நடுகற்கள்..

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி, 'விருதுநகர் மாவட்ட வரலாற்று ஆவணப் பதிவு' நூலாக்கப் பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளுக்குச் சொந்தக்காரர் போ.கந்தசாமி. பொ.ஜெயச்சந்திரன்
நடுகற்கள்..
Published on
Updated on
3 min read

பொ.ஜெயச்சந்திரன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி, பதினைந்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வினாத் தாள் தயாரிப்புக் குழு உறுப்பினர், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவில் 'நடுகற்கள்' பற்றிய ஆய்வை மேற்கொண்டவர், நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் பயிலரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்பித்தவர், இருபதுக்கும் மேற்பட்ட தொல்லியல் பயிலரங்குகளை நடத்தியவர், 'விருதுநகர் மாவட்ட வரலாற்று ஆவணப் பதிவு' நூலாக்கப் பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளுக்குச் சொந்தக்காரர் போ.கந்தசாமி.

அவரிடம் பேசியபோது:

'வரலாற்றுத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை ஈரோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் படித்தேன். 'ஈரோடு மாவட்ட நடுகற்கள்' எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், 'மேற்கு தமிழகத்தில் நடுகல் வழிபாட்டு முறை' எனும் தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முடித்தேன். காந்திய சிந்தனையில் சான்றிதழையும், பட்டயப் படிப்பையும் முடித்துள்ளேன். வரலாறு, தொல்லியல் சார்ந்த களப்பணியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து வருகிறேன். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் முதுகலை, வரலாற்று ஆய்வு மையத்தில் நான் பணியாற்றி வருகிறேன்.

ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர் அருகேயுள்ள செம்புலிசாம்பாளையம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டிருந்தேன். அப்போது சாலையோர கோயில் சிற்பத்தில், ஒரு வீரன் பாய்ந்து வரும் புலியை தன்னுடைய குத்திட்டியால் குத்துவது போன்று செதுக்கப்பட்டிருந்தது. இது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது 'நடுகல் சிற்பம்' என்பதை அறிந்தேன்.

'பாடப்பன் சாமி' என்ற பெயரில் ஒரு சமுதாயத்தினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அந்தச் சிற்பத்தின் ஒரு பகுதியில் இரண்டு பெண்கள், அதாவது வீரனின் மனைவியர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இருவரும் சதியில் ஈடுபட்டதைக் குறிக்கிறது. இந்தக் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி இல்லை என்பதால், சில வருடங்களுக்கு முன் பெண்களும் தனிக் கோயில் அமைத்து பெண்களே பூஜை செய்து வழிபடுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் 55 நடுகற்களைப் பற்றி ஆய்வு செய்தேன். பர்கூர் மலையில் வசிக்கும் 'லிங்காயத்துகள்' தங்களது குலதெய்வமாக நடுகற்களையே இன்றும் வழிபடுகின்றனர். மண்ணில் சரிந்துள்ள நடுகற்களை மீண்டும் எடுத்து நிறுத்துவதற்கே அச்சப்படுகின்றனர்.

ஈரோடு கலைமகள் கல்வி நிறுவனப் பள்ளியில் உள்ள அருங்காட்சியகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நடுகற்களை வைத்து பாதுகாத்து வருகின்றனர். கவுந்தப்பாடிக்கு அருகில் உள்ள பாலப்பாளையத்தில் 'லட்சுமணன் சாமி' என்று அழைக்கப்பட்ட நடுகல்லுக்கு வெற்றிலை, பாக்கு, காணிக்கை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு திரும்பிப் பார்க்காமல் வந்தால் மண் சாப்பிடும் குழந்தைகள் அதை மீண்டும் தொடாது என்ற நம்பிக்கை உள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 252 நடுகற்கள் பற்றியத் தரவுகளை களப் பயணத்தில் சேகரித்தேன். குறிப்பாக வழிபாட்டு முறையை மையக் கருத்தாக எடுத்துகொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுகற்கள் பழங்குடியினர் வாழ்ந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளன. தங்கள் திருவிழாவின்போது, சடங்கு சம்பிரதாயத்துடன் வழிபடுகின்றனர்.

சத்தியமங்கலத்தில் உள்ள நடுகற்களில் வனம் சார்ந்த பகுதிகளில் புலி, யானை, பன்றி போன்ற வேட்டைக்காட்சிகளும், ஒரு சில இடங்களில் இரு குழுக்கள் சண்டையிடக் கூடிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரு சில நடுகற்களில் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களில் அதிக அளவில் நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நீலகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடுகற்களில் வித்தியாசமான வழிபாட்டு முறைகளும் உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய நடுகற்கள் ஆவணப்படுத்தப்பட்டன. இவற்றையும் தாண்டி பல நூற்றுக்கணக்கான நடுகற்கள் இன்றளவும் கண்டு பிடிக்கப்பட்டு, பழங்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கிறது.

நான் முதலில் கண்டுபிடித்த நடுகல்லைப் பார்த்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வெளியிடுவதற்கும். ஆய்வுக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர் ஈரோடு அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் முனைவர் சி.மகேஸ்வரன். அடுத்த சில ஆண்டுகளிலேயே மக்களுடைய கலாசாரம், பண்பாடு, பழக்க

வழக்கங்கள் ஆகியவற்றை பதிவு செய்வதற்கு ஆர்வம் ஏற்பட்டு, எனது களப்பயணம் நீண்டது.

ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்குப் பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, கண்டு பிடிக்கப்படாத நடுகற்கள், சதிக்கற்களை ஆராய்ந்து அவற்றைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளேன். குறிப்பாக, பெருங்கற்கால பண்பாட்டின் தொடர்ச்சியாக முதுமக்கள் தாழி, குத்துக்கல், கல்வட்டங்கள் பற்றிய பல்வேறு தொல்லியல் இடங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளேன்.

விருதுநகர் மாவட்டத்தில் 2023இல் 'வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம்' என்ற கருத்தரங்கை நடத்தி, ஆய்வுக் கட்டுரைகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்தேன். 'விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள் ஒரு வரலாற்றுப் பயணம் (18001950)' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட நூல் தொகுப்பானது அனுபவமிக்கப் பேராசிரியர்களைக் கொண்டு 24 தலைப்புகளில் கட்டுரைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நூலில் 1800களில் விருதுநகர் பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது, நிர்வாகம், வரிவிதிப்பு முறைகளை அறிமுகப்படுத்தியது விளக்கப்பட்டுள்ளது. 1900களில் விருதுநகரில் கல்வி நிறுவனங்கள் அதிகரித்ததால், இலக்கியம், கலை போன்ற பண்பாட்டுத் துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. இதற்கெல்லாம் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது அண்மையில் பணியிடமாறுதலில் சென்ற மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்' என்கிறார் போ.கந்தசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com