
குமாரி ருக்மணி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
ஒரே வீட்டில் நான்கு தலைமுறை நடிகைகள் இருக்க முடியுமா? முடியும் என்பதற்கு ஒரே உதாரணம் குமாரி ருக்மணி. இவரது தாயார் ஜானகியும் மகள் 'ஊர்வசி' லட்சுமியும், பேத்தி ஐஸ்வர்யாவும் நடிப்புலகைச் சேர்ந்தவர்களே.
ருக்மணியின் கணவர் ஒய்.வி. ராவ் பிரபல வசன கர்த்தா, இயக்குநர் மற்றும் நடிகர். அவர் சாதாரணப்பட்டவரா?1937-இல் தியாகராஜ பாகவதர் நடித்து, அவருக்கு இரண்டாவது 52 வாரங்கள் ஓடிய படத்தைத் தந்தவர். 'சிந்தாமணி' அல்லது 'பில்வமங்களன்' என்ற இந்தப் படம் தாசியே கதியென்று கிடந்தவனின் கதை.
இதில் மனோகரனாக நடித்த ஒய்.வி. ராவ் தாசியின் தாயால் விரட்டப்பட்டு வேர்கடலை உடைத்துத் தின்று கொண்டே பேசும் காட்சியும், பில்வ மங்களன் கேட்கும் கேள்விகளுக்கு வேடிக்கையாகப் பேசும் காட்சியும் ரசிகர்களால் வரவேற்றுப் பாராட்டப்பட்டு ஒய்.வி. ராவ் என்ற பேரை மனோகரன் என்றே மாற்றி அழைக்கும் அளவுக்குப் பிரபலமானது.
அவர் மனைவியான ருக்மணி அம்மா தஞ்சை மாவட்டம் மெலட்டூரை பூர்விகமாகக் கொண்டவர். மும்பையில் 'அரிச்சந்திரா' படப்பிடிப்பு நடந்தது. அதை இயக்கியவர் தமிழ்நாட்டின் முதல் பெண் இயக்குநர் டி.பி. ராஜலெட்சுமி. அவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில் இருந்த ருக்மணியைச் சிறுவன் லோகிதாசனாக நடிக்க வைத்தார்.
1929 செப்டம்பரில் பிறந்த ருக்மணி அம்மா சரஸ்வதி சினிடோன் என்ற பேரில் ஏவி.எம். செட்டியார் இயக்கித் தயாரித்த 'ஸ்ரீ வள்ளி' படத்தில் நாயகியாக டி.ஆர். மகாலிங்கத்துடன் சொந்தக் குரலில் பாடி நடித்தார். 1961-இல் வெளியான 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் சிவாஜிக்கு மனைவியாக நடித்து வ.உ.சி.யின் மரணத்தில் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என குரல் தழுதழுக்கப் பாடிய காட்சியில் பார்த்தவர் அனைவரையும் கண் கலங்க வைத்தார்.
இவ்வளவு பெருமை பெற்ற இவரை நான் முதல் படத் தயாரிப்பு, இயக்கத்தில் 1978 பிப்ரவரியில் வெளியான 'அச்சாணி' படத்தில் கதாநாயகியாக நடித்து இன்றைக்கும் என் நட்பில் தினமும் தொடர்புடன் இருக்கும் லட்சுமி நடித்தார். என் படம் வெளியீட்டுக்கு முதல் நாள் இரவு 11 மணிக்கு இவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை ட்ராப்டாக எடுத்துக் கொண்டு ஆழ்வார்ப் பேட்டையில் இருந்த சீதம்மா காலனிக்குப் போனேன்.
வீட்டின் காலிங் பெல்லை அடித்தேன். அல்சேஷன் நாய் குரைத்த நிலையில் மாடியிலிருந்து எட்டிப் பார்த்த ருக்மணி அம்மா 'நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிட்டு வெற்றிகரமா பகல்ல வாங்க. உங்க பணத்தை அப்போ கொண்டு வாங்க. லட்சுமி பெங்களூர் ஷூட்டிங் போயிட்டா' என்று கூறினார்கள். நான் அவர்கள் சொன்னபடியே இரண்டு நாள்களில் சென்று செட்டில்மென்ட் ட்ராப்டைக் கொடுத்த போது அதைக் கும்பிட்டு வாங்கிக் கொண்டு என் படம் 'அச்சாணி'க்கு வாழ்த்து சொன்னார்கள்.
அதன் பின் சில காலத்திற்கு பிறகு கோடை நாடக விழாவில் முதல் பரிசு பெற்ற 'மாதச் சம்பளம்' என்ற நாடகத்தை சீரியலாக்க ஒரு தயாரிப்பாளருடன் முடிவு செய்தேன். அந்த சீரியலுக்கு அப்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஐஸ்வர்யா போக் ரோட்டில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே போனேன். அங்கே நான் எதிர்பாராமல் ருக்மணி அம்மாவைச் சந்தித்தேன்.
அன்புடன் என்னை வரவேற்று என் குடும்பத்தைப் பற்றியெல்லாம் விசாரித்தார்கள். நான் அங்கே வந்த விவரத்தை சொன்னதும் ஐஸ்வர்யாவைக் கூப்பிட்டார்கள். ஐஸ்வர்யாவுக்கு நான் 25,000 அட்வான்ஸ் கொடுத்தேன். அதை நின்றபடியே வாங்கிய ஐஸ்வர்யாவைக் கோபித்தார்கள.
'அட்வான்ஸ் இப்படித்தான் வாங்குவியா. அவர் உன் அம்மாவிடமே நாலஞ்சு படம் பண்ணுனவரு. கும்பிட்டு வாங்கிக்க...' என்று சொன்னதும் ஐஸ்வர்யா 'சாரி அங்கிள்' என்று சொல்லி விட்டு அட்வான்ஸை வாங்கி கொண்டார். 'அட்வான்ஸ் வாங்கிட்டா போதுமா கதை என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா' என்று என்னைக் கதை சொல்ல சொல்லிக் கூடவே இருந்து கேட்டார்கள்.
'இரண்டு நாள்களில் தொடக்கம்' என்று கூறினேன். நான் புறப்படும் போது 'உங்கள் தொடக்க விழாவில் என் பேத்திக்கு சாப்பாடு கொடுத்து விடுகிறேன். உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்கள். சமையல் செய்து கொடுத்து விடுகிறேன்' என்று சொன்னார்கள்.
நான் 'வேண்டாம்' என்று சொல்லியும் எனக்குப் பிடித்ததைக் கட்டாயமாக கேட்டு முதல் நாள் படப்பிடிப்புக்கு மதிய உணவு கொடுத்தனுப்பினார்கள். அந்த அன்பின் அடையாளம் இன்றும் என் நெஞ்சில் இருக்கிறது. பெற்றால்தான் பிள்ளையா என்பது பழமொழி. இவர்கள் பழகியதை நினைத்தால் கூடப் பிறந்தால்தான் சகோதரியா என்று நினைக்க வைத்தது. இவர் தனது 78-ஆம் வயதில் 2007-இல் காலமானார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.