனுக்கு மண்பானையிலேயே அமுது செய்யப்பட்டு படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மட்பாண்டங்களை உருவாக்கும் குயவர்கள், வேட்கோவர், வேள்கோ, மண்ணுடையான் என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றனர்.

சங்க இலக்கியங்களில் வேட்கோவர்களைப் பற்றியும் மட்பாண்ட வகைகள் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. குழிசி, பானை, குடம், தாழி, தசும்பு போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டதைக் காண முடிகிறது.

இதேபோன்று வேட்கோவர்கள், திருமீயச்சூர், திருப்பணையூர், திருவீழிமிழலை போன்று பல கோயில்களுக்கு விளக்கு எரிக்க தானம் அளித்த செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

தமிழக வரலாற்றில் தொன்று தொட்டு பல்வகையான மட்பாண்டங்கள் வரலாற்றுச் சிறப்பு உடையதையும், அதனை செய்து அளிக்கின்ற கேட்கோவர்களும் பெருமை பெற்று விளங்கியிருக்கின்றனர் என்பதை வரலாற்றுச் சான்றுகளால் அறிய முடிகிறது.

-கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com