
அருள்செல்வன்
சங்க இலக்கியம் முதல் சமகாலக் கவிதைகள் வரை தமிழிலிருந்து கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் க. மலர்விழி. தாய்மொழி தமிழாக இருந்தாலும், கன்னட மொழிப் பேராசிரியராகி, இன்று துறைத் தலைவராக இருப்பவர். ஆறு மொழிகள் கற்றிருக்கும் இவர், மொழிகளை நேசிப்பவர்.
தமிழில் இருந்து கன்னடத்துக்கும், கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் என இவர் மொழிபெயர்ப்பு செய்ததற்காக 'திசை எட்டும் விருது', 'குவெம்பு பாஷா பாரதி விருது', 'சம்பூர்ண விருது', 'திருப்பூர் சக்தி விருது', 'ஸ்வரணிகா விருது' போன்ற இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவருடன் ஒர் சந்திப்பு:
தங்களது பூர்வீகம்
எனது பெற்றோர் கமலநாதன்- சுசீலா. தாத்தாவின் ஊர் வேலூரில் இருந்து குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ஊசூர். எனது தாய்மொழி தமிழ் என்றாலும் நான் கன்னடத்தில் எம்.ஏ. , பி .எச்.டி. முடித்தேன். சிறு வயதிலேயே பணி நிமித்தமாக, தாத்தா பெங்களூரு வந்துவிட்டார். நான் பிறந்தது தமிழ்நாட்டில் என்றாலும் வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்தான். குடும்பம் அங்கேயே குடியேறிவிட்டதால் கன்னடத்தில் படித்தேன்.
முதலில் சென்னையில் உள்ள ஏசியன் ஸ்டடிஸ் நிறுவனத்தில் 1988 முதல் 2 ஆண்டுகள் பன்மொழி அகரமுதலித் திட்டத்தில் நான் ஆய்வுத்துறை உதவியாளராகப் பணியாற்றினேன். தமிழ், கன்னடம், ஆங்கிலம், ஜப்பானிஷ் என நான்கு மொழிகளில் அது உருவானது.
அதற்குப் பிறகு பெங்களூரு வித்யா வாகினி கல்லூரியில் உதவிப் பேராசிரியரானேன். பிறகு பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியர். தற்போது பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவர். நான் தமிழை முறையாகக் கற்கவில்லை. வீட்டில் அம்மா, அப்பா, தாத்தாவிடம் தான் கற்றேன்.
மொழிகளின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
எனது அப்பாவே தூண்டுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தார். என் அம்மா என் அப்பாவைப் பற்றிப் பேசும்போது , 'அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியும். ஆந்திரா போனால் தெலுங்கு,கர்நாடகா வந்தால் கன்னடம் ,தமிழ்நாடு வந்தால் தமிழ் என்று பல்வேறு மொழிகளில் பேசவும் படிக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார்' என்று சொல்வார். இதைக் கேட்டுக் கேட்டு மொழிகள் மீது எனக்கு ஆர்வம் வந்தது .
அப்பாவைவிட அதிகமான மொழிகள் கற்க வேண்டும் என்று நினைத்தேன். படித்த கன்னடம், ஆங்கிலம் தவிர என்னுடைய சுய ஆர்வத்தில் தெலுங்கு, மலையாளம் கற்றேன். ஹிந்தியும் தெரியும். ஏசியன் ஸ்டடீஸில் ஜப்பானிய மொழியில் தொடக்க நிலை சான்றிதழ் பெற்றேன்.
கற்றுகொள்ளும் ஒவ்வொரு மொழியும் ஒரு தனிநபர் பலம் அல்ல; ஒரு நாட்டின் பலமாகவும் சேர்ந்து கொள்ளும். பல மொழிகள் தெரிந்ததால் பல பெருமைகளை அடைந்துள்ளேன். அவரவர் மொழியில் நாம் பேசும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சி அலாதியானது.
அவர்களது மொழியில் பேசும்போதும் நமக்கும் பெருமையாக இருக்கும். எனது தமிழ், கன்னட மொழிபெயர்ப்புகளைப் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். என்னுடன் படித்த ஒரு நண்பர் . 'நீங்கள் பலமொழிகள் கற்றிருக்கிறீர்கள் .அதனால் நீங்கள் பெற்ற அனுபவம் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்றார்.
மொழிபெயர்ப்புப் பணிக்குள் எப்படி நுழைந்தீர்கள்?
தமிழவன் எனக்கு பேராசிரியர், அவரது இயற்பெயர் டாக்டர் கார்லோஸ் . நான் எம். ஏ. படிக்கும்போது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் பெயரைக் கேட்டபோது 'உங்களுக்கு தமிழ் படிக்க வருமா?' என்றார். அப்போது அந்த அளவுக்கு வேகமாகத் தமிழ் படிக்க மாட்டேன் என்றாலும் 'தெரியும்' என்றேன். 'நீங்கள் ஏன் மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது?' என்று அப்போது அவர் கேட்டார்.
அப்படி அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் மொழிபெயர்ப்பில் ஆர்வம் வந்தது.ஆனாலும் உடனே இறங்கி விடவில்லை அந்த எண்ணம் எனக்குள் ஊறிக் கொண்டே இருந்து, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மொழிபெயர்ப்பில் இறங்கினேன்.
ஒரு கட்டத்தில் விரிவுரையாளர், பேராசிரியர் என்று நமது காலம் ஓடிக் கொண்டிருக்கிறதே, நமக்கென்று இருக்கும் அடையாளம் என்ன? நமக்குள் இருக்கும் திறமை என்ன? என்று யோசித்தபோதுதான் ஏன் மொழிபெயர்ப்பில் இறங்கக்கூடாது? என்று தீவிரமாக சிந்தித்தேன். அதன்படி தான் நான் மொழிபெயர்ப்பில் இறங்கினேன்.
முதல் முயற்சி எது?
நான் எட்டாவது படிக்கும்போது வைரமுத்து எழுதிய ஒரு கவிதையை எழுத்துக் கூட்டி படித்தது இன்றும் நினைவில் உள்ளது. அந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்தது.நல்ல சமூகச் சிந்தனை உள்ள ஒரு கவிதை அது.
முதன் முதலில் மொழிபெயர்க்க விரும்பியபோது நான் தேர்ந்தெடுத்தது வைரமுத்து கவிதையைத்தான். நான் கேட்ட போது முதலில் எனக்கு பத்து கவிதைகளுக்குத்தான் அனுமதி கிடைத்தது. அதில் மூன்று கவிதைகள் பிரசுரமாகியிருந்தன.
அதைப் படித்துப் பலரும் பாராட்டிய பிறகு ஒரு நூல் வடிவில் 33 கவிதைகளைக் கொடுத்தார்கள். அதுதான் 'வைரமுத்து ரவரா மூவத்மூரு கவிதெகளு ‘ என்கிற பெயரில் நூலாக வந்தது. அதன் வெளியீட்டு விழா 2009-இல் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பெங்களூரில் நடைபெற்றது. வைரமுத்துவே வெளியிட்டார். எனது பேராசிரியர் சந்திசேகர கம்பாரா சிறப்பு விருந்தினராக வந்து பேசினார்.
முதலில் நான் மொழிபெயர்ப்பு செய்த கதை ம. ராஜேந்திரன் எழுதிய 'திருட்டு' என்கிற கதை. மொழிபெயர்ப்புத் துறையில் சேஷ நாராயணா என்பவரை நான் முன்னோடியாக நினைத்துகொள்வேன், அவர் கி. வா.ஜ. ஊக்கத்தின் மூலம் மொழிபெயர்ப்பாளரானவர்.அசோகமித்திரன் , அகிலன், கலைஞர் மு.கருணாநிதி ,எஸ்.எல் பைரப்பா,மாஸ்தி போன்றவர்களின் நூல்களை மொழிபெயர்த்தவர்.
சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு அனுபவம் எப்படி?
சங்க இலக்கியம் கன்னட மொழிபெயர்ப்பு சி.ஐ.சி.டி. எனப்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டது. எப்படி மொழிபெயர்ப்பது என்று முதலில் தயக்கமாக இருந்தது. எனக்கு முன்னோடியாகவும் சகமொழிபெயர்ப்பாளராகவும் 90 வயது கொண்ட பேராசிரியர் தா.கிருஷ்ணமூர்த்தி இருந்தார்.
பதினெண்மேல்கணக்கு நூல்கள் பதினெட்டில் நாங்கள் நற்றிணை, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என நான்கை மொழிபெயர்த்தோம். ஒருங்கிணைப்பாளராக முனைவர் ஆர். சீனிவாசன் இருந்தார். இணைச் சொற்கள் இல்லாதவற்றுக்கு சுமார் 40 சொற்களைப் புதிதாக உருவாக்கினோம். சங்க இலக்கியம் காலத்தால் முந்தியது.
அப்போது உள்ள மொழி வேறு மாதிரியாக இருக்கும். எனவே அந்தப் பழந்தமிழை பழைய கன்னடத்துக்குக் கொண்டு வந்தோம். எளிய கன்னடத்தில் விளக்கம் கொடுத்துள்ளோம். தமிழைப் போலவே அந்த ஓசை நயத்தை கன்னடத்தில் கொண்டு வந்துள்ளோம்.
சாகித்திய அகாதெமிக்காக புதுமைப்பித்தன் பற்றி வல்லிக்கண்ணன் எழுதிய 'புதுமைப்பித்தன் வாழ்க்கை இலக்கியம் சாதனை' என்ற நூலையும், கள்ளிக்காட்டு இதிகாசத்தை 'கள்ளிக்காடின இதிஹாச' எனவும் தமிழிலிருந்து கன்னடத்தில் மொழி பெயர்த்தேன்.
கன்னடத்திலிருந்து சித்தலிங்கையா கவிதைகளையும் , சூத்ர ஸ்ரீனிவாஸ் எழுதிய ‘முடிவற்ற யாத்திரை' நாவலையும். என்னுடைய பேராசிரியர் பரகூரு ராமச்சந்திரப்பா எழுதிய 'கஸ்தூரி பா வெர்சஸ் காந்தி' யையும் மதுமிதாவுடன் இணைந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.
முன்னாள் அமைச்சர் டாக்டர் லலிதா நாயக் எழுதிய சிறுகதைகளை ஜெயந்தியுடன் இணைந்து மொழிபெயர்த்தேன். இப்போது கம்பராமாயணத்தின் கிட்கிந்தா காண்டத்தை மட்டும் 1031 பாடல்களைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளேன். பதினெண்கீழ்க்கணக்கில் 9 நூல்களை முனைவர் அ.சங்கரியுடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளேன்.
செய்யுள், கவிதைகள், கதைகள் என்று வேறு வேறு வகைகளை மொழிபெயர்க்கிறீர்கள். அதில் உள்ள மொழியின் தர வேறுபாட்டை எவ்வாறு கொண்டு வருவீர்கள்?
எழுதியவரின் மூலமொழியின் தன்மையைக் கொண்டு வரவே நான் விரும்புவேன்.அதற்காக மிகவும் சிரமப்பட்டு உழைப்பேன்.அப்படிச் செய்யும்போது அசலில் உள்ளது போதுமான அளவுக்கு வந்துவிடும்.ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
அதனால்தான் இன்றுவரை அந்தந்த மொழியும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தந்த மொழியின் அழகை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடக்கூடாது. முழு ஈடுபாடு இருந்தால் மொழியின் எந்த தரத்தையும் அறிந்து மொழி பெயர்க்க முடியும்.
ஒரு மொழிபெயர்ப்பு மூலத்துக்கு நிகராக இருக்காது என்ற கருத்தை ஏற்கிறீர்களா?
இரண்டு மொழியிலும் நல்ல ஆழமான மொழிவளம் இருந்தால் 95 சதவீதம் நிகராகக் கொண்டு வரலாம். 100 சதவீதம் முடியும் என்று நான் சொல்ல மாட்டேன்.
ஒரு மொழியில் உள்ள எதுகை மோனை இன்னொரு மொழியில் அதே வரியில் கொண்டு வருவது சிரமம். அதை வேறு வரிகளில் கொண்டு வர முடியும்.தனித்தன்மையுள்ள வகையான படைப்புகளைத்தான் நான் மொழிபெயர்க்க விரும்புவேன்.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியை மாற்றம் செய்வது மட்டுமா? அல்லது மறுஆக்கம் செய்வதா?
மொழி பெயர்ப்பு என்பது மறு பிறப்பு போன்றது. மொழியை மாற்றுவது மட்டுமல்ல. மூலத்தின் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறாரோ அதை அப்படியே சொல்ல வேண்டும். ஒரு கண்ணாடி எதிரில் உள்ளதைப் பிரதிபலிப்பதைப் போலவே மூலத்தில் உள்ளதை அப்படியே நாம் எழுத வேண்டும்.
நம் விருப்பப்படி அசலின் அழகைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது. அப்படி மாற்றம் செய்ய எனக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறேன்.அந்த எழுத்தாளர் கன்னடத்தில் எழுதி இருந்தால் எப்படி எழுதி இருப்பாரோ அப்படித்தான் நான் மொழிபெயர்ப்பு செய்வேன்.அதுவும் ஒரு படைப்பு போன்ற அனுபவம்தான்.
மொழிபெயர்ப்பில் எது உங்களது பாணி?
என் மொழிபெயர்ப்புக்கு ஒரு பாணி என்று கிடையாது. அதன் மூலம் நாட்டுப்புறப் பாணியில் இருந்தால் அதே பாணியில் கொண்டு வருவேன். நகர்ப்புறம் என்றால் அதே மாதிரி கொண்டு வருவேன்.
மதுரை தமிழ் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி மண்டியா கன்னடத்தை போடுவேன். வட்டார மொழி பேசும்போது மண்டியா, தும்கூர் பக்கம் பேசும் வட்டார வழக்கைப் பயன்படுத்துவேன்.'திருட்டு' என்ற கதையைக் கூட மண்டியா வட்டார மொழிக்குக் கொண்டு வந்தேன்.
கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கும் அப்படித்தான் பயன்படுத்தினேன். கன்னடத்தில் பெல்காம் , குல்பர்கா போன்ற வட்டார வழக்குகள் எனக்கு எழுத வராது. மதுரை வட்டார வழக்கு எனக்கு வரும்; கோயம்புத்தூர் வராது அது போலத்தான்.
மொழிபெயர்ப்பு நேரத்தை விழுங்கும் பணி. இதன் மூலம் கிடைக்கும் அனுபவம் பற்றி ?
நிச்சயமாக மொழி பெயர்ப்பு பெரும் உழைப்பை வேண்டுகிற பணிதான். சரியான இணைச்சொற்கள் கிடைக்காமல் நாள்கணக்கில், மாதக்கணக்கில் காத்திருந்தது உண்டு. சில நேரம் அப்போது கூட கிடைக்காது.
இருந்தாலும் முயற்சிகளைக் கைவிடுவதில்லை. இதில் ஓரளவுக்குத்தான் அங்கீகாரம் கிடைக்கிறது என்றாலும்,இதை ஓர் இலக்கிய சேவையாகவே நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு மூலம் அந்த மொழியில் உள்ள கலாச்சாரத்தை, சமூகத்தை, மக்களை புரிந்து கொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.