ராஜேந்திர சோழன்: முப்பெரும் விழா!

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா விரைவில் நடைபெறும் நிலையில், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
ராஜேந்திர சோழன்: முப்பெரும் விழா!
Published on
Updated on
3 min read

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா விரைவில் நடைபெறும் நிலையில், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அதாவது, ராஜேந்திர சோழனின் 1005ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது.

ராஜராஜன் 1014 இல் காலமானவுடன் சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டவர் ராஜேந்திர சோழன். ராஜேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் இன்றும் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றுகிறது. மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன், தமிழ்நாட்டு வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசர்.

தன்னுடைய சாதனைகளின் காரணமாக, "பரகேசரி', "யுத்தமல்லன்' உள்ளிட்ட விருதுகளையும், 101244இல் கடல் கடந்தும் சென்று நாடுகளைக் கைப்பற்றியதால் "கடாரம் கொண்ட சோழன்' என்ற பெயரும் பெற்றார். ராஜேந்திர சோழனின் காலம் "தமிழர்களின் பொற்காலம்' எனலாம்.

ராஜேந்திரசோழனுடைய காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கைக் கரை வரையும், பர்மா (தற்போதைய மியான்மர்) கடற்கரை வரையும் பரவியிருந்தது. அந்தமான் நிகோபார், லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் உள்ளிட்டவையும், ஸ்ரீவிஜய ராஜ்யங்களான ஜாவா, சுமத்ரா, மலேயா தீபகர்ப்பம், தூரக் கிழக்கு ஆசிய நாடுகள் (தாய்லாந்து, கம்போடியா) உள்ளிட்டவையும் இவரது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. வங்கதேச (தற்போதைய பிகார்) அரசர் மகிபாலனை வென்று, அங்கும் தனது ஆட்சியை நிலைநாட்டினார் ராஜேந்திர சோழன். 1012 முதல் 1044 வரை அரசாட்சியை நிர்வகித்து வந்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் கீழை ஆசிய கண்டத்தில் புகழ்வாய்ந்த சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது சோழ சாம்ராஜ்யம். திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிக்கொடியை நாட்டியவர் ராஜேந்திர சோழன். 1019 இல் தனது கங்கை வெற்றியை கொண்டாடும் நினைவாக, 1023 இல் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் என்று புதிய தலைநகரை உருவாக்கி, தன்னுடைய ஆட்சியை அங்கிருந்தவாறு நிர்வகித்தார். அங்கு தனது தந்தை தஞ்சாவூரில் கட்டியது போன்று, அதைவிட பெரியதாகவே பெருவுடையார் கோயிலையும் கட்டினார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் அமைப்பில் இந்தக் கோயில் கட்டப்பட்டிருந்தாலும் இது பல வகையிலும் மாறுபட்டது. தஞ்சை கோயில் விமானம் நான்கு பக்கங்களைக் கொண்டது. இந்தக் கோயிலோ எட்டு பக்கங்களோடு, நளினத்தோடு அமைக்கப்பட்ட விமானம் கொண்டது. கிழக்கு நுழைவு வாயில் பெரிய நந்தி பகவான். பிரம்மாண்டமான மூலமூர்த்திகள், ஒரே கல்லில் தாமரைப் பூ வடிவில் வானசாஸ்திர முறைப்படி வெகு அழகாக செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்.

அறுபது அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிமைக்கப்பட்ட லிங்கம். தஞ்சை பெரிய கோயில் லிங்கம் அமைந்தது போன்றே இங்கும் கோபுரம் எழுப்பப்பட்டதாக வரலாறு. இது தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சிவலிங்கம். லிங்கத்தின் அடியில் சந்திரக் காந்தக்கல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும்,குளிர்காலத்தில் வெப்பத்தையும் தருகிறது.

இங்குள்ள பெரிய அளவிலான நந்தி சுண்ணாம்புக் கல்லில் வடிக்கப்பட்டு, தரையில் அமர்ந்துள்ளது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சியாகும். 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சையைப் போல் இங்கும் விழுவதில்லை.

இந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்கு, கங்கையிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு, கோபுரக் கலசத்துக்கு ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோயிலுக்கு உள்ளேயே கிணறு வெட்டச் செய்து, அந்த புனித நீர் அங்கு வந்து சேரும்படி நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் சிங்கமுக வடிவம் அமைத்து தரிசனம் செய்ய வரும் பொழுதெல்லாம் அதன் வாய் வழியாக உள்ளேச் சென்று இந்த புனித நீரை எடுத்து தலையில் தெளிக்கும் வகையில் உள்ளது.

இங்குள்ள அம்மன் பெரியநாயகி, பெயருக்கு ஏற்றார் போல் பெரிய உருவத்தில் அம்மன் சிலை. வலது பக்கத்தில் 20 கைகள் ஆயுதங்கள் தாங்கி, புன்சிரிப்புடனும் காணப்படும் துர்க்கை அம்மன் சிலை. கோயிலின் ஒரு மீட்டர் தொலைவில் எழுத்தாணியுடன் விநாயகர் சிலை,தென்கிழக்கு மூலையில் முப்பரிமாண நடராஜர் சிலை இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர்கால கட்டட கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

சாளுக்கியர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்று சாளுக்கிய தலைநகரை கைப்பற்றியது தான் ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதிராஜனின் முதல் பெரிய யுத்தமாகும். வெற்றியின் நினைவாக தனது தந்தைக்கு இரண்டு துவார பாலகர் சிலைகளை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஒன்று இந்தக் கோயிலின் வாயிலிலும் மற்றொன்று திருப்புவனம் சரபேஸ்வரர் கோயிலும் வைக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழன் இறுதி நாள்கள் மகத்தானவை. அப்போது சோழ நாடு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பரந்து விரிந்து கிடந்தது. சக்கரவர்த்திக்கு அவனுடைய மகன்கள் உற்ற துணையாக இருந்து நாட்டையும், எல்லைகளையும் காத்து வந்தனர்.

இரக்கம், இறையுணர்வு, பிறர்க்கு உதவுதல், மக்களின் நலன் பேணுதல் என்று பொற்காலமாக இருந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட ராஜேந்திர சோழனின் பெருமைமிக்க குணமாக விளங்கியது அவர் வென்ற நாடுகளைத் தோற்ற அரசர்களிடமே பின்னர் ஒப்படைத்ததுதான்.

இவரது அரசியர்கள் திருபுவன மாதேவியார், முக்கோகிலம், பங்கவன் மாதேவியார், வீரமாதேவி ஆகியோர். பிள்ளைகள் முதலாம் ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், பெண்கள் அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவியார்.

பஞ்சபூதத் தலங்களில் வாயுவின் தலமான காளஹஸ்தி கோயில், 12 ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

கங்கை கொண்ட சோழபுரம் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து பராமரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com