சிலிக்கான் சிலைப் புரட்சி!
அருள்செல்வன்
உலக அளவில் சிறந்த ஓவியரான ஏ.பி.ஸ்ரீதரின் கோட்டுப் படங்களும் வண்ணப் படங்களும் முப்பரிமானப் பேசும் படங்களும் மிகவும் புகழ் பெற்றவை.
அவர் தற்போது சிலைகளை அமைத்து, நூற்றுக்கு மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளார். சிங்கப்பூர் நாடாளுமன்ற அவையில் இவரது ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது. இவருக்கு பிரான்ஸ் அதிபர் கைப்பட கடிதம் எழுதியுள்ளதோடு, முக்கியப் பிரமுகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
அவருடன் ஒர் சந்திப்பு:
ஓவியராக இருந்து சிற்பியாக மாறியது எப்படி?
ஓவியத்தில் பல்வேறு பரிமாணங்களை வெளிக்காட்டியவுடன் அடுத்து என்ன என்று யோசித்தபோது, சிலைகள் அமைக்கும் எண்ணம் வந்தது. சிற்பம் செதுக்குவது என்பது சாதாரணமில்லை. நான் 39 ஆண்டுகளாக வரைந்துகொண்டிருக்கிறேன். ஆனால் சிற்பியாக 50 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
ஓவியங்களை நானே வரைந்து விடுவேன். மிகப் பிரமாண்ட ஓவியங்கள் என்றால் உதவிக்கு ஆள்களை வைத்துகொள்வேன். இந்தச் சிலைகளை தனிநபரால் செய்ய முடியாது. உடை அலங்காரம், முடி அலங்காரம், வண்ணக் கலவை... என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த 14 நிபுணர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அதற்கான முன் தயாரிப்பு நிறைய நேரம் விழுங்கும் வேலையாகும்.இதை 13 ஆண்டுகளாகச் செய்கிறோம்.
சாதாரணமாக ஒரு சிலை உருவாக்க எவ்வளவு நேரமாகும்?
ஒரு சிலையை உருவாக்க மூன்று முதல் நான்கு மாதங்களாகும். சில நேரம் ஆறு மாதங்களும் ஆகும். முதலில் க்ளேயில் செய்வோம்.அது சரியாக வந்தவுடன் சிலிக்கான் சிலை செய்வோம். அப்போது எவ்வளவோ செய்தபோதும் எதிர்பார்த்தபடி தோற்றம் வரவில்லை என்றால் சரி செய்வது சிரமம்.
அதைத் திருத்தி சரி செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும் . எனவே பார்த்துப் பார்த்து மிக நுணுக்கமாக இதைச் செய்ய வேண்டி இருக்கும். சற்று சிறிய மாற்றம் வந்தால் கூட அதன் உண்மைத் தன்மை மாறிவிடும். பார்ப்பவர்களைக் கவராது. எனவே மிக நுட்பமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய வேலை இது.
என்ன மூலப்பொருள்களைப் பயன்படுத்துகிறீர்கள்?
இரும்பு ,சிலிக்கான் போன்றவை மிகுதியாகப் பயன்படுத்தப்படும். இதர பொருள்களும் உள்ளன.
நீங்கள் மெழுகுச் சிலைகள் செய்வதில்லையா?
மெழுகுச் சிலைகளை கேரள மாநிலத்திலும், ஹைதராபாத், புணே போன்ற இடங்களிலும் செய்கின்றனர். நான் மெழுகு சிலைகளைச் செய்வதில்லை. ஏனென்றால் அதற்கு அபாயங்கள் அதிகம்.
மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும். ஏதாவது வெப்பத்தினால், தீயினால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. விரைவில் சேதமடைய வாய்ப்புண்டு.பராமரிப்பது சிரமம். எனவே அதை நான் செய்வதில்லை.
சிலைகளை உருவாக்குவதற்கு அதற்குரிய நபர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
புகழ்பெற்ற பிரமுகர்களைத் தேர்ந்தெடுத்தே இந்தச் சிலைகளை வடிக்கிறோம். உயிருடன் இல்லாதவர்கள் ஆனாலும் அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கத்தில் இந்தச் சிலைகளைச் செய்கிறோம்.அவர்களை மீண்டும் பார்ப்பவர்கள் கண் முன் உயிர்ப்புடன் நிறுத்தும் பணி தான் இது.
சிலைகளின் அளவு, கோணம், தோற்றம் போன்றவற்றை எப்படி எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்?
சிலைகளின் அளவு ஒரிஜினலாக, அசலாக வாழ்ந்து மறைந்த ஆளுமை கொண்ட நபர்களின் அளவாகத்தான் இருக்கும். சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்காது .அவர்கள் மக்களிடம் புகழ் பெற்ற தோற்றம், கோணம் போன்றவற்றைப் பல்வேறு புகைப்படங்கள், காணொளிகளில் பார்த்து, அதில் சிறப்பானதாக இருக்கும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இப்படிச் செய்கிறோம்.
நீங்கள் செய்திருக்கும் நூற்றுக்கணக்கான சிலைகளில் எதை செய்வதற்காக மிகவும் சிரமப்பட்டீர்கள்?
ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரசா இரண்டையும் செய்யும்போது, மிகவும் சவாலாகவும் இருந்தது. அவர்களின் தோற்றம், அந்த முகச்சுருக்கம் அசல் போல மிகச் சரியாக வர வேண்டும் என்பதற்காகச் சிரமப்பட்டோம்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் உங்கள் பணி பற்றி?
அது இந்திய பாதுகாப்புத் துறையால் முன்னெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டது.
அது ஓராண்டு காலம் கொண்ட திட்டம். என் தலைமையில் நூறு பேர் பணியாற்றினார்கள். இரண்டு சிலைகள், 100 ஓவியங்கள் அமைக்கப்பட்டன. அது எனக்கு மன நிறைவளித்த பணி என்று சொல்வேன்.
உழைப்புக்கேற்ற பலன், எதிர் விளைவு சரியானபடி கிடைக்கிறதா?
உலக நாடுகளில் பல இடங்களில் கண்காட்சிகளை நடத்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் கலைகளை ஆதரிக்கவும், ஆராதிக்கவும் கொண்டாடவும் அமைப்புகள் இருக்கின்றன. மக்களும் அப்படி ஊக்கம் தருகிறார்கள்.
ஆனால் நம் நாட்டில்தான் அது கிடைப்பதில்லை. இந்தியாவில் கலைஞர்கள் பிறக்கக் கூடாது. நல்ல கலைஞர்களுக்கு இங்கே என்ன வேலை என்று சில நேரம் தோன்றும். அந்த அளவுக்கு இங்கே புறக்கணிப்பும் நிராகரிப்பும் உள்ளன.
ஓவியர்களுக்கும் கலைஞர்களுக்கும் இங்கே என்ன மரியாதை இருக்கிறது?
ஒவ்வொரு நாடும் கலைகளை வளர்க்க எவ்வளவோ செய்கின்றன. எனவே கலைஞர்கள் அரிய சாதனைகளைச் செய்கிறார்கள். கலைகளைப் பாதுகாக்கிறார்கள். அடுத்த கட்டத்துக்கும் கொண்டு செல்கிறார்கள். அதனால்தான் யுத்தம், வறுமை அனைத்தையும் கடந்தும் அந்த நாடுகள் முன்னேறுகின்றன.
ஆஸ்திரேலியாவில் மட்டும் 800 ஆர்ட் கேலரிகள் இருக்கின்றன. கோடிக்கணக்கானோர் வந்து பார்க்கிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுககளிலும் அப்படித்தான்.
இந்தியாவில் ஓவியர் என்று ரவிவர்மாவை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம் போன்றவற்றைப் பற்றிச் சொல்கிறோம். அதற்குப் பிறகு சொல்வதற்கு எதுவுமே இல்லை.
நம் நாட்டில் கல் இல்லையா? மனிதர்கள் இல்லையா? திறமைசாலிகள் இல்லையா? ஏன் இன்னும் ஒன்று அதைப்போல உருவாக்கவில்லை? நூறு சிற்பிகளை வைத்து ஒரு பெரிய கலைநகரத்தையே உண்டாக்குவதற்கான திறமைசாலிகள் இருக்கிறார்கள். மூலப் பொருள்கள் இருக்கின்றன. ஆனால் செய்திருக்கிறோமா?
புதிய கலைவடிவங்களை உண்டாக்கி, மக்களை ஈர்க்கிறார்கள். பெரிய படைப்புகளை உண்டாக்கி, அதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.கலைஞர்கள் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். இந்தியாவில் அது இல்லை என்பது பெரிய வருத்தத்திற்குரியது.
உங்கள் திரையுலக ஈடுபாடு எப்படி இருக்கிறது?
நான் இயக்குநர் பாரதிராஜாவின் 'தெக்கத்தி பொண்ணு' தொடரில் வில்லனாக நடித்தேன். 'ஆந்திரா மெஸ்', 'ஜடா' போன்ற படங்களில் தோன்றினேன். இது எல்லாமே நட்பு முறையில் அமைந்த வாய்ப்புகள்.
புதிய இளைஞர்களை வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் 'மய்யம்' என்ற படத்தை தயாரித்தேன். அதில் இழப்பு என்றாலும் புதியவர்களை ஊக்கப்படுத்திய ஒரு திருப்தி ஏற்பட்டது. இன்று திரைத்துறையின் பார்வையும் போக்கும் மாறியுள்ளது. எனக்கு அதில் ஈடுபட நேரமில்லை.
உங்களுக்கான அங்கீகாரங்கள் என்று எதைக் கூறுவீர்கள்?
பெரிய வி.ஐ.பி.க்கள் எல்லாம் என்னைப் பாராட்டி இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் என்னை ஆரம்பத்தில் இருந்தே ஊக்கப்படுத்தி வந்தார். அவரால் ஆயிரம் பேராவது ஊக்கம் பெற்று வளர்ந்திருப்பார்கள். பி.சி. ஸ்ரீராமின் ஊக்கம் சாதாரணமானதல்ல. இவர்களது நட்பின் மூலம் நான் பெற்றவை ஏராளம்.
பெரிய விருதுகளைவிட பார்த்து ரசிக்கும் ஒரு பார்வையாளன் பாராட்டி பேசும் கருத்து முக்கியம். அப்படி நான் செய்த ஜவாஹர்லால் நேரு சிலையை தத்ரூபமாக இருக்கிறது என்று பாராட்டும்போது அதை நான் பெரிய விருதாகக் கருதுகிறேன்.
வி.ஐ.பி.க்கள் படம் வரைந்ததில் மறக்க முடியாதது?
நடிகர் கமல்ஹாசனின் திரையுலகப் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அவருக்கு 50 முகங்கள் ஒரே பிரேமில் வருவது போல் ஓவியம் வரைந்து கொடுத்தேன். அதில் நடுவில் அவ்வை சண்முகி தோற்றத்தில் அந்த ஆசிரியை இருப்பார். சுற்றிலும் நிற்கும் மாணவர்களாகவும் அவரே இருப்பார்.
அதன் பொருள் கமல்சார் எப்போதும் ஆசிரியராகவும் மாணவனாகவும் இருந்து, கற்றும் கொடுப்பார். கற்றுக் கொண்டும் இருப்பார். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது .அதுபோல் ஏ. ஆர் .ரஹ்மானின் திரையுலக வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு அவருக்கு ஓவியம் வரைந்து கொடுத்தேன். இப்படி நிறைய உண்டு.
உங்களது லட்சியம் என்ன?
நான் எப்போதும் பெரிதாகவே சிந்திப்பவன். பெரிதாக சாதிக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். எவ்வளவு வாய்ப்புகளும் ஊக்கமும் இங்கே மறுக்கப்பட்ட போதிலும் என் கனவு பெரிதாகிக் கொண்டே இருக்கும். பெரிய அளவிலான ஒரு திட்டம் செய்ய வேண்டும்.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை உலகமே பார்த்துப் பிரமிப்பது போல பிரம்மாண்டமான என் படைப்பைப் பார்த்து உலகம் பிரமிக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாகச் செய்வேன். கிடைக்காவிட்டால் உருவாக்கி அதை நிறைவேற்றுவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.