
ஸ்ரீராமுலு நாயுடு கோவை பக்ஷிராஜா ஸ்டூடியோ அதிபர். படத் தயாரிப்பாளர், இயக்குநர் என ஆரம்ப காலத்து சினிமாவை ஆதிக்கம் செலுத்தியவர்களில் முக்கியமான ஒருவராக இருந்தார். 1941இல் 'ஆர்ய மாலா' என்ற படத்தை இயக்கித் தயாரித்தார்.
இதில் பி.யூ.சின்னப்பா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பாலையா போன்ற பண்பட்ட கலைஞர்கள் நடித்தார்கள். இதுதான் பிற்காலத்தில் சிவாஜி நடித்து டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், தயாரிப்பில் 'காத்தவராயன்' என்ற பெயரில் வெளிவந்தது.
இந்த 'காத்தவராயன்' படத்தில் டி.ஆர்.ராமண்ணா எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கும் முயற்சி தோல்வியுற்றது. காரணம் தன் கொள்கைக்குப் பொருந்தாது என்று கூறியதுடன் சிவாஜி நடிக்கட்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லி சிவாஜி நடித்தப் படம் இது.
இதே போன்று நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் 'மலைக்கள்ளன்' படத்தை ஏழு மொழிகளில் எடுத்த இவர், அதில் நடிக்க சிவாஜியை அணுகினார். ஆரம்ப காலத்தில் சிவாஜி நடிக்க வாய்ப்புக் கேட்டு ஸ்ரீராமுலு நாயுடுவைத் தேடி போனப் போது ' உன் முகம், தோற்றம் நடிக்கச் சரி வராது' என்று தான் எடுத்த படத்தில் நடித்த ஒரு தெலுங்கு நடிகருக்குப் பின்னணிக் குரல் கொடுக்கச் சொன்னார்.
காலம் எவரையும் புரட்டிப் போட்டு விடும் என்பதற்குச் சாட்சியாகச் சிவாஜியை 'மலைக்கள்ளன்' படத்தில் நடிக்கச் சொன்ன போது, 'எம்.ஜி.ஆர் நடித்தால்தான் நன்றாக இருக்கும்' என்று சிவாஜி யோசனை சொன்னார். அதன்படி எம்.ஜி.ஆர்.நடித்தார். மிகப் பெரிய வசூலுடன் வெற்றிப் பெற்ற இந்தப் படம் 1954இல் வெள்ளிப் பதக்கத்துடன் குடியரசு தலைவரின் விருதையும் பெற்றது.
இதன் பின் சிவாஜி நடிக்க 'மரகதம்', 'கல்யாணியின் கணவன்' போன்ற படங்களைத் தயாரித்தார்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு மூவரும் கைதாகி இவர் மட்டும் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார்.
அவரை நான் 1974இல், அப்போது 'ஷெரிப் ஆப் மெட்ராஸாக' இருந்த சுந்தர்லால் நஹாதா எடுத்த 'ராதா' படத்திற்கு வசனம் எழுதினேன். இந்தக் கதையை கன்னடத்தில் புட்டண்ண கனகலும், தெலுங்கில் 'சங்கராபரணம்' புகழ் டைரக்டர் கே. விஸ்வநாத்தும், ஹிந்தியில் சி.வி.ராஜேந்திரனும், தமிழில் என்னைத் திரையுலகில்அறிமுகம் செய்த ஏ.சி. திருலோகச்சந்தரும் டைரக்ட் செய்தார்கள்.
இதன் தெலுங்குப் படத்தை தி.நகரில் லோடிகான் தெருவிலிருந்த சுந்தர்லால் பிரிவியூ தியேட்டரில் எனக்குப் போட்டு காட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள். படம் ஆரம்பிக்கும் நேரம் சுந்தர்லால் நஹாதாவுடன் ஸ்ரீராமுலு நாயுடு வந்தார்.
என் பக்கத்தில் அவர்கள் இருவரும் அமர்ந்து தெலுங்கு படம் 'சாரதா'வைப் பார்த்தார்கள். நஹாதா எனக்கு ஸ்ரீராமுலு நாயுடுவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் போட்டிருந்த அந்த சில்க் ஜிப்பா, மல் வேட்டி, கோல்டன் பிரேம் கண்ணாடி, கட் ஷூ என்னைக் கொஞ்சம் மனத்தில் பயமுறுத்தியது.
ஊர்வசி சாரதா கதாநாயகியாக நடித்த 'சாரதா' தெலுங்குப் படத்தின் இடைவேளையில் மூவருக்கும் பிஸ்கட், டீ என்று ஆபீஸ் பையன் தந்து போனார். நான் அதைச் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்ததை ஸ்ரீராமுலு நாயுடு பார்த்தார். கண்களைத் துடைத்துக் கொண்டபோது 'உங்களுக்குத் தெலுங்கு தெரியுமா?' என்று கேட்டார். 'எனக்கு விவரம் தெரிய 'படிக்காத மேதை', 'பாசமலர்', 'துலாபாரம்' மூன்று படங்களையும் தியேட்டர்களில் பார்த்த போது அழுதிருக்கிறேன். அதற்குப் பிறகு இப்போது 'சாரதா' படம் பார்த்து அழுதேன்' என்று அவரிடம் விவரம் சொன்னேன்.
ஸ்ரீராமுலு நாயுடு என்னைத் தட்டிக் கொடுத்தார். 'ஒரு கதாசிரியன் மொழித் தெரியாமல் அழுகிறான் என்றால் நஹாதா எடுக்கப் போகும் 'ராதா' படம் நிச்சயம் வெற்றிப் பெறும்' என்று நஹாதாவிடம் கூறினார். இடைவேளைக்குப் பிறகு அவ்வப்போது எனக்கு நல்ல வசனங்களை மொழிப் பெயர்த்து சொன்னார்.
படம் முடிந்ததும் 'உங்கள் படம் 'ராதா'வையும் நான் உங்களுடன் சேர்ந்து பார்ப்பேன். அதற்குள் எனக்கு இதைப் போல் நல்ல கதை - பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ளது போன்ற கதை ஒன்றைத் தயார் பண்ணுங்கள். இதுவரை நான் கொலை, சஸ்பென்ஸ் என்று எடுத்துச் சலித்து விட்டேன்' என்றார்.
தியேட்டரை விட்டுப் போகும்போது 1000 ரூபாய் கொடுத்து 'என் அட்வான்ஸ்' என்று சொல்லி விட்டு காரில் ஏறிப் போனார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.