கண்டது
(பழனியில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
'உழவன் சிரித்தால் உலகம் செழிக்கும்.'
எம்.உமாமகேஸ்வரி, பழனி.
(கடலூர் பேருந்து நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த காரில் எழுதியிருந்தது)
'படித்தால் பட்டினி போகும். குடித்தால் கிட்னி போகும்.'
-கோ.செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.
(புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'அம்மணக்குப்பம்'
நாகஜோதி, நாகப்பட்டினம்.
கேட்டது
(தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் மது அருந்திய இருவர் பேசியது)
'போதையில் இருந்தாலும் ஒரு கவிதை வருதே...?'
'என்ன சொல்லேன் பார்க்கலாம்...'
'ஊருடன் நீ ஒத்துப் போனால் நல்ல குடிமகன். உன்னுடன் ஊரே ஒத்துப் போனால் நல்ல தலைவன்.'
தஞ்சை பா.சக்திவேல்.
(சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் இரு பெண்கள் பேசியது)
'நேத்து சேலை வாங்கின கடைக்கே இன்னிக்கும் போகறீயா.. ஏன்?'
'நேத்து பர்ச்சேஸ்... இன்று எக்சேஞ்ச்...'
பர்வதவர்த்தினி, பம்மல்.
(திருச்சியில் உள்ள ஒரு ஏ.டி. எம். அருகே இருவர் பேசியது)
'மூணு முறைக்கு மேல் பணம் எடுத்தால் இருபத்து மூன்று ரூபாய் எக்ஸ்ட்ரா சார்ஜாம்...'
'வாங்கிட்டு போகட்டும். ஆட்டோ பிடிச்சு பேங்குக்கு போய் வரிசையில் நின்று பணம் எடுக்கறதுக்கு இது எவ்ளோ மேல்...'
அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா! உழைப்பைத் தேடத் தெரிந்தவனுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு இருக்கிறது. உத்தமன்ராசா, தென்காசி.
மைக் கதை கிஷோர் தனது முகநூல் தகவல்களை வாசித்துகொண்டிருந்தார். அப்போது, ஸ்ருதி என்ற இளம்பெண் தனது அழகான புகைப்படத்துடன் பதிந்த செய்தியில், தான் ஆட்டோவில் பயணித்தபோது வெளிநாட்டிலிருந்து தருவித்த 2 கிலோ அல்போன்சா மாம்பழம் பையுடன் காணாமல் போனதாகவும், அதை காண்பவர்கள் தயவு செய்து தனது முகவரியில் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். உடனடியாக கிஷோர் அருகேயிருந்த ஃப்ரூட்ஸ் ஹாலுக்கு சென்று இரண்டு கிலோ அல்போன்சா மாம்பழங்களை வாங்கி, அந்தப் பெண் குறிப்பிட்ட முகவரிக்கு தன் பைக்கில் விரைவாகச் சென்றார். பைக்கை நிறுத்திவிட்டு, வீட்டின் முற்றத்தை அடைந்தபோது அதிர்ந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது கையில் மாம்பழப் பைகளுடன் வரிசையாக நின்றிருந்தனர். எம்.பி.தினேஷ், கோவை 25.
எஸ்எம்எஸ்
மகிழ்ச்சிக்காகப் பிடித்தவர்களுடன் பழகு; பிடிக்காதவர்களுடன் விலகு.
-இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
அப்படீங்களா!
ட்ரோன்கள் உலகையே ஆட்டிப் படைத்து வருகின்றன. அவசர உலகில் நெரிசல் மிக்க பயணங்களை வான்பறப்பைப் பயன்படுத்தி, குறுகிய நேரத்தில் கடக்க உதவும் ட்ரோன்கள் முதலில் அவசர கால சேவைக்கு பயன்படுத்தப்பட்டடன. ராணுவத்தில் இந்த ட்ரோன்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் எதிரி நாடுகளை அழிக்கும் அசூர ஆயுதமாக மாறிவிட்டன.
பல ஆயிரம் தூரம் பறந்துச் சென்று எதிரிகளின் இலக்கைத் துல்லியமாக தாக்கக் கூடிய அளவுக்கு ட்ரோன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதில் உளவுப் பணிக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் பறவை, மீன் என கண்டுபிடிக்க முடியாத அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும், சீனா தற்போது கொசு அளவில் ஒரு ட்ரோனை ராணுவத்துக்காக உருவாக்கி உள்ளதாக சௌத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
போர்க் களத்தில் இந்த வகை சிறிய ட்ரோன்கள் ராணுவத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று இதை உருவாக்கிய சீன தேசிய ராணுவ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொசுவைப் போலவே இரு சிறு இறக்கைகள், கால்கள் கொண்ட 1.3 செ.மீ. உயரம் கொண்ட இந்த ட்ரோனை வெறும் ஸ்மார்ட் போனை வைத்தே கட்டுப்படுத்தி விடலாம்.
ரகசிய உளவு நடவடிக்கைக்காக பயன்படுத்தக் கூடிய இந்த ட்ரோனில் மிகவும் சிறிய மின் சேமிப்பு, சென்சார்கள் பொருத்துவது பெரும் சவாலாக காரியமாக இருந்ததாக இதை உருவாக்கிய ராணுவத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
அ. சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.