
ராமாயணம் குறித்து சாய் பல்லவி பதிவு!
பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம், 'ராமாயணா தி இன்ட்ரொடக்ஷன்' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக அப்போதே அறிவித்திருந்தனர். முதல் பாகத்தை 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போதும், இரண்டாம் பாகத்தை 2027ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போதும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்திற்கு ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானும் இசையமைத்திருக்கிறார். நடிகர் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், நடிகர் யஷ் ராவணன் கதாபாத்திரத்திலும், நடிகை சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், நடிகர் ரவி தூபே லட்சுமணன் கதாபாத்திரத்திலும், சன்னி தியோல் ஹனுமான் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதைப் பணிகளைத் திரைக்கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவன் மேற்கொண்டிருக்கிறார். 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் 'டிங்' என்ற கிராபிக்ஸ் நிறுவனமே இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் விடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
அந்த விடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகை சாய்பல்லவி, 'அம்மா சீதாவின் ஆசிர்வாதத்துடன், ராமயணக் காவியத்தை மீண்டும் உருவாக்கும் பணியில், தெய்வீகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து, அந்தப் பயணத்தை அனுபவிக்கிறேன்!. இது போன்ற ஒரு நடிகர்கள் மற்றும் குழுவினருடன், நாம் அடைய முயற்சிக்கும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்தப் பதிவு வைரலாகியிருகிறது.
கற்பனை உலகத்தில் நடக்கும் கதை!
அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு 'பாம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன், கிச்சா ரவி, பூவையார் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி இயக்குநர் விஷால் வெங்கட் கூறியதாவது...
' இது நையாண்டி டிராமா படம். உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கக் கூடிய கதையை கொண்டது இந்தப் படம். ஒரு கற்பனை உலகத்தை நாங்கள் படைத்திருக்கிறோம். அந்த உலகத்தின் ஊர் ஒன்றில் ஒரு பிரச்னை நடக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிற ஒரு தரப்புக்கும், இல்லை என்கிற இன்னொரு தரப்புக்குமான பிரச்னை அது. அதனால் பிரிந்திருக்கிற ஊரை இரண்டு நண்பர்கள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பது கதை.
நண்பர்களாக அர்ஜுன் தாஸூம், காளி வெங்கட்டும் நடித்துள்ளனர். இதில் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்கிற விஷயத்துக்குள் செல்லாமல், பொதுவான ஒரு கருத்தைச் சொல்கிறோம். டார்க் காமெடி கதை. 'பாம்' என்ற தலைப்பு உருவகமாக இன்னொரு விஷயத்தைப் பேசும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அர்ஜூன் தாஸ் இது போன்ற கதையில் இதுவரை நடித்ததில்லை. அதனால் ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்' என்றார் விஷால் வெங்கட்.
விஜய் மகனின் தயாரிப்பு நிறுவனம்!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படம் குறித்த விடியோவை வெளியிட்டிருந்தனர். அந்தக் காணொளி இணையத்தில் வைரலானது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
படத்தை முதலில் அறிவிக்கும்போது, லைகா நிறுவனம் மட்டுமே தயாரிப்பாளராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெளியான படத்தின் விடியோவில், லைகா நிறுவனத்துடன் 'ஜே.எஸ்.ஜே. மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் தயாரிப்பாளர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஜேசன் சஞ்சய் புதிதாகத் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் என அப்போது பேசப்பட்டது.
இருப்பினும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் அப்போது வெளியாகவில்லை. தற்போது, இந்தத் தயாரிப்பு நிறுவனம் ஜேசன் சஞ்சய்யால் தொடங்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம், அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தை நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து புதிய உறுப்பினராக இணைந்திருக்கிறார்.
மாதம்தோறும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையில், கடந்த மாதம் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஜேசன் சஞ்சயின் பெயரும், அவரது தயாரிப்பு நிறுவனமான 'ஜே.எஸ்.ஜே. மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' பெயரும் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.