சர்க்கரைப் பொம்மைகள்...

தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தலையாட்டிப் பொம்மைகளைப் போன்று சர்க்கரைப் பொம்மைகளும் பிரபலம். இதை 'சர்க்கரை அச்சு பொம்மை' என்றும் 'ஜீனி மிட்டாய்' என்றும் அழைக்கின்றனர்.
சர்க்கரைப் பொம்மைகள்...
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தலையாட்டிப் பொம்மைகளைப் போன்று சர்க்கரைப் பொம்மைகளும் பிரபலம். இதை 'சர்க்கரை அச்சு பொம்மை' என்றும் 'ஜீனி மிட்டாய்' என்றும் அழைக்கின்றனர்.

தஞ்சாவூரை 17 ஆம் நூற்றாண்டில் மராட்டியர்கள் கைப்பற்றியபோது, அவர்களுடன் அரங்கேறிய உணவு கலாசாரத்தில் சர்க்கரைப் பொம்மைகளும் ஒன்று.

மராட்டியர்களின் நிகழ்ச்சிகளில் இந்தப் பொம்மைகள் முதன்மையாக இடம்பெறுகின்றன. தஞ்சாவூர் அய்யங்கடைத் தெருவிலுள்ள பஜார் ராமர் கோயில் பகுதியில் ஏழாவது தலைமுறையாக, இந்தப் பொம்மைகளைச் செய்துவரும் பி. நளினி பாய் கூறியதாவது:

'இந்தச் சர்க்கரை பொம்மை மிட்டாய்களை எங்களது பாட்டிக்கு பாட்டி காலம் முதல், அதாவது முந்நூறு ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். மராட்டியர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு சீர் செய்யும்போது, இந்தப் பொம்மைகள் நிச்சயமாக இடம்பெறும்.

சீர்வரிசையுடன் சர்க்கரைப் பொம்மைகளில் செய்யப்பட்ட 5 சட்டிகள், 5 பானைகள், 5 தெய்வ உருவங்களை வைத்து வழங்கப்படும். மற்ற பொருள்கள் இல்லாவிட்டாலும் கூட, சர்க்கரைப் பொம்மைகள் மிக அவசியமாக எதிர்பார்க்கப்படும்.

எனவே, பொங்கல் பண்டிகையின்போது சர்க்கரைப் பொம்மைகளின் உற்பத்தியும், விற்பனையும் உச்சத்தை எட்டும். இதேபோல, தீபாவளியின்போது சீர்வரிசை செய்பவர்கள் இந்தப் பொம்மைகளையும் வைக்கின்றனர். என்றாலும், பொங்கல் பண்டிகை அளவுக்கு தீபாவளி காலத்தில் விற்பனை இருக்காது.

சுப நிகழ்ச்சிகள், நினைவு நாள் நிகழ்வுகளிலும் இந்தப் பொம்மைகள் அவசியம் இடம்பெறுகின்றன. மராட்டிய மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு அணிவிக்கப்படும் நான்கு வகையான மணிகளில், இந்தச் சர்க்கரை மணி பொம்மையும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த சர்க்கரைப் பொம்மைகள் இடம்பெறுகின்றன.

தற்போது தமிழர்களும் ஆர்டர் கொடுத்து செய்து வாங்கிச் செல்கின்றனர். தஞ்சாவூரிலிருந்து மட்டுமல்லாமல், கும்பகோணம், மயிலாடுதுறை, கோவை போன்ற பல்வேறு இடங்களிலிருந்து ஆர்டர்கள் வருகின்றன.

ஆர்டர்கள் கொடுப்பவர்கள் விரும்பிக் கேட்கும் வடிவங்களில் செய்துகொடுக்கிறோம். முருகன், விநாயகர், சரஸ்வதி, நடராஜர், ராஜராஜ சோழன், திருமணக் கோலத்தில் மாப்பிள்ளை, மணப்பெண், தேங்காய், வாழைப்பழம், அன்னாசிப்பழம், பொங்கல் பானை, கிண்ணம், தேர், மண்டபம், குத்துவிளக்கு, யானை என விருப்பத்துக்கேற்பவும், விசேஷங்களுக்கு தகுந்தாற் போலவும் சர்க்கரைப் பொம்மைகளைச் செய்து கொடுக்கிறோம்.

இதற்கென அந்த காலத்தில் தேக்கு, கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட அச்சுகள் உள்ளன.

முதலில் சர்க்கரையை பாகு போல் காய்ச்ச வேண்டும். அதற்கு செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கம்பி பதத்துக்கு பாகு வந்ததும் 'டோலி' என்ற பண்டைய காலபாத்திரத்தில் ஊற்றி அதை மர அச்சில் ஏற்ற வேண்டும்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் சர்க்கரைப் பொம்மைகள் தயாராகிவிடும். உலர்ந்தவுடன் அதற்கு வண்ணம் பூசுவோம். ஒரு கிலோ சர்க்கரை பொம்மையை 400 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.

நான்கு கிலோ சர்க்கரையைப் பயன்படுத்தினால், ஒரு கிலோ அளவுக்குதான் சர்க்கரைப் பொம்மைகளைச் செய்ய முடியும். இதுவும் அச்சில் சரியான அளவுக்கு ஊற்றினால்தான் பொம்மைகளாக உருப்பெறும். செய்யும்போது உடைந்துவிட்டால் அதை விற்க முடியாது. இந்தப் பொம்மைகள் மூலமாக பெரிய வருமானம் கிடையாது. பல நாள்களில் செலவுக்கு ஏற்ற வரவு கிடைப்பதே சந்தேகம்தான். என்றாலும், பாரம்பரியமாக செய்து வருகிறோம்.

பொம்மைக்காக நாங்கள் பயன்படுத்திவரும் அச்சு, தாத்தா காலத்தில் செய்யப்பட்டது. அதுவும் தேய்ந்து வருவதால், புதிதாக வாங்க முயற்சி செய்கிறோம். அதற்கு ஏறத்தாழ முப்பது ஆயிரம் ரூபாய் தேவைப்

படுகிறது. இந்த அச்சுக்கான மரம் அரிதானது. மராட்டிய மாநிலத்தில் ஆண்டுக்கு ஒருதடவை கூடும் சந்தையில் மட்டுமே கிடைக்கும். ஆனால், ஏற்கெனவே வரவுக்கும் செலவுக்கும் இடையே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், அதை எங்களால் வாங்க முடியவில்லை. யாராவது உதவி செய்தாலோ, வங்கிக் கடனுதவி கிடைத்தாலோ, இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்கு வாய்ப்பாக அமையும்'' என்கிறார் நளினி பாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com