உரப்புளி நா.ஜெயராமன்
செல்போன் நிறுவனத்தின் கள அலுவலர் பரசுராமின் கார், புழுதியைக் கிளப்பியபடி அந்தக் கிராமத்துக்குள் நுழைந்தது. சுட்டெரிக்கும் வெயில். அந்த வெயிலைப் பொருள்படுத்தாமல் கிராமத்தில் மக்கள் ஆங்காங்கு நின்று பேசுவதைப் பார்த்தால், ஏதோ பிரச்னை போல் தெரிகிறது. தூரத்தில் இருந்த ஆலமரத்தருகே பெரும்கூட்டமாய் மக்கள் நிற்பதையும் பார்த்தார் டிரைவர்.'சார், காரை நிறுத்தி என்னன்னு விசாரிக்கட்டுமா?'வேண்டாம். சைட்டுக்கே போயிருவோம்' என்றார் பரசுராம்.
வேல்சாமியின் வீட்டு காம்பவுண்டு அருகே கார் நின்றதும், பரசுராம் இறங்கி, 'வீட்டுக் காவல்காரன் கருப்பையா தெரிகிறானா?' என்று அங்குமிங்கும் பார்த்தார். அவன் கண்ணுக்குத் தென்படவே இல்லை.
அங்கு கிடந்த ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து வேப்பமர நிழலில் போட்ட டிரைவர், 'உக்காருங்க சார், வேல்சாமி அய்யா வீட்ல இல்லை போல.. ஊரிலே கலவரம் மாதிரித் தெரியுது. ஆலமரத்துக்குக் கீழே கூட்டமா நின்னதைப் பார்த்தேன். ஏதாவது பஞ்சாயத்தா இருக்கும். அய்யா முக்கியமானவருல்ல. போயிருப்பார். வெயிட் பண்ணிப் பார்ப்போம்' என்றார்.
கிராமத்தின் முக்கிய புள்ளியான வேல்சாமி, தன் வீட்டுக்கு எதிரே இருந்த காலி இடத்தை, செல்கோபுரம் அமைக்க தனியார் செல்போன் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த நிறுவனத்தின் களப் பணியாளர்தான் பரசுராம்.
இந்தக் கிராமம் ஒரு சிறுநகரம் போல் வளர்ந்து வருவதாலும் அந்தப் பகுதியில் தங்களது நிறுவனத்தின் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை என்ற வாடிக்கையாளர்களின் புகார்களை நிவர்த்தி செய்யவும், செல்கோபுரத்தை அந்தக் கிராமத்தில் அமைக்க நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்றிருந்தார்.
செல்கோபுர வேலைகள் மளமளவென ஆரம்பித்தன. கோபுரம் அமைத்தவர்கள், அதற்குப் பக்கத்தில் பத்தடிக்குப் பத்தடி நீள, அகலத்தில், பதினைந்து அடி உயரத்தில் செல்போன் கருவிகள் வைக்க ஒரு அறை வேண்டும் என்றனர். அதையும் கட்டிக்கொடுத்திருந்தார் வேல்சாமி.
கோபுரத்தின் அருகேயுள்ள அந்த அறையின் சுவரில், தரையிலிருந்து 12 அடி உயரத்தில் இரண்டடிக்கு இரண்டு அடி சதுர அளவில் சன்னல் இல்லாத வெளி, வேல்சாமி அமைத்துத் தர, கோபுரத்தையும் அந்த வெளியையும் ஒரு ரன்வே கொண்டு இணைத்திருந்தனர்.
வேப்பமரத்துக் காற்று 'சிலுசிலு'வென வீசியது. செல்கோபுரத்தை அண்ணாந்துப் பார்த்தார் பரசுராம். கோபுரத்திலிருந்து அறைக்குச் செல்லும் ரன்வேயில் ஜோடி ஜோடியாக அணில்கள் விளையாடிக்கொண்டிருந்தன. மரத்திலிருந்து கோபுரத்துக்கு அவைகள் லாகவமாகத் தாவின. அப்போது ரன்வேயின் கடைசி வரை சென்றவை ரூமுக்குள் எட்டிப் பார்த்தன.
'உள்ளே விழுந்தா ஏற முடியாதே. பெயின்ட் அடித்த சுவராச்சே. சுவரும் பன்னிரண்டடி உயரம் இருக்குமே. ஒரு கதவுதானே. சன்னல் எதுவும் இருக்காதே. ஏ.சி. வைப்பதற்காக கட்டுன ரூமாச்சே' என்று மனதுக்குள் கலங்கினார் பரசுராம். நல்ல வேளையாக அவை எட்டிப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தன.
வேல்சாமி அந்த மரத்தடியில் தினமும் கொஞ்சநேரமாவது வந்து அமர்ந்துவிடுவார். அந்த வேப்ப மரக்காற்றை சுவாசிப்பதில் அவருக்கு அலாதி இன்பம். அவரது தம்பி துரைசிங்கத்தின் மகள் வள்ளி, கோயம்புத்தூரில் 'கம்யூனிகேஷன் என்ஜினீயரிங்' படிக்கிறாள். விடுமுறையில் வரும்போதெல்லாம் பெரியப்பாவுக்கு அடுத்து சேர் போட்டு அமர்ந்து அவளும் அந்த வேப்பமரக்காற்றின் சுகத்தை அனுபவிப்பாள்.
ஒன்றையொன்று துரத்தி விளையாடும் அணில்களை வேடிக்கை பார்ப்பாள். 'ஆனந்தமாக, சுதந்திரமாக விளையாடும் இவைகளுக்கு, சாதி இல்லை, கெளரவப்பிரச்சனை இல்லை' என்று எண்ணிக் கொள்வாள். 'ஏன் ஜோடி சேர்ந்தாய் எனக் கேட்டு யாரும் இவைகளை ஆணவக் கொலை செய்வதில்லை' என்றும் சிந்திப்பாள்.
'யார் இவை சேர்வதற்குத் தடை போட முடியும்?' என்று தனக்குள் கேட்டு கொள்வாள். அவள் கண்முன் விஜயன் தோன்றுவான். அவள் ஊரைச் சேர்ந்தவன். அவன் தந்தை மாயழகு. வேல்சாமியின் நிலங்களில் வேலை பார்க்கும் விவசாயி. விஜயன் அவள் படிக்கும் காலேஜில் மெக்கானிகல் என்ஜினீயரிங் படிப்பவன். வயலில் பயிர் வளர்வது போல அவர்களுக்கிடையே காதல் வளர்ந்து வருகிறது.
பிள்ளையில்லாத வேல்சாமி, வள்ளியைத் தன் மகள்போல் பாவித்து வளர்க்கிறார். வள்ளியும் பெரியப்பாவை அப்பா எனப் பிரியம் கொண்டாடினாலும் அவள் மூளையின் சின்ன ஓரத்தில் அவர் ஒரு சாதி வெறியர் என்ற நினைவு படிந்திருந்தது. தன் சாதியைச் சேர்ந்த பெண் வேறு சாதி ஆணோடு ஓடிப்போக, இருவரையும் யாருக்கும் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து அன்னம், தண்ணீர் கொடுக்காமல் கொன்றதும் அவளுக்குத் தெரியும்.
வேல்சாமி தன் தங்கையை, வேறு சாதி ஆணை விரும்பியதற்காக வெட்டிப் போட்டார் என்ற செய்தியும் அவளுக்குத் தெரிந்திருக்கிறது. அவள் அம்மா மாரியம்மாதான் மகள் எச்சரிக்கையுடன் வாழ்வதற்காக இந்த வரலாற்றை சொல்லி வைத்திருந்தாள்.
'உன்னை வேறு ஊரிலே சேர்த்து படிக்க வைக்க எனக்கும் விருப்பமில்லை. உன் அப்பாவுக்கும் விருப்பமில்லை. உன்னை மகள் மாதிரி வளர்க்கிற உன் பெரியப்பாதான் ஆசைப்பட்டார். மற்ற பசங்களைப் போல, தன் மகளும் படிக்கட்டும் என்று படிக்க வைத்தார். அவருக்கு நீ நல்ல பெயர் எடுத்துகொடுக்கணும்' என்பாள்.
மாரியம்மா சொன்ன வேல்சாமியின் வரலாறுகளையும் புத்திமதிகளையும் துளைத்து முளை விட்டுக் கொண்டிருக்கிறது வள்ளி- விஜயன் மீது கொண்டுள்ள காதல். அவள் பார்க்கும் எல்லாப் பொருள்களிலும் விஜயனே தெரிந்தான். விஜயனுக்கோ அவன் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தாள் வள்ளி.
'சார், கருப்பையா வர்றான்' என்று பரசுராமின் கவனத்தைத் திருப்பினார் டிரைவர்.
வந்தவன், 'சார் வந்து ரொம்ப நேரம் ஆச்சோ?' என்று பரசுராம் அருகே வந்து நின்றான்.'என்ன கருப்பையா, உங்க ஊரிலே ஏதும் பிரச்னையா? ஊரே கூடி நிக்கிது..'என் வாயாலே எப்படிச் சொல்றது சார்? ஐயாவோட தம்பி பொண்ணு, உங்களுக்குக்கூடத் தெரியும்..'பி.இ. படிக்கிறாளே அந்தப் பொண்ணா? அவர் தம்பி மகளா? அவர் பொண்ணுன்னுல நெனைச்சேன்..'அது எங்க போச்சுன்னு தெரியலை.
நாலு வருஷ படிப்பை முடிச்சுட்டு நாலுநாளைக்கு முன்னால் வந்துச்சு. வந்த மறுநாளே ஓடிப்போயிருச்சு. இன்னையோட மூன்று நாளாச்சு. அதோடு படிப்பு முடிச்சு வந்த அடுதத்ததெரு விஜயன் - இளவட்டம், அவனையும் மூணு நாளா காணமாம்.
ரெண்டு பேரையும் அய்யாதான் எங்கேயோ அடைச்சு வச்சு சாகடிக்கப் போறார்னு பையனுக்கு வேண்டியவங்க சந்தேகப்படுறாங்க? ரெண்டு நாளுக்குள்ளே ரெண்டு பேரையும் அய்யா கொண்டாந்து ஒப்படைக்கணும்னு கெடு விதிச்சிருக்காங்க? கூட்டத்தில் எழுந்த மாயழகு, அய்யாவைப் பார்த்து 'உங்க நிலத்திலே விளைந்து வர்ற எல்லாத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
நீங்க வளக்கிற உங்க பொண், என் மகனை விரும்பினதுக்காக கொடுக்காட்டாலும் பரவாயில்லை, என் மகனைக் கொன்னுராதீக'ன்னு சொன்னபோது, அவனைச் சுற்றி ஆக்ரோஷமாக நின்றவர்கள் 'விஜயனுக்கு ஏதும் ஆச்சுனா நடக்கிறது வேற'ன்னு கூக்குரலிட்டாங்க.
அய்யா வேல்சாமி எந்திரிச்சார். 'உங்க பையனும் படிச்சவன். அவன் எங்க பொண்ணைக் கடத்திட்டுப் போயிருக்கலாம். எங்க பொண்ணை எங்களிட்டே ஒப்படைக்கிறதும் உங்க பொறுப்பு' என்றதும் 'இப்படியும் இருக்குமோ' என நினைத்த கூட்டம் ஏதோ அமைதியாச்சு' என்றான் கருப்பையா.
செல்கோபுரத்துக்காக நிலத்தை ஒப்பந்தம் போடும்போது வேல்சாமியுடன் வள்ளியும் இருந்ததை நினைத்துப் பார்த்தார் பரசுராம்.
'அடடா! அந்தப் பொண்ணு எத்தனை கேள்விகள் கேட்டது - செல் டவரின் உயரம் எவ்வளவு, எத்தனை ஆண்டெனா, பேட்டரி கெபாசிட்டி என்ன, டவர் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்குமா' என்று வேல்சாமியே வியந்து போய், 'ஏம்மா சார்கிட்டே கேள்வி மேல கேள்வியா கேக்கிறியே' என்று சொன்னதும் பரசுராமுக்கு ஞாபகம் வந்தது, தான் எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்தவுடன் 'சாருக்கு இடத்தை வாடகைக்குக் கொடுக்க எனக்கு ஆட்சேபணை இல்லைப்பா' என்று சொன்னபோது வேல்சாமி, வள்ளியின் அறிவைக் கண்டு பூரித்து மகிழ்ந்ததும் அவர் கண்முன் தெரிந்தது.
'அந்தப் பையனையும் உங்களுக்குத் தெரியும் சார்' என்றான் கருப்பையா.'எனக்குத் தெரியுமா? நீ பாட்டுக்கு எதுவும் வெளியே போய் சொல்லிராதே. உங்க ஊருக்காரங்க என்னையப் பிடிச்சு வச்சு விஜயனைப் பத்தி விசாரிக்கப் போறாங்க? 'விளையாடாதீங்க சார். போன தடவை வந்திருந்தப்போ, நம்ம காரு ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ணுச்சா?'ஆமா, ஆமா...? அதை இதைப் பார்த்த நான், என்ன செய்யணுமுன்னு தெரியாம பரிதவிச்சு நின்னுட்டேன்.
வள்ளி உடனே அந்த விஜயனுக்கு போன் பண்ணுச்சு. அந்தப் பையன் வந்தான். ஆள் வாட்டசாட்டமா இருந்தான். அவன் நிமிஷ நேரத்திலே சரி பண்ணிக் கொடுத்தது, டிரையலுக்காக கொஞ்ச தூரம் அந்தப் பையன் ஓட்டியபோது அவனோடு வள்ளியும் ஏறி உட்கார்ந்து வந்தது எல்லாம் நினைவிருக்கு' என்ற பரசுராம், அவர்கள் இருவரும் ஜோக்குக்கு மேல் ஜோக்கடித்து வந்ததையும், சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டதையும் நினைவு கூர்ந்தார்.
'நல்ல ஜோடிதான்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர், 'அந்தப் பையனும் வள்ளி படிக்கிற காலேஜ் குழுமத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கிறதாய் அறிமுகப்படுத்துச்சே. வீட்டிலே சொன்னா வேல்சாமி கட்டி வச்சுறப் போறாரு. அவர் தங்கமானவர் ஆச்சே?' என்றார் பரசுராம்.'சார், நீங்க வேற, எங்க அய்யா சொந்த சாதி அபிமானம் பிடிச்சவர்..'நான் இப்ப ரூமைப் பார்க்கணுமே. பூட்டியிருக்கா, திறந்திருக்கா?'பூட்டியிருக்கு. சாவியை எடுத்துட்டு வர்றேன்' என்று ஓடிப்போய் எடுத்துவந்து திறந்தான் கருப்பையா.
அப்போது தலைவிரி கோலமாக ஓடி வந்தாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்.'யார் கருப்பையா இது?'வள்ளியோட அம்மா சார். அய்யாவோட தம்பி துரைசிங்கம் இருக்கிறார்ல அவரு பொண்டாட்டி. பேரு மாரியம்மா. மக ஓடிப் போனதிலே இருந்து பேய் மாதிரி ஆயிருச்சு.'
பரசுராமின் அருகில் வந்த மாரியம்மா, 'என் பொண்ணை நீங்க பாத்திருப்பீங்க சார். அவ சாகணும் சார். அவளையும் அவளைக் கடத்திட்டுப் போனவனையும் அன்னம் தண்ணியில்லாம போட்டுச் சாகடிக்கணும் சார்.'ஏங்கம்மா, பெத்து வளர்த்த பொண்ணைச் சாகணும்னு சொல்றீங்க?'எங்க சொந்தத்துல மாப்பிள்ளைன்னா என் மச்சான் ஊரு உலகத்தையே கூட்டி அவ கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தியிருப்பாரே. இப்ப நான் சொன்னபடி அன்னம் தண்ணியில்லாம அடைச்சு வச்சிருக்காரு .மூணு நாளாச்சு.'பெத்த மக பசியால் வாடிச் சாகணும்னு சொல்ற தாய் உலகத்திலே நீங்க மட்டும்தான் மா?' என்றவர் அறையை நோட்டமிட்டார்.
சன்னல் வெளியிலிருந்து ரன்வே அறைக்குள் வந்துள்ளதா என்பதைப் பார்க்க வந்தவர் அதை மறந்துவிட்டார். அறையில் பெயின்ட் வாடை அடித்தது. சுவரைத் தொட்டுப்பார்த்தார். வழுவழு என்றிருந்தது. திறந்திருந்த கதவு வழியே வெளிச்சம் உள்ளே பரவியது.
தரையில் அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. சுவரில் சரிந்தவர் அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டார்.'என்ன சார், உக்காந்தீட்டிங்க?' என்றான் கருப்பையா.'சாருக்கு மயக்கம் வருது கருப்பையா...' என்றாள் மாரியம்மா.'நான் நல்லா இருக்கேன். கீழே பாருங்கம்மா, அன்னம் தண்ணியில்லாம மக சாகணும்னு சொல்றீங்களே. இரை இல்லாம செத்த இந்த வாயில்லா ஜீவன்களைப் பாருங்க?
ஆண் அணிலும் பெண் அணிலும் தப்பிக்க முடியாம, பக்கம் பக்கமா ஜோடியா செத்துக்கிடப்பதை - ராமர் போட்ட மூன்று கோடுகளும் வாலும் மட்டும் தெரிவதைப் பார்த்து, தன் துயரங்களை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு பெண்ணுக்குள்ள இரக்க சுபாவத்தோடு 'ஆத்தத்தா' என்று உஸ் கொட்டினாள் மாரியம்மா.'எலும்புக்கூடா போயிருக்கிற இந்த அணில்களைப் பாருங்கம்மா. முகம் கூடு மாதிரிப் போச்சு.
உரோமம்தான் தெரியுது. சாதி கெளரவத்தைக் காப்பாத்த ஆணையோ, பொண்ணையோ அடைச்சு வச்சுட்டா அந்த இளம் ஜோடிகளும் இந்த அணில்கள் மாதிரிதான் ஆவாங்க? அன்னம் தண்ணி இல்லாமப் போனா, முகம் மண்டை ஓடாப் போயிரும். உடம்பு எலும்புக் கூடாய்ப் போய் உடுத்தின சேலை, பேண்ட், சட்டை இதுகதான் அங்கே மிச்சமா இருக்கும்...' என்றார் பரசுராம். அவர் கண்கள் அணில்களிடமிருந்து மீளவில்லை.
'இறக்கும் வரை இந்த அணில்கள் என்னென்ன பேசியிருக்கும். சாகப் போறோம் என்று எவ்வளவு கண்ணீரை விட்டிருக்கும்? வாயோடு வாய் வைத்து எவ்வளவு உமிழ் நீரை உறிஞ்சியிருக்கும்? அடக் கடவுளே' என்று நெக்குருகிய பரசுராம், ரன்வே ரூமுக்குள் வராததை அப்போதுதான் கவனித்தார். 'ஒரு ஏணி உள்ளே இருந்திருந்தா இதுக ஏறிப்பிழைச்சிருக்கும். இதுக சாவுக்கு நான் காரணமாய் இருந்தது மாதிரி உங்க மக, மகளை விரும்புனவன் சாவுகளுக்கு நீங்க காரணமா ஆயிடாதீங்க. இப்பவே போய்க் காப்பாத்துங்கம்மா?' என்று கெஞ்சினார் பரசுராம்.
ஒரு விநாடி பரசுராமை இமைக்காமல் பார்த்த மாரியம்மா, அவர் கால்மாட்டில் விழுந்து, 'அப்ப என் மக மண்டையோடுதான் இருக்குமா? பால் வடியும் என் மக முகத்தைப் பாக்க முடியாதா? காலேஜிலிருந்து வந்தா அவ முகத்தைப் பாத்துக்கிட்டே சாப்பிடாம இருப்பேனே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.