ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை யாருக்கு?

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் போட்டி பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19இல் தொடங்கி, மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Published on

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் 'ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் போட்டி' பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19இல் தொடங்கி, மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கிரிக்கெட் ஆடும் நாடுகள் குறைவாக இருந்தாலும், சர்வதேச அளவில் கிரிக்கெட்டுக்கு தனி ஈர்ப்பு உள்ளது. 'ஜென்டில்மேன் விளையாட்டு' என அழைக்கப்படும் இந்த விளையாட்டு இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது ஏராளமான நாடுகளில் ஆடப்படுகிறது. ஆசியப் போட்டியில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட், தற்போது 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் டி20 ஆட்டமாக நடைபெறுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முதலில் 1998இல் டாக்காவில் ஐ.சி.சி. நாக் அவுட் போட்டியாக நடைபெற்றது.

2000இல் நைரோபியில் நடைபெற்ற நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை என 2002இல் பெயர் மாற்றப்பட்டு, இருஆண்டுகளுக்கு ஒருமுறை 2009 வரை நடைபெற்றது. 2008இல் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை

கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை நெருக்கடிக்கு உள்ளானதால், சாம்பியன்ஸ் கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டது.

ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் எட்டு இடங்களைப் பெறும் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடும் தகுதியை பெறுகின்றன. தலைசிறந்த 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதுவரை சாம்பியன்கள்

சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா, இந்தியா மட்டுமே இரண்டு முறை பட்டம் வென்றுள்ளன.

தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, மே.இந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகள் தலா ஒருமுறை பட்டம் வென்றுள்ளன. ஒவ்வொரு தொடரிலும் ஏழு நாடுகளின் அணிகள் ஆடியுள்ளன.

2017இல் கடைசியாக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இரு வாரங்கள் மட்டுமே இந்தப் போட்டி நடைபெறும்.

ஒருநாள் 50 ஓவர்கள் அடிப்படையில் இப்போட்டி நடைபெறுகிறது. வழக்கமான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து இது மிகவும் வேறுபடுகிறது.

உலகக் கோப்பை ஒருமாதம் நடைபெறும் நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை இரண்டு வாரங்கள் மட்டுமே நடைபெறுகிறது.

உலகக் கோப்பையில் 10 அணிகளும், இந்தப் போட்டியில் 8 அணிகளும் இடம் பெறுகின்றன.

அதிகபட்சமாக இங்கிலாந்து 3 முறை (2004, 2013, 2017) போட்டியை நடத்தியுள்ளது. வங்கதேசம், கென்யா, இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா தலா ஒருமுறை நடத்தியுள்ளன.

இலங்கை மட்டுமே போட்டியை நடத்திய நாடு என்ற அடிப்படையிலும் பட்டம் வென்றது. ஆனால், இங்கிலாந்து இருமுறை சொந்த மண்ணில் இறுதி வரை முன்னேறியும் தோற்று விட்டது.

சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராக கிறிஸ் கெயில் (மே.இந்திய தீவுகள்) 791 திகழ்கிறார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதவராக கைல் மில்ஸ் நியூஸிலாந்து 28 விக்கெட்டுகள் திகழ்கிறார்.

ஹைபிரிட் முறையில் இந்திய ஆட்டங்கள்

பாகிஸ்தானில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பற்ற சூழலால் இந்திய கிரிக்கெட் அணி அங்கு சென்று ஆடாது என பி.சி.சி.ஐ. அறிவித்து விட்டது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறுமா? என கேள்விக்குறி எழுந்தது. தொடர்ந்து ஐ.சி.சி. மேற்கொண்ட முயற்சியால், இந்தியா ஆடும் ஆட்டங்கள் ஹைபிரிட் முறையில் துபையில் நடைபெறவுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் என இந்தியாபாகிஸ்தான் ஆட்டம் பிப். 23ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது.

முதல் அரையிறுதி மார்ச் 4இல், இரண்டாம் அரையிறுதி மார்ச் 5இல் நடைபெறும். இறுதி ஆட்டம் மார்ச் 9இல் நடைபெறவுள்ளது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடம் பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்கள் மே.இந்திய தீவுகள், இலங்கை தகுதி பெறவில்லை.

வெள்ளை நிற கோட்டு சிறப்பு

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணியினர் வெள்ளை நிற கோட்டு சூட் உடை அணிவது பெருமை மிக்கதாகும். இறுதி ஆட்டத்தில் வென்றவுடன் வீரர்களுக்கு போட்டி அமைப்பாளர்களால், இந்த உடை அளிக்கப்படுகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கூட இந்த வெள்ளை நிற கோட்டு சூட் அணியும் முறை பின்பற்றப்படவில்லை.

2009இல் இருந்து வெள்ளை நிற கோட்டு சூட் உடைகளை சாம்பியன் அணிகள் அணியும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com