'ஆவிச்சி மெய்யப்பன் சரவணன்' என்பது அவர் குடும்பப் பெயர். ஆனால் நாங்கள் அனைவரும் விரும்பும் மிக நல்ல சரவணன் சார் என்றால் அதை விடப் பொருந்தும். எந்த நிலையிலும் சாந்தமான முகம்.
யார் அவர் அறைக்குள் சென்றாலும் எழுந்து நின்று வரவேற்கும் இயல்பு, அன்பு கலந்த கனிவான பேச்சு, வெள்ளை உடை, நெற்றியில் குங்குமம், விவேகம் கலந்த நல்ல மனம் இதெல்லாம் அவரிடம் மட்டுமே நான் கண்ட அருமையும் பெருமையும் அளவற்றது. எதிலும் குறை சொல்ல முடியாத அளவு கோபுரமாய் உயர்ந்து நிற்பவர்.
அவரை நான் பல படத்துவக்க விழாக்களில் சந்தித்திருக்கிறேன். ஆனால் என் தயாரிப்புப் பட விழாவில்தான் அவரை அவரது அறையில் சந்தித்து 1977இல் 'அச்சாணி' படத்தின் அழைப்பிதழைக் கொடுத்தேன். நடிகர் அசோகன்தான் என்னைப் பற்றியும் என் கதை
களைப் பற்றியும் சற்று அதிகமாகவே கூறி அவரிடம் அறிமுகம் செய்தார். எல்லாவற்றையும் விட சரவணன் சாரின் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரிடம் கதை, வசனகர்த்தாவாகப் பணிபுரிந்ததே என் மேல் அவர் காட்டிய அன்பிற்கும் நட்பிற்கும் அடித்தளமாக இருந்தது. யார் எந்த விழாவிற்கு அழைத்தாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்று பேதம் காட்டாமல் அந்த விழாவிற்கு வரும் வி.ஐ.பி. அவராகத்தான் இருக்க முடியும்.
என் முதல் படம் 'சொந்தம்' 1972இல் ஏவி.எம். லிமிடெட்தான் திரை அரங்குகளில் பல மாவட்டங்களில் வெளியிட்டது. அப்படி ஆரம்பித்த தொழில் தொடர்பு நான் இயக்குநராகித் தயாரிப்பாளராகித் தொழிலில் பல போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் ஏவி.எம்.
நிறுவனத்தைச் சேர்ந்த ரெட்டியார் என்பவர் என் வீட்டிற்கு வந்து என்னை சரவணன் சார் கூட்டி வரச் சொன்னதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். என்னை அன்புடன் வரவேற்று என் மன நிலையைப் புரிந்து கொண்டு 'தாய் மேல் ஆணை' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.
அது அவர் தயாரித்த 'சம்சாரம் அது மின்சாரம்' போல் குடும்பக் கதையாக இல்லையே என்ற ஆதங்கம் எனக்குள் ஏற்பட்டாலும் வியாபார ரீதியாகப் பெரிய வெற்றிப் பெற்றது என்பதில் மகிழ்ச்சி அடைந்தேன்.
அடுத்தது பிரபல நாவலாசிரியை சிவசங்கரியின் 'நெருஞ்சி முள்' என்ற நாவலை 13 வாரங்களாக தூர்தர்ஷனுக்கு எடுத்துத் தர முடிவு செய்து அதற்குத் திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அந்த 'நெருஞ்சி முள்' தலைப்பை மாற்றி 'நேற்றைய மனிதர்கள்' என்ற தலைப்பைச் சொன்னார்.
ஏவி.எம்.மின் செல்லப்பிள்ளை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். அதிகாலை எழும் பழக்கம் 35 ஆண்டுகளாக எனக்கு இருப்பது தெரிந்து அவரும் ஸ்டூடியோவுக்கு அதிகாலை 8 மணிக்குள் வந்து என் காட்சிகளை, நான் எழுதியிருப்பதைப் படிக்கச் சொல்லி விட்டு அவர் அறையிலேயே அவருடன் காலை டிபன், காபி சாப்பிட வைத்து என் அறைக்கு அனுப்புவார்.
நான் எழுதிய 'என் நாணயம்' சீரியலைத் தயாரித்தவர் ஏ.சி. திருலோகசந்தர், முதல் தடவையாக இயக்கினார். கே.ஆர்.விஜயா முதல் தடவையாக என் சீரியலில் நடித்தார். நான், மயிலாப்பூர் அகாதெமியின் முதல் பரிசைப் பெற்றதற்காக எனக்கு வாழ்த்துக் கடிதம் எழுதி என் வீட்டிற்கு அனுப்பினார்.
ஒரு நாள் மாலை நான் என் வீட்டிற்கு ஸ்டூடியோவில் இருந்து ஏவி.எம். கம்பெனியின் காரில் புறப்பட இருந்த போது அவர் தனது காரில் என்னை ஏற்றிக் கொண்டு போகும் வழியில் என்னை வீட்டில் விட்டுச் சென்றார். அவர் 'ஷெரீப் ஆஃப் மெட்ராஸ்' ஆக இருந்ததை எல்லாம் சிறிதும் நினைக்காமல் போகும் வழி எல்லாம் ட்ராபிக் போலீஸ் அவருக்குச் சல்யூட் அடிக்கும் போதெல்லாம் அவர் ஓட்டி வந்த காரை நிறுத்தித் திரும்பி அவர்களை பார்த்து கும்பிட்டுக் காரை ஓட்டுவார்.
நான் எழுதிய 'தாய் மேல் ஆணை' படத்தில் சென்சார் இரண்டொரு காட்சிகளை வெட்டச் சொன்னபோது நான் அந்த சென்சார் ஆபிசருடன் கோபமாக விவாதித்தேன். உடனே சரவணன் சார் என்னைச் சமாதானப்படுத்தி அந்த ஆபிசர் சொன்னதை ஏற்றுக் கொண்டார்.
அந்தந்த பதவியில் உள்ளவர்களுக்கு அவர் கொடுத்த மரியாதை என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஏவி.எம். அவர்களைப் பற்றி அவரைப் பற்றி தெரிந்தவர்களிடம் எல்லாம் கட்டுரை எழுதச் சொன்னார். நானும் எழுதினேன். அந்தப் புத்தகத்தில் நன்றியுடன் என்று எழுதி அவர் கையெழுத்து இட்டு என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
என் இயக்கம் மற்றும் தயாரிப்புப் படங்களை எல்லாம் தொடங்கி வைத்தவர் அவரே. 'பாட்டொன்று கேட்டேன்' என்ற படத்தை எழுதும் படி ஒப்படைத்தார். சில காரணங்களால் நான் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்ட போதும் என் மேல் சிறிதும் கோபப்படாமல் எனக்குப் போன் செய்து 'உங்கள் பணம் எல்லாம் வாங்கி கொண்டீர்களா.....' என்று கேட்டு 'உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றி' என்று கூறினார். 'டூரிங் டாக்கீஸ்' பேட்டியில் அவரைப் பற்றி கூறியதைக் கேட்டு எனக்குப் போன் செய்து அதற்கும் நன்றி கூறினார்.
அவருக்கு இணை அவர்தான். அவருடன் பயணித்த திரைப்பயணம் மறக்க முடியாதது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.