'கமலா' என்று கூப்பிட்டவாறே மீனா மாமி வருவது தெரிந்தது. மாமியின் குரல்தான் கணீரென்று இருக்கும்.
'வாங்கோ... வாங்கோ மாமி' என்று கமலாவும் சமையல் அறையிலிருந்து வெளியே வந்தார்.
'எங்கே மணியை காணோம்.'
'இங்கதான் படிச்சிட்டிருக்கான். ஏன் அவனைத் தேடறீங்க?'
'நீ ஒரு உபகாரம் பண்ணணும் கமலா..'
'சொல்லுங்கோ உங்களுக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறேன்?'
'ஒண்ணுமில்ல, ஆஞ்சநேயருக்கு ஒரு வேண்டுதல். ஒரு மண்டலத்துக்குத் தயிர் சாதம் செஞ்சு நீர், மோரு, பானகம் நைவேத்தியம் பண்ணி யாராவது ஒரு பிரம்மச்சாரி பையனுக்குக்குக் கொடுக்கணும்னு ஜோசியர் சொல்லிட்டாரு?'
'அதுக்கென்ன மாமி செஞ்சுட்டா போச்சு..'
'அதெல்லாம் நான் செஞ்சுடுவேன். ஒன் புள்ள மணியை மட்டும் சனிக்கிழமை சாயந்திரமா ஆறு மணிக்கெல்லாம் வந்து அதை வாங்கிட்டுப் போகச் சொல்லணும். அதான்...'
'அங்கியே சாப்பிடணுமா? அவன் கொஞ்சம் கூச்ச சுபாவம் மாமி..'
'ஆறு மணிக்கு எப்படிடி சாப்பிட முடியும். நீர்மோரையும் பானகத்தையும் குடிக்கட்டும். சாதத்தை இங்க ஆத்துக்கு எடுத்து வந்து சாப்பிடட்டும்..'
'சரி மாமி வரச் சொல்றேன்..'
உள்ளே படித்துகொண்டிருந்த மணியின் காதுகளில் எல்லாம் விழுந்தன.
மீனா மாமி சென்றவுடன் மணியின் அறைக்குள் வந்தார் கமலா.
'என்னடா எல்லாம் கேட்டதுல்ல? சனிக்கிழமையை மறந்துடாதே..அவாத்துக்குப் போயிடணும்..'
'என்னாம்மா நீ எல்லாத்தையும் இழுத்து உட்டுக்கறே?'
'ஏண்டா மாமி.. சாமி காரியம்னு கேக்கறா; எப்படி மாட்டேன்னு சொல்றது? அவா என்ன நமக்கு அந்நியமா? தெரிஞ்சவாதான; மாமி பொண்ணு மாலதியும் ஒன் பள்ளிக்கூடத்துலதானே படிக்கிறா? சாக்கெல்லாம் சொல்லிக்கிட்டிருக்காத.. சனிக்கிழமை ஆறு மணிக்கு எல்லாம் அவாத்துக்குப் போயிடணும்' என்று அம்மா சொல்லிவிட்டு போய்விட்டார்.
'இனிமே படிச்ச மாதிரிதான்' என்று மணி நினைத்துகொண்டான்.
மீனா மாமி வீடு அடுத்தத் தெருவில் இருந்தது. பச்சை கேட் போட்ட வீடு. வாசலில் ஒரு பன்னீர் மரம் இருக்கும். பெரிய திண்ணை. இருபது பேர் உட்காரலாம். உள்ளே ரேழியைத் தாண்டி நுழைந்தால் கூடம் உண்டு. கூடத்தின் ஓரத்தில் சிறிய கிணறு.
அவனுக்குத் தெரிந்து வீட்டுக்குள்ளேயே கிணறு உள்ள வீடு அது மட்டும்தான். அந்தக் கிணற்றுத் தண்ணீர்தான் சமையலுக்கும் சாமி பூஜைக்கும். தோட்டத்தில் உள்ள கிணற்று நீர் குளிக்கவும் துணி துவைக்கவும் எடுத்துக் கொள்வார்கள். இதெல்லாம் மணிக்கு அவன் அம்மா சொல்லித்தான் தெரியும்.
'அந்த வீட்டுக்குக் கடைசியாக எப்பொழுது போனோம்' என்று மணி நினைத்துப் பார்த்தான். ஏழெட்டு வருஷம் இருக்கும். எல்லாப் பசங்களோடையும் கொலுவுக்குச் சுண்டல் வாங்கப் போனதுதான். நவராத்திரி வந்துட்டா தெருவுல கொண்டாட்டம்தான்.
ஆளுக்குக் கையில ஒரு பையோட எல்லா வீட்டுக்கும் சுண்டல் வசூல் செய்யப் போவது வழக்கமாக இருந்துச்சில்ல. அதுக்காகவே அந்த வாரம் பூரா கிரிக்கெட்டை சீக்கிரம் முடிச்சுடுவோம். கொலு பாக்கற மாதிரி எல்லார் வீட்லயும் கொஞ்சம் நேரம் நிக்கறதும் வழக்கம்தான்.
மணியிடம் ஒரு செட்டே இருந்தது. நாணு என்னும் நாராயணன், கிட்டா என்னும் கிருஷ்ணமூர்த்தி, ராமு என்னும் ராமலிங்கம், சேகர், இன்னும் சம்பத், சந்துரு என்று ஒரு பட்டாளமே இருந்தது. ஒவ்வொருவருக்கும் பை நிறைய சுண்டல் சேர்ந்துவிடும்.
கொலு என்றால் மேற்குத் தெருவில் ராமசுப்புவாத்துக் கொலுதான் கொலு; அவரு அந்தக் காலத்துலயே அமெரிக்கா போய் வந்த பணக்காரர். நடுமோட்டுலேந்து ஆரம்பிச்சு எண்ணவே முடியாதபடி படிகள் இருக்கும். வருஷா வருஷம் படிங்க அதிகமாயிட்டே போகும்.
எங்களுக்குப் பொம்மைகளைவிட கீழே கட்டியிருக்கற பார்க், ரயில்வே ஸ்டேஷன், மலை, கோயில், விளையாட்டு மைதானம் போன்றவைதான் ரொம்பப் பிடிக்கும். நடு முத்தத்துல பூரா தண்ணி ரொப்பி வைச்சுடுவா. அது நடுவுல ரெண்டடி ஒசரத்துக்கு ஒரு லைட் ஹெளஸ் சுத்தும், நெறைய படகுங்க போயிட்டு வந்துக்கிட்டு இருக்கும். ஒவ்வொரு படகுலயும் சின்ன அகலை ஏத்திவச்சிட்டா அதுபாட்டுக்குச் சுத்திக்கிட்டே இருக்கும்; அதெல்லாம் அந்தக்காலம்.
மணியின் நினைவுகள் அறுந்தன.
தமிழ்ப் பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
'மணி... நேரமாச்சு; சாப்பிட வா?' என்று அம்மாவின் குரல் கேட்டது.
'என்னாடா சனிக்கெழமை தயிர் சாதமா? ரொம்ப நல்லாதாப் போச்சு' என்று அப்பா கேலியுடன் கேட்டார்.
'நான் போகலம்மா; பசங்க எல்லாம் கேலி பேசுவாங்க' என்றான் மணி.
அவன் தட்டில் இட்லிகளைப் போட்டுக்கொண்டே, 'அதெல்லாம் யாரும் பேசமாட்டாங்க. யாராவது எதாவது சொன்னா எங்கிட்ட வந்து சொல்லு. நான் பாத்துக்கறேன்' என்றார் கமலா.
'போயிட்டு வாடா; நல்ல பழக்கம்தான. ஏண்டா அவாத்துப் பொண்ணு மாலதி பத்தாவதுதான படிக்கறா' என்று கேட்டார் அப்பா.
'ஆமாமா; அந்தப் பொண்ணு ரொம்ப வாயாடி' என்று அம்மாவே பதில் சொன்னார்.
'ஆனா நல்லா மேடையிலப் பேசுவாம்மா? எங்கள மாதிரி ப்ளஸ் டூ பசங்களுக்குச் சரியா போட்டி போட்டுக்கிட்டுக் கூட்டத்துலப் பேசுவாம்மா' என்றான் மணி.
'கெட்டிக்காரி போல இருக்கு' என்று அப்பா சான்றிதழ் தந்தார்.
எல்லாருமே தெரிந்த வீடுகள் என்பதால் பெரியவனான பின்னும் இந்தக் கூட்டம் சுண்டல் வாங்குவதை நிறுத்தவில்லை. அப்படித்தான் கடந்த ஆண்டு சுண்டல் வாங்கப்போனது ஞாபகம் வந்தது. மீனா மாமி சுண்டலைப் பொட்டலமாகக் கட்டி வைத்துவிடுவார்.
'ஏண்டி மாலதி ஒன் ஸ்கூலு பசங்க வந்திருக்காங்க பாரு. சுண்டல் எடுத்துகொடு' என்று சொல்லிவிட்டு, அங்கே வந்திருக்கும் மாமிகளைப் பாடச் சொல்லிக் கேட்டு கொண்டிருப்பார் அவர். போன வருஷம் மாலதி சுண்டல் தந்தபோது கை தவறுதலாக மணிக்கு இரண்டு பொட்டலம் வந்து விட்டது.
'இந்தா மாலதி ரெண்டு வந்திருக்கு' என்று கூறிக் கொண்டே மணி ஒன்றை எடுத்து மாலதியிடம் தந்தான். அதற்குள் அது மாமியின் காதில் விழுந்துவிட அவர், 'மாலு, கொடுத்ததை திரும்ப வாங்காதே; இருக்கட்டும் மணி எடுத்துண்டு போ' என்றார். அதற்குப் பிறகு அவர்கள் வீட்டுக்குப் போகவில்லை.
சனிக்கிழமை மாலை விளையாட கிளம்பும்போதே அம்மா சொன்னார்.
'டேய் மணி, சீக்கிரமா அஞ்சரைக்கெல்லாம் வந்துடணும். மீனா மாமியாத்துக்குப் போகணும்..'
அதனாலேயே ஆட்டமிழக்காமல் பேட்டிங் செய்துகொண்டிருந்த மணி, 'டேய், நான் ஆத்துக்குப் போகணும், வேலையிருக்கு, அம்மா வரச் சொன்னா' என்று பாதியிலேயே கிளம்பினான். எல்லாருக்கும் ஆச்சரியமாய் இருந்தது.
'என்னா இவன் என்னிக்குமில்லாம இன்னிக்கு வேலையிருக்குன்னு போறான்' என்றான் நாணு.
அம்மாவும் 'பரவாயில்லையே; நேரத்துக்கு வந்துட்டயே. போயி கைகால் அலம்பிக்கிட்டு நாலு மொழ வேட்டிய எடுத்து வச்சிருக்கேன் பாரு அதைக்கட்டிக்கிட்டுத் துண்டைப் போட்டுக்கிட்டுப் போ' என்றார்.
மணியோ, 'வேணாம்மா; இப்படியே போறேன்' என்று சொல்ல, 'சாமி காரியம்டா, அதுக்கேத்த மாதிரிதான் போகணும்' என்று அம்மா சொன்னார்.
'இது வேறயா' என்று முணுமுணுத்துக் கொண்டே தோட்டத்துக்குப் போனான். தண்ணீர் இறைத்து முகம் அலம்பியவன் வேட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பினான்.
'அம்மா, போயிட்டு வரேன்' என்று சொன்னபோது, 'டேய், பாழ் நெத்தியோடவா போவா? விபூதி இட்டுக்கிட்டுபோ' என்றார் அவன் அம்மா.
நெற்றியில் விபூதியுடன் வேட்டி கட்டிக்கொண்டு போகும்போது தெருவில் எல்லாரும் அவனையே பார்ப்பது போல மணி உணர்ந்தான்.
மீனா மாமி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.
'வா, மணி ஒன்னைத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருக்கன். எங்க வராம இருந்திடுவியோன்னு பயமாயிட்டுது' என்றார்.
'எப்படி மாமி மறப்பேன்? சாமி காரியம் இல்ல.. அதுவும் அம்மா மறக்க விடுவாளா?' என்றான் மணி பதிலுக்கு.
கூடத்துக்கு அவனை அழைத்துச் சென்றார் மாமி. அங்கே கிழக்குப் பார்த்து இவன் உட்கார ஒரு மனைப் பலகை போட்டிருந்தது. எதிரே சுவர் ஓரமாக ஒரு ஆஞ்சநேயர் படம் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. சாதாரண அளவைவிடச் சற்று பெரிய படம்தான். கையில் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபடியே இருந்தார் அவர். சற்று உயரத்தில் குழலூதும் கண்ணன், ராமர் பட்டாபிஷேகம், திருப்பதி வெங்கடாசலபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், ஐயப்பன் சாயிபாபா, இன்னும் பல சாமி படங்களும் இருந்தன.
'இப்பதான் வந்தியா?' என்னும் குரல் கேட்டான். மாலதி எதிரே நின்று கொண்டிருந்தாள். 'ஆமாம்' என்றான்.
'இந்த வேஷம் ஒனக்கு நல்லாத்தான் இருக்கு' என்றாள் அவள்.
'வேஷமா' எனக் கேட்டான் அவன். அதற்குள் அவள் அம்மா மீனா மாமி வந்துவிட்டாள்.
'என்னடி அவன்கிட்ட வம்பு செய்யறீயா? அவனெ ரொம்ப கூச்ச சுபாவம்னு அவன் அம்மா சொல்லி அனுப்பினா?' என்றார் அவர்.
மாமி கையில் இருந்த தயிர் சாதப் பாத்திரத்தையும், இரு தம்ளர்களில் மோரும் பானகமும் வைத்தார். தலையை நிமிராமல், 'நான் எடுத்துண்டு போகட்டுமா?' என்றான் மணி.
'மணி நான் ஒண்ணு சொல்றேன் கேப்பியா? நாளைலேந்து எடுத்துக்கிட்டுப் போவியாம். இன்னிக்கு மொதல் நாளு இல்லியா? இங்கியே இன்னிக்கு மட்டும் சாப்பிட்டுப் போயேன்' என்றார். மேலும் ஓர் இலை எடுத்து வந்தார். அவன் எதிரில் போட்டார். கரண்டியால் தயிர் சாதத்தை எடுத்து இலையில் வைத்தார். அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பேசாமல் சாப்பிட்டான். நீர் மோரும் பானகமும் குடித்தான்.
'எலையை நீ எடுக்க வாணாம். தோட்டத்துலப் போயிக் கை அலம்பிக்கோ' என்று சொன்னார் மாமி.
தோட்டத்து ரேழி இருட்டாக இருந்தது. இவன் செல்லவும் எதிரே வந்த மாலதியும் மோதிக் கொள்ளவும் சரியாகவும் இருந்தது.
'மாலதி, தோட்ட ரேழி லைட்டப் போடு' என்று மாமி சொன்னார். 'ரொம்பக் கூச்சம்தான்' என்று சொல்லியவாறு கீழே விழாமல் சமாளித்த மாலதி, 'போட்டாச்சும்மா' எனக் கூறிக் கொண்டே போட வெளிச்சம் வந்தது.
வெளிச்சத்தில் நிற்கப் பிடிக்காமல் மாலதி ஓடிவிட்டாள். மணி தோட்டம் போனான். பெரிய தோட்டம்தான். நிறைய வாழை மரங்கள். கைகால்களை அலம்பிக் கொண்டு ,'மாமி நான் போயிட்டு வரேன்' என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.
என்னாடா? அவாத்துக்குப் போகலியா' என்றார் மணியின் அம்மா.
'அங்கேருந்துதாம்பா வரேன்' என்றான் பதிலுக்கு.
'சாதம் எங்க?'
'இன்னிக்கு மொத நாளாம், அதால அங்கியே சாப்பிட்டுப் போன்னு சொல்லிட்டா?'
இப்படியே நாலைந்து வாரங்கள் ஓடின. அடுத்த சனிக்கிழமையும் மணி மாமி வீட்டுக்குப் போனான். கூடத்தில் அவன் நுழைந்த போது மாலதி மனைப்பலகை கொண்டுவந்து போட்டாள்.
'ஏன் மாமி இல்லியா?'
'அம்மா இல்ல; விழுப்புரம் வரை போயிருக்கா? எல்லாம் சொல்லிட்டுப் போயிட்டா? அம்மாதான் தரணுமா? நான் தந்தா வாங்க மாட்டியா; நான் தந்தாலும் நல்லாத்தான் இருக்கும்.'
அவள் கேள்வியே மணிக்கு என்னவோ போலிருந்தது. பதில் பேசவே இல்லை.
'நீ ரொம்பக் கூச்சப்படுவியாமே..' என்று மேலும் மணியைத் தூண்டினாள் மாலதி. அதற்கும் அவன் பதில் பேசவில்லை.
நீர்மோரும் பானகமும் கொண்டு வந்து வைத்த மாலதி, 'ஏன் வாயையே திறக்க மாட்டியா? பானகம் குடிக்க வாயைத் திறந்துதான ஆகணும்' என்றாள் மாலதி.
அதற்கும் அவன் பதில் பேசாமல் பானகமும் மோரும் குடித்துத் தயிர் சாதத்தை எடுத்துகொண்டு கிளம்பினான். அம்மாவிடம் தயிர் சாதப் பாத்திரத்தைக் கொடுத்தான். படிக்க உட்கார்ந்தான். பாடங்களில் கவனமே செல்லவில்லை.
'என்ன இவ இந்த மாதிரிப் பேசறா? எனக்குப் புடிக்கவே இல்லை! இது எங்க போய் முடியும்?' என்றெல்லாம் நினைத்தான். அவனுக்குப் பயமாகவும் இருந்தது.
வியாழக்கிழமையே அம்மாவிடம் சொன்னான்.
'அம்மா இந்த வாரம் சனிக்கெழமை மேட்ச் இருக்கு; நாணாவை அவாத்துக்குப் போகச் சொல்லட்டுமா?' என்றான்.
'அப்படியா? நான் மீனாக்கிட்ட கேக்கறேன்' என்றார் மணியின் அம்மா. ஆனால் பதில் மணி எதிர்பார்த்தபடி இல்லை.
'இன்னும் ரெண்டு வாரம்தான இருக்கு மாமி. அதுக்குள்ள ஏன் வேற ஒருத்தரை மாத்தணும்? மணியையே கொஞ்சம் வரச் சொல்லுங்கோன்னு மீனா மாமி சொல்றாடா?' என்ற பதிலால், மணியால் மீற முடியவில்லை.
'நடப்பது நடக்கட்டும்' என்னும் முடிவுக்கு வந்தான்.
சனிக்கிழமை மாலை மாமியாத்துக்கு மணி போகும்போது மாமியே எதிரே வந்தார்.
'மணி, கடைத்தெரு வரைக்கும் போயிட்டு வரேன். வர கொஞ்சம் நாழியாகும். ஆத்துல மாலு இருக்கா? சொல்லிட்டு வந்திருக்கேன்' என்று சொல்லிவிட்டுப் போனார்.
வாசல் கதவு திறந்து கிடந்தது. அழைப்புமணியை அடித்தான்.
தோட்டத்திலிருந்து வந்த மாலதி, 'வா மணி ஒனக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்' என்றாள்.
'இது ஏதடா வம்பாப் போச்சு' என எண்ணியபடியே கூடத்துக்குச் சென்றான். மனைப்பலகை கொண்டுவந்து போட்டாள். பானகம், நீர்மோர் வந்தன. பானகம் குடிக்கும்போது அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் முகம் சாதாரணமாக இல்லை. தயிர் சாதமும் வந்தது.
நீர் மோரைக் குடித்து டம்ளரைக் கீழே வைத்தவுடன்தான் அது நடந்தது. மாலதி திடீரென அவன் கால்களில் விழுந்தாள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
'என்னா இது மாலு, எழுந்திரு' என்றான் மணி.
பட்டென அவள் எழுந்தாள். சுவர் ஓரமாக நின்றாள். கண்களிலிருந்து தண்ணீர் கொட்டியது. 'ஏன் அழறா? யாராவது வந்துடப் போறங்க?' என்று நினைத்த மணி, 'என்னாச்சு மாலு? ஏன் அழறே' என்றான்.
அவள் அழுகை நிற்கவில்லை. விசும்பினாள். அவன், 'சொன்னாத்தான தெரியும் அழறதை நிறுத்திட்டுச் சொல்லு' என்றான்.
சற்று நேரம் சென்றது. தாவணியின் நுனியால் கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்தாள்.
'மணி நீ வரமாட்டேன்னு சொன்னியாமே? அம்மா சொன்னா?'
'ஆமா கிரிக்கெட் மேட்ச் இருந்தது.'
'இல்ல. நீ பொய் சொல்ற. நான் ராமுவிடம் கேட்டேன். மேட்செல்லாம் இல்லியாம்..'
மணி எப்பொழுதும் போல் பேசாமல் இருந்தான்.
'நீ ஏன் வரமாட்டேன்னு சொன்னேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். நான் பேசறதெல்லாம் ஒனக்குப் புடிக்கல. அதை எங்கிட்ட நேர சொல்ல வேண்டியதுதானே? நான் ஏதோ வெளையாட்டாப் பேசிட்டேன்.
அன்னிக்கு மோதிக்கிட்டது தானா நடந்ததுதான். நமக்குத் தெரிஞ்சவந்தானேன்னு நான் கொஞ்சம் அதிகமாகப் பேசிட்டேன்; மத்தபடி எனக்கு மனசில ஒண்ணும் இல்ல. நீ ஏதாவது என்னப் பத்தி தப்பா நெனச்சிக்கிட நான் காரணமா இருந்தா என்னை மன்னிச்சிடு' என்று கை கூப்பினாள் மாலதி.
இப்பொழுதும் மணி ஒன்றும் பேசாமல், தயிர் சாதப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தலைகுனிந்தவாறு கிளம்பினான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.