சினிமா ரவுண்ட் அப்!

பெங்களூரு என்.ஆர். காலனியில் உள்ள பிரபலமான ஏ.பி.எஸ். என்கிற ஆச்சார்யா பாடசாலா கல்விக் குழுமத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 22இல் நடைபெற்றது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on
Updated on
3 min read

கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட்?

பெங்களூரு என்.ஆர். காலனியில் உள்ள பிரபலமான ஏ.பி.எஸ். என்கிற ஆச்சார்யா பாடசாலா கல்விக் குழுமத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 22இல் நடைபெற்றது. 'ஆச்சார்யா பாடசாலா' குழும நடுநிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்தவர் நடிகர் ரஜினிகாந்த் என்பதால், அவருக்கு அழைப்பு விடுத்து பள்ளி நிர்வாகம் கடிதம் எழுதியது.

'வெளிநாட்டில் ஷூட்டிங் இருப்பதால் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. இன்னொரு முறை நிச்சயம் வருவேன்' என்று கூறியிருக்கும் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைக் கூறி அனுப்பிய விடியோவில் பள்ளி நாள்களை நினைவு கூர்ந்து கன்னடத்தில் பேசியிருக்கிறார்.

'பிரைமரி ஸ்கூல் வரை ஒரு கவர்மென்ட் ஸ்கூல்ல கன்னட மீடியத்துல படிச்சேன். அப்ப பிரைட் ஸ்டூடன்ட். தொண்ணூறு சதவீதத்துக்கு மேல் எடுத்திட்டிருந்தேன். ஆனா மிடில் ஸ்கூலுக்கு 'ஆச்சார்யா' வந்தப்ப இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்தாங்க. விளைவு ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட்டா இருந்தவன் கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட்டாகிட்டேன்.

அதேநேரம் இந்தப் பள்ளிக்கூடம் தான் என்னுடைய நடிப்புக்கு ரூட் போட்டுச்சுன்னு சொல்லலாம். இங்க படிச்சப்ப நாடகம் நடிச்சேன். அந்த நடிப்புக்கு சிறந்த நடிகர் விருது கிடைச்சது. நடிப்புக்குன்னு நான் வாங்கிய முதல் விருது அறுபதுகளில் இங்க வாங்கிய இந்த சிறந்த நடிகர் விருதுதான். அங்கிருந்து தொடங்கிய நடிப்புப் பயணம், இப்ப வரை மக்களை மகிழ்விச்சிட்டிருக்கிற ஜர்னி போயிட்டிருக்கு.

ட்ராமா போலவே விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர்ற பள்ளிக்கூடமா இருந்துச்சு ஏ.பி.எஸ். அந்த கிரவுண்ட்ல விளையாடியதெல்லாம் இப்பவும் நினைவுல இருக்கு. இந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப சில பாடங்களில் ஃபெயிலாகிட்டேன். பிறகு எனக்குத் தனியே சொல்லிக்கொடுத்து பாஸ் பண்ண வச்சாங்க என் ஆசிரியர்கள்.

ஸ்கூல் முடிச்சதும் இதே ஏ.பி.எஸ். காலேஜ்ல பி.யூ.சி.யும் சேர்ந்தேன். ஆனா சில காரணங்களால் காலேஜை முடிக்க முடியாம போயிடுச்சு'' எனப் பேசியிருக்கிறார்.

பாலா
பாலா

எல்லா பாராட்டுகளும் பாலா சாருக்கே

அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'வணங்கான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதையொட்டி, நன்றி தெரிவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் அருண் விஜய் பேசுகையில், 'மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் 'வணங்கான்' படம் ஒரு மைல்கல் படமாக அமைந்ததற்கு பாலா சாருக்கு நன்றி. ஒரு நடிகனாக, படம் முழுவதும் பேசாமல் மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்து, என் மேல் நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தை தயாரித்ததற்கு நன்றி.

எனது நடிப்பையும் இந்தத் திரைப்படத்தையும் பற்றி, பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணமும் பாலா சார் தான்.

அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் நடிக்கும் செயல்முறை மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. செய்கை மொழியை கற்றுகொண்ட விதம், உடல் மொழியை மாற்றிக் கொண்ட விதம், எனது கதாபாத்திரத்துக்குள் என்னை ஆழமாகக் கொண்டு சென்ற விதம் போன்றவற்றை பாலா சார் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் செய்திருக்க முடியாது. இந்த எல்லா பாராட்டுகளும் பாலா சாருக்கே போய் சேரும். என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற மற்றொரு படத்தை மறுபடியும் நடிக்க முடியுமா? என எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இதுபோன்ற ஒரு படத்தை அவரால் மட்டுமே கொடுக்க முடியும்'' என்றார்.

இயக்குநர் பாலா பேசுகையில், 'வன்முறை என்பது எனது ரத்தத்தில் இருக்கிறது. திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை போன்ற பல இடங்களை இப்போதைய திரைப்படங்கள் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்படுகின்றன. அதனால்தான் கன்னியாகுமரியை கதைக்களமாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை எடுத்தேன்.

பட நேரம் 2 மணி நேரம் 5 நிமிடம். செகன்ட் ஆஃப் காட்சிகள் மிகவும் வேகமாகச் செல்லும். திரைப்படத்தை பார்க்கும் பொழுது சிறிய படம் போல தெரிகிறது. இடம்பெற்றிருக்கும் நிகழ்வு சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் உலகத்தை காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறேன். அவர்களை சும்மா பார்த்துவிட்டு, பரிதாபப்பட்டுவிட்டு ஒதுங்கி விடக்கூடாது. நமக்குள் தான் அவர்களும் வாழ்கிறார்கள். நம்மை நம்பி தான் அவர்களும் வாழ்கிறார்கள். அதைக் காட்ட வேண்டியது நம்முடைய கடமை'' என்றார் பாலா.

கரீனா கபூர்
கரீனா கபூர்

ஒத்துழைப்புக்கு நன்றி

மும்பையில் ஜனவரி 16 அதிகாலையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாலை நேரத்தில் மர்ம நபர் திருட வந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக வந்தாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன.

இதுகுறித்து சைஃப் அலிகானின் மனைவி நடிகை கரீனா கபூர், 'நடந்த சம்பவம் எங்களது குடும்பத்துக்கு மிகவும் சவாலானதாக இருந்து வருகிறது. நடந்த நிகழ்வுகளை எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இருக்கும்போது, ஊகங்களைத் தவிர்க்கும்படி ஊடகங்கள், புகைப்படக்காரர்களை நான் மரியாதையுடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீதான கவலையையும், ஆதரவையும் நாங்கள் மதிக்கிறோம்.

அதேசமயம் தொடர்ச்சியாக அதுதொடர்பான செய்திகளை வெளியிடுவது, அதில் அதிக கவனம் செலுத்துவது எங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். நாங்கள் இந்தச் சம்பவத்திலிருந்து வெளியில் வரவேண்டும். அதற்கான இடத்தை எங்களுக்கு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com