ஜாவர் சீதாராமன்
1967-இல் கர்நாடாகாவில் ஸ்டூடியோ அதிபரான பசவராஜ் அவர்களுடன் இணைந்து ஏ.பீம்சிங் எடுக்க முடிவு செய்த படம் 'பட்டத்து ராணி'. பீம்சிங் மேற்பார்வையில் எஸ். ராமநாதன் இயக்கினார். இதில் முக்கிய வேடங்களில் பானுமதி, ஜெமினி கணேசன், நாகேஷ், பாலாஜி நடித்தனர். பீம்சிங் மூலமாக இயக்குநர் எஸ். ராமநாதனிடம் உதவியாளராக மாதம் 75 ரூபாய் சம்பளத்துக்கு சேர்க்கப்பட்டேன்.
பட்டத்து ராணி தெலுங்கில் 'அந்தஸ்துலு' என்ற பெயரில் வெளியாகி வெற்றி அடைந்து குடியரசு தலைவரின் விருதைப் பெற்ற படமாகும். தெலுங்கில் பானுமதி, நாகேஸ்வரராவ், ஜக்கையா உள்ளிட்டோர் நடித்தனர். கதை எழுதியவர் ஜாவர் சீதாராமன். அதனால் ஜாவருக்கு வசனம் எழுத மிகவும் எளிதாகப் போனது. அவருக்கு உதவியாக என்னை நியமித்தார்கள்.
இவர் வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் பேனர்மேனாக நடித்ததையும், 'பட்டணத்தில் பூதம்' படத்தை எழுதியவரும் அதில் 'ஜீபூம்பா' என்ற பூதமாக வந்து ஜெய்சங்கருக்கு உதவுவார் என்பதும் எல்லோரும் பார்த்து விரும்பிய படங்களாக இருந்தன.
இதற்கெல்லாம் மேலே இவர் அந்தக் காலத்து எம்.ஏ.பி.எல். விக்டர் கியூகோ-வின் 'லே மிஸரபிள்' என்ற நாவல் கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுத்தில் 'ஏழை படும் பாடு' என்ற படமாக 1950-இல் வெளிவந்தது.
இதில் நேர்மை தவறாத இன்ஸ்பெக்டர் 'ஐôவர்' என்ற பேரில் நடித்து பெயர் வாங்கியதால் ஜாவர் சீதாராமன் என்ற பெயர் வந்தது என்று நான் பணி புரிந்த நியூடோன் ஸ்டூடியோவில் தெரிந்து கொண்டேன்.இவர் எழுதிய படங்கள்தான் 'ஆலயமணி', 'களத்தூர் கண்ணம்மா', 'குழந்தையும் தெய்வமும்'. ஏவி.எம்.மின் வலதுகரமாகவும் நம்பிக்கைக்குரிய எழுத்தாளராகவும், ஆலோசகராகவும் இருந்தார். இப்பேர்ப்பட்ட ஜாம்பவானிடம் அவருக்கு உதவியாளனாக நியமிக்கப்பட்டேன்.
அவருக்கு ஹோட்டலில் தங்க விருப்பமில்லாததால் பீம்சிங்கின் மனைவி சுகுமாரி வீட்டின் மாடியில் தங்கி பட்டத்து ராணி படத்தை எழுதி முடிக்கத் தினமும் ஜாவர் சீதாராமன் போவார். அங்கு நானும் செல்வேன். ஜாவர் எப்போதும் ஆங்கில புத்தகமும் கையுமாக இருப்பார். ஒரு காட்சியை எழுதி அவரே நடித்தும் பேசி பார்ப்பார். இதெல்லாம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. அவர் எழுதியதை நான் கார்பன் பேப்பர் வைத்துக் காப்பி எடுப்பேன். சிறிது நேரம் ஓய்வெடுப்பார்.
அந்த நேரம் அப்போது புதிதாகத் தொடங்கிய அம்பிகா அப்பளம் கடையில் சென்று அவருக்கு வேண்டிய சில நொறுக்குத் தீனிகளை வாங்கித் வந்து வைப்பேன். அவர் சொன்ன நேரத்துக்கு எழுப்பி அந்த நேரத்துக்கு வேண்டிய காபி, மோர் வாங்கி கொடுப்பேன். அவர் எழுதிக் கொடுத்ததை படப்பிடிப்பில் கொண்டு போய் இயக்குநர் எஸ்.ராமநாதனிடம் ஜாவர் மாதிரியே படித்துக் காட்ட முயற்சிப்பேன்.
ராமநாதனுக்கு ஆங்கிலம் , கன்னடம் தெரிந்த அளவு அப்போது தமிழ் பேச , எழுத வராது. ஒரு நாள் ஜாவர் வராத போது வசனம் மாற்ற வேண்டிய நிலையில் நான் மாடும் வீடும் மகாலெட்சுமி மாதிரி அமையணும்' என்று எழுதியதை ஜி. வரலெட்சுமி பேசியதை தியேட்டரில் பார்த்து விட்டு ஜாவர் என்னைக் கூப்பிட்டு 'என்னைக் கேட்காமல் உன்னை யார் எழுதச் சொன்னது' என்று கோபப்பட்டார். 'அந்தக் காட்சிக்கும் நீ எழுதிய வசனத்துக்கும் என்ன தொடர்பு, கைக்கு வந்ததை எழுதுவீயா' என்று திட்டினார். நான் தலை குனிந்து நின்றேன்.
அப்போது அவர் 'பணமா பாசமா' படத்தை ஹிந்தியில் ஜே.வி.பிலிம்ஸ் என்ற பேனரில் ஏவி.எம். அவர்களின் மாப்பிள்ளை வீரப்பன் அவர்களுடன் சேர்ந்து இயக்கும் பணியில் தீவிரமாக இருந்தார். படத்தின் பெயர் 'பைசா யா பியார்' அவரைத் தேடிப் போனேன். வேலையை விட்டு விடலாம் என்று நினைப்பதாக சொன்னேன்.
அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் குமுதத்துக்காக அவர் எழுதிய தொடரின் அத்தியாயத்தை, குமுதம் ஆபிசில் ரா.கி.ரங்கராஜனிடம் கொடுத்து வரச் சொல்லி விட்டு மும்பை சென்று விட்டார். அதைப் படித்த ரா.கி. கடைசியாக இரண்டு வரிகள் தேவை என்று ஜாவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து முடியவில்லை. நான் ஸ்டூடியோவுக்குச் சென்று ஜாவரிடம் பேசினேன். 'அடுத்த வாரத்துக்கு ஆரம்பமாக இரண்டு வரிகள் எழுதிக் கொடு எனக்கு எழுதியது ஞாபகமில்லை' என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.
அதைப் படித்து விட்டுப் பாராட்டினார். என்னை அடுத்த நாள் நேரில் பார்த்த போது 'இன்றையத் திரை உலக கலைஞர்கள் நிறைய பேர்கள் நாடகத்தின் மூலம் திரை உலகுக்கு வருகிறார்கள். நீயும் நாடகம் எழுது' என்றார். 'அனுபவமில்லை' என்றேன். 'லைப்ரரிக்கு போ... புத்தகங்கள் படி. நல்லவற்றைக் குறித்து வைத்துக் கொள். எழுத வரும் என்றார்.
நான் நாடகம் எழுத முயற்சித்தேன். ஆனால் எனக்கு வழிக்காட்டியவர் நான் எழுதிய முதல் நாடகத்தைப் பார்க்கும் முன் மரணமடைந்தார். அவர் உடலைப் பார்த்து ஏவி.எம். அவர்கள் 'ஜாவர்இனி யாரிடம் நான் ஸ்கிரின் பிளே கேட்பேன்' என்று குரல் நடுங்கக் கண் கலங்கிய காட்சி இன்னமும் என் மனதில் எதிரொலிக்கிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.