
கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி, அபிநய காஞ்சான மாலா என்று பெயர் விளங்கிய சரோஜாதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று திரை உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துப் புகழின் உச்சிக்குப் போனார்.
ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். இது தேசிய விருது பெற்றது. ஆண்டு 1955. இதன் பின் 1958இல் எம்.ஜி.ஆர். தயாரித்த 'நாடோடி மன்னன்' படத்தில் நடித்த பானுமதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் கதையை சிறிது மாற்றி சரோஜாதேவியை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். 1959இல் ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு' தென்னிந்திய கலை ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சரியாகத் தமிழ் பேசும் உச்சரிப்பு இல்லாத நிலையிலும் அவர் பேசிய பிள்ளைத் தமிழ் பிரபலமானது.
ஏவி.எம் எடுத்த 'தாய் மேல் ஆணை', இது வங்காளத்தில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட வெற்றிப் படம். இதன் திரைக்கதை, வசனத்தை நான் எழுதினேன். அர்ஜூன் கதாநாயகனாக நடித்தார். சந்திரபோஸ் இசையமைப்பில் வைரமுத்து பாடல்களை எழுதினார். 'சின்னக் கண்ணா சொல்லு கண்ணா...' என்ற மனதை வருடும் பாடல். 'இதன் பல்லவி ட்யூனை மட்டும் வங்காளப் படத்திலிருந்து எடுத்துக் கொள்வோம்' என்று நான் சரவணன் சாரிடம் சொன்னேன். அவரும் 'நன்றாக இருக்கிறது' என்று சொன்னார். அந்தப் பாடல் பதிவு முடிந்தது.
விஜயா கார்டனில் அந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்தது. அதன் படப்பிடிப்புக்கு சரோஜாதேவி வந்தார். எளிமையான தோற்றத்தில் ஒரு தாயாக இல்லாமல் ஒரு ஹீரோயின் போலவே வந்தார். நான் அவரின் அருகே அமர்ந்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
'யாரையுமே யாரும் அறிமுகம் செய்யவில்லையே' என்று வருத்தப்பட்டார். அவரிடம் 'அந்த வங்காளப் படத்தில் அத்தங்காடி எளிமையான பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கிறார் என்றும் ஒப்பனை உடை ஒரு தாய் போல் இல்லை' என்று சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து 'எத்தனை வருஷமாக சினிமாவில் இருக்கீங்க?' என்று சிறிதும் கோபப்படாமல் சிரித்தபடி கேட்டார்.
நான் என்னைப் பற்றிச் சொல்லி விட்டு '1966இல் அவர் நடித்த 'நான் ஆணையிட்டால்' படத்தில் அவரை ' உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்' என்ற பாடல் எடுக்கப்பட்ட போது எம்.ஜி.ஆருடன் பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான் என் படத்தில் பார்க்கிறேன்' என்று கூறி விட்டு ஆளை விட்டால் போதும் என்ற நிலையில் ஒதுங்கிக் கொண்டேன். அதன் பிறகு என் வசனத்தைக் கூட அவரிடம் படித்துக் காட்டாமல் உதவி இயக்குநர்களைப் படிக்க சொன்னேன்.
அதைப் புரிந்து கொண்ட அவர் என்னைக் கூப்பிட்டு 'கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் அருமையான படம் 'குல விளக்கு' பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்று தலையசைத்தேன். 'அந்தப் படத்தில் நான் டல் மேக்கப்புடன் எளிமையான ஒரு குடும்பப் பெண்ணாக நடித்தேன். என் சோகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை' என்று அமைதியாகச் சொன்னார். அதை நானும் புரிந்துக் கொண்டேன். ரசிகர்கள் சினிமா கலைஞர்களுக்கு ஒரு இமேஜ் வைத்திருந்தார்கள் என்பது 2000 வரைக்கும் உண்மையாகத்தான் இருந்தது. இப்போது அப்படி எல்லாம் எதுவுமில்லை என்று படங்களைப் பார்த்தாலே தெரியும்.
என் படம் வெளியான சில மாதங்களில் 'உச்சகட்டம்' இயக்குநர் ராஜ் பரத், 'மோகமுள்' தயாரிப்பாளர் ஜானகிராமன் இருவருடனும் நான் காரில் பெங்களூரு போன போது அவர்கள் சரோஜாதேவியைப் பார்க்க விரும்பினார்கள். நான் அவர் வீட்டுக்குப் போன் செய்தேன். அப்போது அவர் வரவேற்பாரா? மாட்டாரா? என்று சந்தேகத்துடன் பேசினேன். அதற்கு மாறாக 'எப்போது வந்தீர்கள். சதாசிவ நகர் வீட்டுக்கு வாருங்கள்' என்று சொன்னார். நாங்கள் மூவரும் போனோம்.
அருமையாக உபசரித்துச் சாப்பிடச் சொன்னார். 'ஏதாவது உதவி வேண்டுமா? யாரைப் பார்க்க வந்தீர்கள்?' என்று எல்லா விவரங்களையும் கேட்டு எம்.ஜி.
ஆரைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்தார்.1967இல் ஹர்ஷாவை மணந்து 1986இல் அவர் மறைந்த பின் அந்தப் பிரிவில் சில காலங்கள் சிரித்துப் பேசுவதையே மறந்து வாழ்ந்தார். ஜெமினியுடனும் சிவாஜியுடனும் இன்னமும் மனதில் நிற்கின்ற படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் மட்டும் 25 படங்களுக்கு மேல் நடித்தார்.
எனது 'தீர்க்க சுமங்கலி'யின் கன்னடப் படத்தில் ராஜ்குமாருடன் நடித்து மறக்க முடியாத படமாக்கினார். 1969இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். ஒரே ஒரு படம்தான் என் படம். அதில் நடித்ததன் மூலம் பல படங்களில் அவர் நடித்தத பெருமையை நான் அடைந்தேன் என்பது அந்த ஒரு நாள் உபசரிப்பு இன்றும் நினைத்துப் பார்க்க வைக்கிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.