ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பருமன் குறைய வழி என்ன?

எனக்கு வயது நாற்பத்து எட்டு. சர்க்கரை உபாதையைக் குறைக்கவும், உடல் பருமனை நீக்குவற்காகவும் நிறைய நடக்கிறேன்.
பருமன்
பருமன்
Published on
Updated on
2 min read

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது நாற்பத்து எட்டு. சர்க்கரை உபாதையைக் குறைக்கவும், உடல் பருமனை நீக்குவற்காகவும் நிறைய நடக்கிறேன். இருந்தும் பருமன் குறையவில்லை. உணவில் ருசியின்மை, வெளிமூலம், ஆசன வாயில் கிருமிகளாக அரிப்பு போன்ற உபாதைகள் வேறு. இவை அனைத்தும் நீங்க ஆயுர்வேத மூலிகை மருந்து உள்ளதா?

தணிகாசலம், திருவாரூர்.

மூலிகை மருந்தைவிட உணவு, ஆரோக்கியத்துக்கான பங்கை பெருமளவில் அளிக்கக் கூடும். காலையில் பார்லி கஞ்சியில் மோர் கலந்து, சிறிது இந்துப்பு சேர்த்து பருகவும். நடைபயிற்சிக்குப் பின்னர் இதை காலை உணவாக ஏற்கவும், குணத்தில் வரட்சியும் குளிர்ச்சியும் கொண்ட பார்லியை கஞ்சியாக ஏற்கும்போது உடலில் உள்ள ஊளைச் சதையைக் குறைக்க உதவும்.

தயிரின் மேல் படிந்துள்ள ஆடைகளை அகற்றி, கால் பங்கு தண்ணீர் விட்டு நன்கு சிலுப்பி, அதைப் பார்லி கஞ்சியுடன் கலந்துச் சாப்பிட, அதனுடைய லேசான தன்மை, துவர்ப்பு புளிப்புச் சுவைகளால் ருசியின்மை மாற்றி உணவில் விருப்பத்தை உண்டாக்கித் தரும். மேலும், மூலமுளைகளை ஆசன வாயில் கரு கடித்துவிடும் தன்மையுடையது. உடல் பருமனைக் குறைக்கும் சர்க்கரை உபாதைக்கு ஏற்ற பானமும்கூட!

'த்ரிஜாதகம்' எனும் லவங்கப்பட்டை, பச்சிலை, ஏலக்காயைப் பொடித்து துணியில் சலித்து எடுக்கவும். இதனுடன் 'த்ரிகடுகம்' எனும் சுக்கு, மிளகு, திப்பிலி சூரணம், 'த்ரிபலை' எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணம் ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் வீதம் கலந்து வைத்துகொள்ளவும். அதில், ஐந்து கிராம் மட்டும் எடுத்துகொண்டு சிறிது வென்னீருடன் கலந்து இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடவும். உடல் பருமன், சர்க்கரை உபாதைக்கு நல்ல அனுபமானமாகும்.

வெள்ளிலோத்திப்பட்டை, பெருங்குரும்பை, பூலாங்கிழங்கு, வாய்விடங்கம் என மேலும் பல மூலிகைக் கலவைகளைச் செய்து, கஷாயமாக்கி, மண்பானையிலிட்டு அதை சீல் வைத்து மூடி, மண்ணுக்கு அடியில் புதைத்துவைத்து, 15 நாள்களுக்குப் பிறகு எடுத்து உபயோகிப்பது முன்பு வழக்கத்தில் இருந்தது.

இது சர்க்கரை வியாதி, மூலம், வெண்குட்டம், குஷ்டம், ருசியின்மை, குடல்கிருமி, சோகை நோய், கிருணி, உடல் பருமன் உபாதைகளை நன்றாகக் குறைத்துவிடும். காலை உணவுக்குப் பிறகு 30 மில்லி சாப்பிடலாம். இந்த மருந்து தற்சமயம் விற்பனையில் உள்ளது.

மண்பாண்டத்தின் உள்ளே தேன், திப்பிலி சூரணம் பூசப்பட்டதும், உறுதியானதும், உருக்கப்பட்ட அரக்கால் பூசப்பட்டதும், நெய் வைத்திருந்ததுமான பானையில் வேங்கை மரப்பட்டையுடன் மேலும் பல மூலிகைகளைக் கலந்து கஷாயமாக்கி மேற்குறிப்பிட்டுள்ளது போல, குழித்து வைத்திருந்ததை 15 நாள்களுக்குப் பிறகு எடுத்து 30 மில்லி மதிய உணவுக்குப் பிறகு பருகி வர, மேற்குறிப்பிட்ட மருந்தைவிட சக்தி வாய்ந்ததும், விரைவில் நிறைவான பலனையும் தரக் கூடியது. இந்த மருந்தும் விற்பனையிலுள்ளது.

மேற்குறிப்பிட்ட இரு மருந்துகளையும் வகைக்கு 15 மில்லி கலந்து, மொத்தமாக 30 மில்லி காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் உடல் உபாதைக்கான நிவாரணம் விரைவில் கிடைக்க உதவிடக் கூடும்,

'உத்வர்த்தனம்' எனும் மூலிகைப் பொடி உங்கள் உடல் பருமனைக் குறைக்கவும், மறைமுகமாக சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவும், புளித்த மோரில் இந்தப் பொடியைக் கலந்து, அடுப்பிலேற்றி இளஞ்சூடானதும் இறக்கி ஊளைச் சதை நிறைந்த தொப்பை, புட்டம், தொடை ஆகிய பகுதிகளில் கீழிருந்து மேல் நோக்கி தேய்த்துவிடும் சிகிச்சை முறையால் தேவையற்ற கொழுப்பு கரையும். தொப்பையின் மீது தேய்ப்பதால், 'பேங்க்ரியாஸ்' என்ற கணையத்தின் செயல்திறன் ஊக்குவிக்கப்பட்டு, அணுக்களின் செயல்பாடு கூடி இன்சூலின் சுரப்பை மேம்படுத்தும்.

'கற்பூரசிலாசத்து' எனும் மருந்து நீங்கள் குறிப்பிடும் அனைத்து உபாதைகளுக்கும் மிகவும் சிறந்தது. கேப்ஸ்யூல் வடிவத்தில் நமது நாட்டின் வடக்கு பகுதிகளில் விற்பனையிலுள்ளது. இரவு படுக்கும் முன் இரண்டு கேப்ஸ்யூல் வென்னீருடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். உணவில் புலால் உணவு வகைகள், புளிப்புச் சுவை, உப்பு அதிகம் பயன்படுத்துவதை நிறுத்தவும், பகல் தூக்கத்தைத் தவிர்க்கவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com