
தீபிகா கோரிக்கை ஜெனிலியா பதில்!
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் 'ஸ்பிரிட்'. இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி படத்தில் நடிக்க வந்திருக்கிறார். தீபிகா படுகோனே, இத்திரைப்படத்திலிருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.அதில் ஒன்று, தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதனால் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக தனது பணி நேரத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்தப் பணி நேரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீபிகா படுகோனே நினைத்தபடி சரிவராததால், அவர் 'ஸ்பிரிட்' திரைப்படத்திலிருந்து விலகினார் என்று கூறப்பட்டது. இது திரைத்துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிகர் அமீர் கான், நடிகை ஜெனிலியா தேஷ்முக் நடிப்பில் 'சிதாரே ஜமீன் பர்' என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜெனிலியா, '10 மணிநேர வேலை என்பது கடினம்தான். ஆனால் அது சாத்தியமற்றது அல்ல. நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறேன்.
இயக்குநர் அதை 11 மணி, 12 மணி நேரமாக நீட்டிக்கச் சொல்லும் நாள்களும் பிறகு ஒரு இயக்குநரின் தேவைக்கு ஏற்ப வேலை நேரத்தை சில மணி நேரம் அதிகப்படுத்திக்கொள்ளக் கேட்பது நியாயமானது என்று நினைக்கிறேன்.ஆனால் அந்த மாற்றங்களைச் செய்ய நமக்கு நேரம் கிடைக்க வேண்டுமே... அது இல்லாத சூழலால்தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எல்லா நாள்களும் வேலை நேரத்தைவிட அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருசில நாள்கள் நமக்கு அதிக நேரம் வேலை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் செய்துதான் ஆக வேண்டும். இது இரு தரப்புக்கும் மத்தியில் புரிதலுடன் செய்ய வேண்டிய ஒன்று' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மீண்டும் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா!
10 வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கவிருக்கும் திரைப்படம் 'கில்லர்'. இந்தப் படத்தில் 'அயோத்தி' பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த வாரம் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டிருந்த நிலையில் படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது.
அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தகவல் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ' 'கில்லர்' படத்தின் மூலம் இயக்குநர் பயணத்தைத் தொடங்கவிருக்கும் எனக்கு, அபரிமிதமான அன்பைக் கொடுத்த எனது சினிமா நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது நன்றிகள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானியும் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
'ஒரு அழகானத் தொடக்கம். எப்போதும் ஒரு உத்வேகத்தைத் தரும் எஸ்.ஜே.சூர்யா சாருடன் இணைந்து புதிய பயணத்தின் பூஜையைத் தொடங்கி இருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுடனும் ஆதரவுடனும்.' என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சிம்புவை இயக்குகிறார் வெற்றிமாறன்!
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அப்படத்திற்குப் பதிலாக சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது.
அதற்காக வெற்றிமாறன் மேற்கொண்ட புரோமோ ஷூட் புகைப்படங்களும் கசிந்தன. தன்னுடைய அடுத்தப் படம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறனே தன்னுடைய அடுத்தப் படம் குறித்து விளக்கமளித்து ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.வெற்றிமாறன் பேசுகையில், 'என்னுடைய அடுத்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார். அதில் சிம்பு நடிக்கவிருக்கிறார்.
நீங்கள் என்னுடைய அடுத்தப் படத்தைப் பற்றி கேட்டீர்கள், அதற்கான பதில்தான் இது. எழுத்துப் பணிகளில் ஏற்படும் தாமதங்களாலும், தொழில்நுட்பக் காரணங்களாலும், விலங்குகள் மற்றும் நடிகர்களின் பாதுகாப்பு கருதியும் 'வாடிவாசல்' திரைப்படம் உருவாகுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கிறது.
கலைப்புலி தாணு 'சிம்புவைச் சந்திக்கலாமா' என்று கேட்டார். பிறகு, நான் சிம்புவைச் சந்தித்தேன்.சந்திப்பின் அடுத்த சில மணி நேரங்களிலேயே எல்லாம் சரியாக அமைந்தது. இது 'வடசென்னை 2' ஆக இருக்கும் என்று பேச்சுகள் இருக்கின்றன. ஆனால், இது 'வடசென்னை 2' இல்லை.
கண்டிப்பாக, 'வடசென்னை 2' அன்புவின் எழுச்சியாகத்தான் இருக்கும். தனுஷ் நடிப்பதுதான் 'வடசென்னை 2' ஆக இருக்கும். இந்தப் படம் 'வடசென்னை' உலகத்தில் நடக்கும் கதை. 'வடசென்னை' படத்தின் கதை நிகழும் காலகட்டத்தில்தான் இந்தப் படத்தின் கதையும் நிகழும்.' என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.