முதல் காதல் எப்போது? - மனம் திறந்த அனுஷ்கா!
அனுஷ்காவின் சினிமா பயணத்தில் கடைசியாக 'பாகுபலி' படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு பெரிய வெற்றிப்படம் இவருக்கு அமையவில்லை. இவ்வாறான சூழலில் இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் 'காட்டி' என்ற படம் ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகஇருந்த நிலையில் தற்போது அது ரிலீஸ் தேதியிலிருந்து தள்ளிப்போயிருக்கிறது.
மறுபக்கம், இவரின் படம் ரிலீஸூக்கு வரும்போதெல்லாம் அனுஷ்காவுக்கு எப்போதும் திருமணம் என்ற கேள்வி சுற்றிக்கொண்டிருக்கும். ஒருகட்டத்தில், பிரபாஸூம், அனுஷ்காவும் காதலிப்பதாகப் பேச்சு அடிபட்டன. ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறி அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.இந்த நிலையில், 43 வயதாகும் அனுஷ்கா, தனக்கு வந்த முதல் காதல் பற்றி மனம் திறந்திருக்கிறார்.
பேட்டியொன்றில் இதனைப் பகிர்ந்த அனுஷ்கா, 'பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பைச் சேர்ந்த பையன் என்னிடம், 'உயிருக்கு உயிராக உன்னைக் காதலிக்கிறேன். ஐ லவ் யூ' என்றான். அப்போது, ஐ லவ் யூ என்பதன் அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. இருப்பினும், அப்போது ஓ.கே. என்று சொன்னேன்.
இப்போதும் அது ஒரு இனிமையான நினைவாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
இயக்குநர் சுந்தர் சியின் 'ரெண்டு' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுஷ்கா, 'அருந்ததி' படத்தின் வெற்றியால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து, சூர்யாவுடன் 'சிங்கம்', விஜய்யுடன் 'வேட்டைக்காரன்', அஜித்குமாருடன் 'என்னை அறிந்தால்', ரஜினியுடன் 'லிங்கா' என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.
நித்யாவுடன் நடிக்க காத்திருந்தேன் விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி, நித்யாமேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி, யோகி பாபு, ஆர்.கே. சுரேஷ், தீபா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவன் தலைவி'. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின்
பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் விஜய்சேதுபதி பேசும் போது... 'நிறைய சண்டை சச்சரவுகளுக்கு இடையில்தான் இந்தப் படமே தொடங்கியது. நான் பாண்டிராஜுடன் பணியாற்றக் கூடாது என இருந்தேன், அதேபோல அவரும் என்னுடன் பணியாற்றக்கூடாது என இருந்தார். ஆனால் எங்களுக்குள் தனிப்பட்ட பிரச்னைகள் பெரிதாக இல்லை.
இருவருக்கும் இடையில் ஒரு பூ மலர்வதைப் போல ஒரு அன்பு மலர்ந்து. அதன்பிறகு எல்லாமே எளிதாக நடந்தது. எனக்கு 2009இல் இருந்து அவரைத் தெரியும். இந்தப் படம் தொடங்கியது ஒரு பெரிய சுழற்சி முடிவடைந்ததைப் போல இருந்தது. அழகான அனுபவம். 'மூன்றாம் பிறை' படமெடுத்த சத்யஜோதி நிறுவனத்துடன் இணைவதில் ரொம்ப சந்தோஷம். மலையாளப்படத்தில் ஒரு கெஸ்ட்ரோல் நடித்தபோது நித்யா அறிமுகம். இருவரும் சேர்ந்து பணியாற்ற நினைத்தோம். அது இந்த படத்தில் நடந்தது மிக்க மகிழ்ச்சி.
அவர் நடித்த எந்த கதாபாத்திரத்திலும் அவரைத் தவிர வேறொருவரை கற்பனை செய்து பார்க்கவே முடியாது. சும்மா வந்தோம் நடித்தோம் என இல்லாமல், எல்லாத் தேவைகளையும் புரிந்துகொண்டு நடிக்கக் கூடிய கலைஞர் நித்யா.
ஒரு 500 கி.மீ. பயணம் செய்தோமென்றால் ஒவ்வொரு கி.மீட்டரும் ஞாபகம் இருக்காது. ஆனால் சில இளைப்பாறல்கள், தருணங்கள் மட்டுமே நினைவில் இருக்கும். அதை நினைத்துப்பார்த்தால் மீண்டும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தோன்றும். அப்படித்தான் பாண்டிராஜூடன் பணியாற்றிய அனுபவம் இப்போது இருக்கிறது.
கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், டார்ச்சராக இருந்தாலும் ஷூட்டிங்கை ரசித்தோம். வரும் 25ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
சந்தோஷமாக ரசியுங்கள்'' என்றார் விஜய்சேதுபதி.
சென்னைக்கு வந்த ஷில்பா ஷெட்டி!
சாண்டல்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'. 'ஜனநாயகன்' படத்தை தயாரிக்கும் கே.வி. என் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.
பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.அந்த நிகழ்வில் ஷில்பா ஷெட்டி பேசும்போது, ' எனக்கு சென்னையில் மசாலா தோசை ரொம்பவே பிடித்திருக்கிறது. எனக்கு தென்னிந்திய உணவுகள் எல்லாமே பிடிக்கும். எனக்கு சென்னையையும் இங்கு இருக்கும் மக்களையும் மிகவும் பிடிக்கும். '' என்றவரிடம் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்காததுப் பற்றி கேள்வி எழுப்பினர்.
அவர், ' மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். பிறகு, தமிழில் விஜயுடன் நான் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். பிறகு தமிழ் சினிமாவிலிருந்து சிறந்த வாய்ப்புகள் எதுவும் எனக்கு வரவில்லை.
ஆனால், தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு எனக்கு பிடிக்கும். இந்த 'கே.டி' திரைப்படத்தில் எமோஷனும் இருக்கிறது. இப்படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்ஷன் படம்.'' எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.