கண்டது
(பண்ணையபுரம் சின்னமனூர் வழித்தடத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'புலிக்குத்தி'
அ.ராஜாரகுமான், கம்பம்.
(திருநெல்வேலி சங்கரன்கோவில் வழித்தடத்தில் அழகியபாண்டியபுரம் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
'இரண்டும் சொல்லான்'
-முனைவர் இராம.கண்ணன், திருநெல்வேலி.
(மயிலாடுதுறை கச்சேரி சாலையில் சென்ற வேனின் பின்புறம் எழுதியிருந்தது)
'சிகரம் தொட சிறகுகள் மட்டும் போதாது. சிதறாத முயற்சியும் தேவை!'
சங்கீதசரவணன், மயிலாடுதுறை.
கேட்டது
(திருமங்கலம் பேருந்து நிலையத்தில் தந்தையும் மகனும் பேசியது)
' அப்பா... நீங்க எனக்கு இவ்ளோ கண்டிஷன் போடுறீங்களே... நீங்க சொல்றதையெல்லாம் கேட்கணும்னா ரெண்டு ஆப்ஷன் தர்றேன்.. ஆப்ஷன் ஒண்ணு.. அம்மாவும் நீங்களும் சண்டையே போட்டுக்காமல் ஒரு வாரம்...'
'ஆப்ஷன் ரெண்டு எனக்கு ஓ.கே.'
'அப்பா.. நான் ஆப்ஷன் ஒண்ணையே சொல்லி முடிக்கலையே...'
பெ.நா.மாறன், மதுரை.
(பல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்காவில் இரு இளைஞர்கள் பேசியது)
'சாதி பேதம் இல்லாத ஒரு புதிய தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணிருக்கேன் மச்சி...'
'வெரிகுட்.. அதுக்கு நான் என்ன பண்ணணும்?'
'உன்னோட தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்...'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை74.
(திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரு பெண்கள் பேசியது)
'இந்த பஸ்ஸில் ஏறாதே.. அந்த பஸ்ஸில் ஏறாதேன்னு சொல்றீயே... எந்த பஸ்ஸில்தான் ஏறணும்னு சொல்றே...?'
'பஸ்ஸூக்கு முன்பக்கத்துல லிப்ஸ்டிக் போட்ட மாதிரி ரோஸ் கலர் அடிச்சிருப்பாங்கல்ல.. அதில் ஏறு... ப்ரீயா போகலாம்...'
தே.சந்தியா, விருதுநகர்.
யோசிக்கிறாங்கப்பா!
அறிவு என்பது எதைப் பேசுகிறோம் என்பதில் தெரிகிறது. ஞானம் என்பது எதை எப்போது பேசுகிறோம் என்பதில் தெரிகிறது.
துடுப்பதி வெங்கண்ணா, ஈரோடு.
மைக்ரோ கதை
எனது பக்கத்து வீட்டுக்காரருக்கு வயது அறுபது. அவர் எப்போதும் எனக்கு எச்சரிக்கை செய்வார்.
ஒருமுறை அம்மாவுக்குப் புடவையை எடுத்து வந்தபோது, பக்கத்து வீட்டுக்காரரோ, 'இதெல்லாம் நல்ல சரக்கு இல்லை. சாயம் வெளுத்துவிடும்' என்றார். புடவையை தண்ணீரில் போட்டதுமே சாயம் வெளுத்துவிட்டது.
'வீட்டுக்கு கூரையை பிரித்து ஓடு மாற்ற தீர்மானித்தேன். இப்போது வேண்டாமே. மழைக்காலம் ரெண்டு மாதம் போகட்டும்' என்றார். நான் கேட்கவில்லை. கூரையை பிய்த்துமே மழை கொட்டோ, கொட்டெவென பொழிய ஆரம்பித்தது. அவர் என்னைப் பார்த்தார். நான் மௌனமாகத் தலைகுனிந்தேன்.
க.அருச்சுனன், செங்கல்பட்டு.
எஸ்.எம்.எஸ்.
பகல் கனவு பலிக்காது. பகட்டு வாழ்க்கை இனிக்காது.
தா.முருகேசன், திருத்துறைப்பூண்டி.
அப்படீங்களா!
பயன்பாட்டாளர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய சேவைகளை வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்து வருகிறது.
தகவல்களைப் பகிர வாட்ஸ் ஆஃப் எப்படி வேகமாகச் செயல்படுகிறதோ, அப்படி பகிரப்பட்ட ஒட்டுமொத்த தகவல்களை வேகமாக படிக்க பெரும்பாலனவர்களிடம் நேரமிருப்பதில்லை. இதனால் தனிநபர் சாட்டுகளிலும், குழு சாட்டுகளிலும் ஏராளமான படிக்காத தகவல்கள் சேமிப்பாகி கொண்டே இருக்கும்.
இதை தேடிக் கண்டுபிடிக்க 'அன்ரீட்' என்ற சேவை பயன்பட்டாலும், அதில் என் தகவல் உள்ளது என்பதை உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும்.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் படிக்காத சாட்டுகளில் உள்ள ஏராளமான தகவல்களில் முக்கியமானதை தொகுத்து வழங்கும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தனிநபர் சாட்டிலோ, குழு சாட்டிலோ படிக்காத ஏராளமான தகவல்கள் இருந்தால், அதை தேர்வு செய்தால்போதும், அதில் உள்ள முக்கிய தகவல்களின் தொகுப்பு அங்கே தெரியும். இதனால் நேரத்தை விரையமாக்காமல் சேமிக்கலாம்.
இந்தச் சேவை ஆங்கில மொழியில் அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகி உள்ளது. விரைவில் பல்வேறு மொழிகளுடன் பல்வேறு நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று வாட்ஸ் ஆஃப் அறிவித்துள்ளது.
அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.