
என் வயது எழுபத்து நான்கு. கல்லீரல் கோளாறு ஏற்பட்டு, குணமாகிவிட்டது. ஆனால், என்ன செய்தும் 42 கிலோவுக்கும் மேல் எடை கூடவில்லை. எடை அதிகரிக்க, என்ன மருந்து ஆயுர்வேதத்தில் உள்ளது. ஆங்கில மருந்து நிறுத்தாமலேயே ஆயுர்வேத மருந்து சாப்பிட வேண்டுமா?
க.ராஜேந்திரன், மதுரை1
உங்களுடைய பிரச்னையை கீழ்காணும் வகையில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. வயதான நிலைமையில் ஜீரண சக்தி குறைதல், கல்லீரல் சிதைவால் ஒட்டுமொத்த செரிமான கேந்திரப் பாதிப்பு, மன அழுத்தம் அல்லது மன அழுத்தத்தால் உண்டாகும் உடல்சக்தி குறைதல், வழக்கமான ஊட்டச்சத்து இல்லாத உணவுப் பழக்கம் உள்ளிட்டவை.
இதற்கான ஆயுர்வேத பரிந்துரைகள்:
லோஹாஸவம் முப்பது மில்லி காலை உணவுக்குப் பிறகு சாப்பிடுதல், இதனால் ரத்த வளம் மற்றும் உடல்சக்தி கூடுதல்.
பிப்பல்யாஸவம் இரவு உணவுக்குப் பிறகு முப்பது மில்லி சாப்பிடுதல். கல்லீரல், ஜீரண சக்தி மேம்படுதல்.
க்ஷஷ்மாண்டரஸாயனம் பத்து கிராம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுதல். உடல் வலு, உடல் பருமனைக் கூட்ட உதவும்.
நீங்கள் புலால் உணவு உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால், பிரஹச் சாகலாதிகிருதம் எனும் நெய் மருந்தை பத்து கிராம் உருக்கிய நிலையில், மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, சிறிது சூடான பால் அருந்தலாம்.
சுத்த சைவ உணவு மட்டுமே உண்பவராக இருந்தால், பிராம்ஹ ரசாயனம் பத்து கிராம் மாலையில் வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடலாம்.
உணவுப் பரிந்துரைகள்:தினமும் காலையில் பசும்பாலுடன் பாதாம் பருப்பு, ஏலக்காய் தூள் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இரவில் உணவுடன் பசுநெய்யை உருக்கிச் சேர்த்த பருப்புச் சாதம் சாப்பிடவும்.
சிறிது, சிறிதாக நான்கு முறை உணவு பசி இல்லையெனினும் நேரப்படி உணவு அளித்தல்.
கூழ் வகைகள்: அரிசி நொய்க் கஞ்சி, கோதுமையின் முழு சத்துடன் கூடிய இனிய பலகாரங்கள்.
மென்மையான பழங்கள்: பப்பாளி, செவ்வாழை, திராட்சை.
பசுமை காய்களிகள் நன்கு வேகவைத்து உண்ணுதல்.
ஆங்கில மருந்து சேர்க்கை, வழிகள், கவனிக்க வேண்டியவை.
கல்லீரல் சீராகிய பின்னர், அளவான அளவில் ஆங்கில மருந்துகள் (ரத்தக் கொதிப்பு, சர்க்கரை போன்றவை) தொடரலாம்.
ஆயுர்வேத மருந்து மற்றும் ஆங்கில மருந்துகளுக்கான இடைவெளியை ஒரு மணி நேரம் என தீர்மானித்துச் சாப்பிடவும். மருத்துவரின் அறிவுரை இங்கு அவசியம்.
தினசரி நற்பண்புகள்: யோகா, சுவாசப் பயிற்சி.
தூக்கத்தின் மேம்பாடு: இரவு உணவுக்குப் பின்னர் நடந்து தூங்குதல்.
வீட்டில் சாந்தமான சூழ்நிலை.
நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட நிலைகள் இருப்பின், அவற்றுக்கேற்ப மருந்துகளை மாற்றி அமைப்பது.
உளுந்து வடையை பசுநெய்யில் பொரித்து உடல் பருமனுக்காகச் சாப்பிடும் வழக்கம் இன்றும் பல கிராமங்களில் செய்யப்படுவதையும் நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.