நாட்டில் மிகவும் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றான 'ஷோலே'யின் மீட்டெடுக்கப்பட்ட, வெட்டப்படாத பதிப்பு, இத்தாலியின் போலோக்னாவில் உள்ள லி பியாஸா மேகியூரில் திறந்தவெளி அரங்கில் ஜூன் 27இல் நடைபெற்ற 'சினிமா ரிட்ரோவாடோ' விழாவில் திரையிடப்பட்டது. படம் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி புதிய 'ஷோலே' டிஜிட்டல் படத்தின் க்ளைமாக்ஸூம் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது.
'ஷோலே' கதை, வசனத்தை சலீம் கான் (நடிகர் சல்மான் கானின் தந்தை), ஜாவேத் அக்தர் எழுத, ரமேஷ் சிப்பி இயக்கி, தயாரித்தார். மிகுந்த பொருள் செலவில் உருவான இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது.
இளமையான அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமா மாலினி, சஞ்சீவ் குமார், ஜெயா பச்சன், அம்ஜத் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தக் காலத்தில் வீடுகளில் குழந்தை அழும்போது, 'அழுகையை நிறுத்து ... இல்லைன்னா கப்பர் சிங் வந்து தூக்கிக் கொண்டு போவான்' என்று தாய்மார்கள் பயமுறுத்தும் அளவுக்கு கொடூரமான வில்லனாக அம்ஜத் கான் நடித்திருந்தார்.
1970 கால ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் நட்பின் இலக்கணம், மத ஒற்றுமை, காதல், உணர்ச்சி வசப்படச் செய்யும் சண்டைக் காட்சிகள் எனப் பின்னிப் பிணைந்தது.
மும்பை மினர்வா திரையரங்கில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. ஷாருக் கான் கஜோல் நடித்த 1995இல் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' 'மராத்தா மந்திர்' திரையரங்கில் பத்து ஆண்டுகள் ஓடி 'ஷோலே'யின் சாதனையை இருபது ஆண்டுகள் கழித்து முறியடித்தது.
ஒரிஜினல் படத்தில் கடைசி காட்சியில் சஞ்சீவ் குமார் தனது குடும்பத்தை அழித்த காப்பர் சிங்கை தனது கால்களால் மிதித்து கொலை செய்வார். அப்போது அந்த முடிவை தணிக்கைக் குழுவினர் ஏற்கவில்லை.
'கடமை தவறாத காவல் அலுவலர் சஞ்சீவ் குமார் எப்படி சட்டத்தைக் கையில் எடுப்பார். கொலையாளிக்குத் தண்டனை பெற்றுத் தரத்தான் முடிவு செய்வார். அதனால் க்ளைமாக்ûஸ மாற்றுங்கள்' என்று தணிக்கை குழுவினர் சொல்ல, போலீஸார் பிடித்துச் செல்வது போன்று மாற்றினர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் 'ஷோலே'யின் டிஜிட்டல் மாற்றம் எளிதாக இல்லை. தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பியின் வாரிசுகளைப் பெரிதும் சங்கடப்பட வைத்தது. காரணம், படத்தின் நெகட்டிவ்களும் இதர பிரதிகளும் எதற்கும் பயன்படாதபடி மோசமான நிலைக்குப் போய்விட்டிருந்தன.
மும்பை பிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன், சிப்பி பிலிம்ஸ் நிறுவனம், இணைந்து இங்கிலாந்து, இத்தாலி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மூன்று ஆண்டுகளாகப் பாடுபட்டு '4கே' தரத்தில் புதிய பிரதியை தயாரித்துள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட பதிப்பில் ஆறு நிமிடங்கள் ஓடும் கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் கப்பர் கொடூரமாகக் கொல்லப்படும் காட்சியும் அடங்கும். புதிய ஷோலே இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.