தற்போது ஒவ்வொருவரும் கைப்பேசியிலேயே நேரத்தை அறிகிறோம். இதற்கு முன்பு வீடுகளில் சுவர் கடிகாரங்களும், கைகளில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரங்களின் வாயிலாகவும் நேரத்தை அறிந்தோம். ஆனால், கடிகாரங்களின் வருகைக்கு முன்பு ஊரின் முக்கிய இடங்களிலேயே மணிக்கூண்டுகள், நேரம் காட்டும் கருவிகள் நிறுவப்பட்டிருந்தன. சங்கு ஒலிப்பதன் வாயிலாக, நேரத்தை அறிவதும் உண்டு.
தற்போது மணிக்கூண்டுகள் காலத்தின் பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் நாட்டில் உள்ள புகழ்பெற்ற மணிக்கூண்டுகள் குறித்து அறிவோம்.
ராஜா பாய் மணிக் கூண்டு தெற்கு மும்பையில் உயர்நீதிமன்றத்துக்கு அடுத்த பல்கலைக்கழகக் கோட்டையில் அமைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையை நிறுவிய பணக்காரத் தரகர் பிரேம்சந்த் ராய்சந்தின் கண் தெரியாத தாயாரின் நினைவாக கட்டப்பட்டது. 1870இல் இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய். வெனிஸ், கோதிக் கட்டட கலை கலந்த பாணியில் எழுந்துள்ளது.
லண்டன் பிக்பென் கடிகாரப் பாணியில் கட்டப் பட்டுள்ளது. இதன் கூடுதல் கவர்ச்சி வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள். தூரத்திலிருந்தே தெரியும் இந்தக் கடிகாரம் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெல்லிசையை இசைக்கும். மும்பையின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று.
லக்னோ ஹுசைனாபாத் மணிக்கூண்டு
நாட்டின் மிக உயரமான மணிக் கூண்டு இது தான். 67மீ. உயரம் கொண்டது. 1837இல் திறக்கப்பட்ட இந்தக் கோபுரம் முகலாய, விக்டோரியன் கட்டடக் கலையின் கலவை. இதன் பாரம்பரிய ஊசல் 14 அடி நீளம் கொண்டது.
வடமேற்கு மாகாணத்தின் லெப்டினென்ட் கவர்னர் சர் ஜார்ஜ் கூப்பரின் வருகையை முன்னிட்டு அமைக்கப்பட்டது. கடிகாரத்தின் டயல் 12 முழு தங்கப் பூ, அதனை சுற்றி மணிகள் கொண்டது. நடுவில் 27 ஆண்டுகள் கடிகாரம் இயங்காமல் நின்றது. ஒருவழியாக அது சரிசெய்யப்பட்டு 2010 முதல் மீண்டும் கடிகாரம் இயங்கி வருகிறது.
ஜோத்பூர் காந்தாகர் மணிக் கூண்டு
மகாராஜா சர்தார் சிங்கால் கட்டப்பட்டது. நகரின் மையத்தில் சுமார் 70 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. 'காந்தாகர்' என அழைக்கின்றனர். இதன் உச்சிக்குச் சென்று ஜோத்பூரின் அழகை ரசிக்கலாம்.
மைசூரு வெள்ளி விழா மணிக் கூண்டு
1927இல் மைசூரு மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியின் வெள்ளி விழாவை நினைவு கூறும் வகையில் எழுப்பப்பட்டது. 'டோட்டா கடியாரா' என அழைக்கின்றனர். இதன் பொருள் 'பெரிய கடிகார கோபுரம்' என்பதாகும். இந்தோ சாராசனிக் ராஜஸ்தான், ஆங்கிலத் தேவாலய பாணிகளின் கட்டடக் கலவையில் எழுந்துள்ளது. 75 அடி உயரம் கொண்டது.
ராயப்பேட்டை மணிகூண்டு
சென்னையில் நான்கு தனித்துவக் கடிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்று ராயப்பேட்டை கடிகாரக் கோபுரம். இதில் உள்ள கடிகாரம் 'கனி அன்ட் சன்ஸ்' நிறுவனத்தால், அன்பளிப்பாக வழங்கப்பட்டது. முக்கிய நான்கு ரோடு சந்திப்பில் உள்ளது. கிளாசிக் ஆர்ட் டெகோ கட்டட கலை சார்ந்தது. 2021ஆம் ஆண்டு முதல் இதனை ராயப்பேட்டை ரோட்டரி சங்கம் தத்து எடுத்துள்ளது.
செகந்தராபாத் மணிக் கூண்டு
1806-இல், 'செகந்திராபாத்' என இந்தப் பகுதி பெயரிடப்பட்டது. 1897இல் மணிக்கூண்டு கட்டி திறக்கப்பட்டது. இதனை 'வெற்றித்தூண்' என அழைப்பர்.
ஆங்கிலேயர்களின் முன்னேற்றத்தை வரவேற்று கட்டப் பட்டது. இதனை கட்ட பண உதவி செய்தவர் திவான் பகதூர் சேத்லட்சுமி நாராயணன் ராமகோபால்.
மிர்சாபூர் கடிகாரக் கோபுரம்
உத்தர பிரதேசத்துக்கு உள்பட்ட மிர்சாபூரில் இந்தக் கடிகார கோபுரம் அமைந்துள்ளது. பாரம்பரிய கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.1000 கிலோ உலோக அலாய் மணியுடன் கூடிய கோபுரம், 1891இல் கட்டி திறக்கப்பட்டது. இந்திய நிலையான நேரம் இந்த கடிகாரத்தின் 82.5 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து கணக்கிடப்படுகிறது.
ஹரித்வார் மணிக்கூண்டு
உத்தரகண்டின் ஹரித்வாரில் உள்ள இந்த மணிகூண்டை 'ராஜா பிர்லா கோபுரம்' என அழைப்பர். 1938இல் ராஜா பல்தேவ் தாஸ் பிர்லாவால் கட்டப்பட்டது. மணிக் கூண்டு உள்ள இடம் மாளவியா தீவு என அழைக்கப்படுகிறது.
கங்கையின் பிரபல குளியல் கரையான ஹர்கி பெளரி படிகட்டுகளுக்கு எதிரே உள்ளது.
வதோதரா சிம்னாபாய் மணிக் கூண்டு
1896-இல் கட்டி முடிக்கப்பட்ட இதனை ராவ்புரா கோபுரம் எனவும் அழைப்பர். பரோடா மன்னர் மூன்றாம் சாயாஜி ராவ் கெய்க் வாட்டின் ராணி, முதல் மனைவி சிம்னாபாய் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தோ சாராசனிக் கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
சப்ஜி மண்டி மணிக் கூண்டு
தில்லி சப்ஜி மண்டி அருகே உள்ள இதனை 'காந்தாகர்' எனவும் 'ராம்ரூப் கடிகார மணிக் கூண்டு' எனவும் அழைப்பர். 50அடி உயரமுள்ள இந்த மணிகூண்டு 1941இல் கட்டி முடிக்கப் பட்டது. ராம் சொருப் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. ஆர்ட் டெகோ ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது.
வேலூர் மணிக்கூண்டு
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த மணிக்கூண்டு உள்ளது. 1914 - 18இல் நடைபெற்ற முதல் உலகப்போரில் வேலூரைச் சேர்ந்த 277 ஆண்கள் பங்கேற்று, அதில் 14 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் விவரங்களுடன் 1928இல் கிங் ஜார்ஜ் சார்பில்
இந்த மணிக்கூண்டு கட்டப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின்போது, இது திறக்கப்பட்டது. இந்த மணிக்கூண்டு அருகே மலர் அங்காடி, லாங்கு பஜார், மண்டி தெரு என வணிகப் பகுதியாகவே உள்ளது.
பி.ஜெயச்சந்திரன்
ஆரணி மணிக்கூண்டு...
திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியமான நகரமான ஆரணி பேருந்து நிலைய வளாகத்தில் நான்கு பக்கங்களிலும் நேரத்தைக் காட்டும் மணிக்கூண்டு அமைந்துள்ளது. இந்த மணிக்கூண்டு 1967இல் அமைக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் அண்ணா திறந்துவைத்தார். ஆரணியின் அடையாளமான இந்த மணிக்கூண்டு திகழ்கிறது. ஆரணிக்கு வருகை தருவோர் இதை காணாமல் செல்வதில்லை.
என்.தமிழ்ச்செல்வன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.