தால் ஏரியின் அன்னை

'தால் ஏரி'யில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் 'ஷிக்காரா' படகுகளைத் துளாவிக் கொண்டு, ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களைச் சேகரித்து தான் கொண்டுவந்திருக்கும் பையில் போடுவார் எல்லிஸ் ஹூபர்டினா ஸ்பாண்டர்மேன்.
எல்லிஸ் ஹூபர்டினா ஸ்பாண்டர்மேன்
எல்லிஸ் ஹூபர்டினா ஸ்பாண்டர்மேன்
Published on
Updated on
2 min read

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் இதயத் துடிப்பான 'தால் ஏரி'யில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் 'ஷிக்காரா' படகுகளைத் துளாவிக் கொண்டு, ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களைச் சேகரித்து தான் கொண்டுவந்திருக்கும் பையில் போடுவார் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுபத்து ஒன்பது வயதான எல்லிஸ் ஹூபர்டினா ஸ்பாண்டர்மேன்.

சுமார் ஐந்து ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்புமின்றி, தால் ஏரியை சுத்தம் செய்து வரும் இவர் கூறியது:

'எங்களது நாட்டில் மக்கள் தொகையைவிட சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகம். பெருமளவு சைக்கிளைத்தான் பயன்படுத்துவோம். அதனால் ஸ்ரீநகரில் நான் சைக்கிளைதான் போக, வரப் பயன்படுத்துகிறேன். அறுபது வருடங்களாக சைக்கிள் ஓட்டி வருவதால், அது என்னை ஆரோக்கியமாகவும் இயற்கையோடு இணைந்ததாகவும் வைத்திருக்கிறது.

காஷ்மீர் மீதான காதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஒரு சுற்றுலாப் பயணியாக வந்தேன். பனிமலைகள், புல்வெளிகளின் அழகு என்னை ஈர்த்தது. தால் ஏரியிலிருந்து மலைகள், வனப்பகுதிகள், மொகல் பூங்காவைப் பார்க்கும்போது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகு, காஷ்மீரை எனது புகுந்த வீடாக மாற்றியது.

நெதர்லாந்து திரும்பியபோது, காஷ்மீரை ரொம்பவும் இழந்ததாக உணர்ந்தேன். காஷ்மீர் என்னை அழைத்துகொண்டே இருந்தது. அதனால் அந்த அழைப்பை ஏற்று அவ்வப்போது வந்து சென்ற நான் நிரந்தரமாக காஷ்மீர் வந்து, இயற்கை அன்னைக்குச் சேவை செய்து வருகிறேன்.

காஷ்மீரின் அழகை, காஷ்மீர் மக்களின் வாழ்க்கை முறையை பல கோணங்களில் படம் பிடித்து வலை தளங்களில் பதிவு செய்கிறேன். அந்தக் காணொளிகள் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஆதரவைப் பெற்றுள்ளன.

தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சேர்கின்றன. இதைத் தவிர, தானே உருவாகும் செடிகள், பாசிகள் ஏரியின் அழகைக் கெடுக்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளையும், வேண்டாத பாசி செடிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி சுத்தம் செய்து வருகிறேன். ஏரியை எனது வீடாகவே ஏற்றுகொண்டிருக்கிறேன். ஏரியின் அங்கமாக மாறிவிட்ட நான் ஒவ்வொரு நாளும், சொந்த ஷிக்காரா படகைத் துழாவிச் சென்று ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தையும் சேகரித்து சுற்றுப்புறச் சூழகுக்குப் பாதகம் வராதவாறு அவற்றை மாற்றிவருகிறேன்.

இயற்கை அழகை, சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நானே முன்வந்து இந்தப் பணியை ஐந்து ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறேன். அங்கீகாரத்துக்காகவோ, பிரபலமாக வேண்டும் என்பதற்காகவோ இந்தப் பணியைச் செய்யவில்லை. இயற்கையின் மீதான உண்மையான ஈடுபாட்டால் மனம் உவந்து இந்தப் பணியைச் செய்து வருகிறேன்.

சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் அதற்காக பணியைச் செய்ய முடிவதில்லை. அவர்கள் சார்பில் நான் அந்தச் சேவையைச் செய்து வருவதில் எனக்கு மகிழ்ச்சிதான். நேரம் கிடைக்கும்போது ஸ்ரீநகரை சைக்கிளில் சுற்றிவந்து, சாலைகளில், தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துவருகிறேன்.

இதனால் ஸ்ரீநகர்வாசிகள் அவர்களில் ஒருத்தியாக ஏற்றுகொண்டிருப்பதுடன் 'தால் ஏரியின் அன்னை' என்று அழைக்கின்றனர்' என்கிறார் எல்லிஸ் ஹூபர்டினா ஸ்பாண்டர்மேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com