கண்டது
(தீவட்டிப்பட்டி- ஓமலூர் சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'குதிரைகுத்திப்பள்ளம்'
-பொறிஞர் ப.நரசிம்மன், தருமபுரி.
(புதுச்சேரியில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'தேடுவார்நத்தம்'
-பி.ஆஷாலட்சுமி, செம்பனார்கோவில்.
(தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் உள்ள ஒரு சித்த மருத்துவக் கடையின் பெயர்)
'எங்க ஊரு அப்பத்தா கடை'
-இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.
கேட்டது
(திருநாகேஸ்வரம் கடைத் தெருவில் இருவர்...)'
கோயிலுக்கு எப்படிங்க போகணும்...?'பக்தியோட போகலாம்.. பக்தி இல்லாமலும் போகலாம்.. நீங்க எப்படி போறீங்க?'
-எல்.இரவி, செ.புதூர்.
(மதுரையில் நகரப் பேருந்தில் எழுதப்பட்டிருந்த திருக்குறளைக் காட்டி, தந்தையும் மகனும்...)
'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு.. நான் முன்னேற அப்பாவா நீங்க என்ன செஞ்சீங்க?'என்னடா இப்படி சொல்லிட்டே.. உனக்கு 'அகிலன்' என்று பெயர் வைச்சிருக்கேன். ஸ்கூல், காலேஜ் எந்த வகுப்பானாலும் உன்னைதானே முதலில் கூப்பிடுறாங்க?'
-பெ.நா.மாறன், மதுரை.
(திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இரு நண்பர்கள் பேசியது)
'இன்னிக்கு பயங்கரத் தாக்குதல் இருக்கு...?'ஈரானா, இஸ்ரேலா..?'இல்லடா.. வீட்டில் கடுகு டப்பாவில் இருந்து ஐம்பது ரூபாய் எடுத்திட்டேன்...'
-சாத்தை மயில், திருநெல்வேலி.
யோசிக்கிறாங்கப்பா!
கடவுளாலே பிரிக்க முடியாத உறவையும்கூட கடன் பிரித்துவிடும்.
-சு.உமா, ஆதிச்சபுரம்- 614 717.
மைக்ரோ கதை
ஒரு குழந்தை தனது தந்தையிடம், 'அப்பா பிரார்த்தனை பண்ணா எல்லாம் கிடைக்குமா?' என்று கேட்டது. 'ஓ..
கிடைக்குமே' என்றார் தந்தை.'நீ வெச்சிருக்கியே பேனா.. அது கூட கிடைக்குமா?'நிச்சயமா கிடைக்கும்...'அப்படின்னா.. நீ வச்சிருக்க இந்த பேனாவை என்னிடம் கொடுத்துவிட்டு, நீ பிரார்த்தனை பண்ணி வேற பேனா வாங்கிக்கோ?' என்று குழந்தை சொல்ல, தந்தையோ பேனாவை அளித்துவிட்டார்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
எஸ்.எம்.எஸ்.
சிரிப்பைத் தூரத்தில் வைத்திருப்பவர்கள் மருத்துமனைக்கு நெருக்கமாய் இருப்பார்கள்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு- 600120.
அப்படீங்களா!
இணையவழி கடிதப் பரிமாற்றம் செய்யப்படும் ஜி.மெயிலில், தேவையற்ற மெயில்கள் நிரம்பி வழிவது அனைவரும் சந்திக்கும் பெரும் பிரச்னை. இ-மெயில் கணக்கு நிரம்பி மெயில்கள் வருவதே நின்றுபோகும் நிலையும் ஏற்படுகிறது.
இதை சரி செய்ய இ-மெயில்களை அழித்து சேமிப்புக்கு இடத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லது கட்டணத்தைச் செலுத்தி சேமிப்பு இடத்தை பெற வேண்டும். இதற்கு தீர்வு காண ஜி.மெயிலில் 'மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன்ஸ்' என்ற புதிய சேவை அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் நமக்கு வரும் விளம்பரம் இமெயில்களை ஒட்டுமொத்தமாக கண்டுபிடித்து நிறுத்திவிடலாம்.
எந்தெந்த விளம்பர நிறுவனத்திடம் இருந்து எத்தனை இமெயில்கள் வருகின்றன என்பதை இந்தப் புதிய சேவை மூலம் அறிந்துகொண்டு, அதை தேர்வு செய்து நிறுத்தி விடலாம்.
இதற்காக ஜிமெயிலில் உள்ள இடதுபுற மெனுவுக்கு சென்று, 'மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன்' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் உங்களுக்கு தொடர்ச்சியாக வரும் விளம்பர இமெயில்களின் விவரம் நிறுவனம் வாரியாக தெரியும். தேவையில்லாத நிறுவனத்தைத் தேர்வு செய்து 'அன்சப்ஸ்கிரைப்' என்பதை கிளிக் செய்து விட்டால் போதும். அந்த நிறுவனத்துக்கு இதுதொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தானாக அனுப்பப்படும். அந்த நிறுவனத்தின் இமெயில் வருவதும் நிறுத்தப்படும்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.