கண்டது
(புதுக்கோட்டை - மணப்பாறை வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'தொழுதான்பட்டி'
-அ.கருப்பையா, பொன்னமராவதி.
(சென்னை தி.நகரில் உள்ள ஒரு கடை வாயிலில் எழுதியிருந்தது)
'செருப்பு, வெறுப்பு, கடுப்பு வெளியே விட்டு வரவும்.;'
-மல்லிகா அன்பழகன், சென்னை-78.
(கோவூரில் ஒரு டீக்கடையின் பெயர்)
'வடிகட் டீ'
-சுந்தரேஸ்வர பாண்டியன், பூந்தமல்லி.
கேட்டது
(நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி ஒன்றில் ஊழியரும், வாடிக்கையாளரும்...)
'பணம் போடறவங்க டெபாசிட் மெஷினில் போடுங்க.. எடுக்கறவங்க ஏ.டி.எம். மெஷினில் எடுங்க?'
'அப்ப எதுக்கு நீங்க உட்கார்ந்து இருக்கீங்க?'
'இதை உங்களுக்குச் சொல்ல..?'
'இதை சொல்றதுக்கு நீங்க எதுக்கு.. செக்யூரிட்டியே போதுமே...?'
-எம்.ரவீந்திரன், திருமருகல்.
(கடலூரில் நண்பர் வீட்டில், நண்பரும், நண்பரின் மனைவியும்)
'என்னங்க விட்டத்த பார்த்தபடி யோசனை பண்றீங்க?'
'விட்டதைப் பிடிக்கிறது எப்படின்னு யோசிக்கிறேன்...'
-பண்ருட்டி பரமசிவம்
(திருவெறும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் இருவர் பேசியது)
'மண்டபம் பிரம்மாண்டமாய் இருக்கிற அளவுக்கு விஷயம் இல்லையே..?'
'என்ன சொல்றீங்க?'
'ஏனோ- தானோங்கிற விருந்து சாப்பாட்டைதான் சொல்றேன்...'
-அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
எதுவும் புரியாததுபோல் இருப்பது, எதையும் புரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது.
-பா.சக்திவேல், தஞ்சாவூர்.
மைக்ரோ கதை
போரின்போது இறந்த ஒருவரை மற்றொருவர் முதுகில் சுமந்தபடியே தூக்கிவந்து அடக்கம் செய்த வந்தார். அப்போது, மயானத்தில் இருந்த சிப்பாய்கள் முதுகில் சுமந்து வந்த
வரிடம், 'சடலத்தை இறக்கிவையுங்கள். இன்னும் நேரமாகும். எதுக்கு சுமந்துகொண்டிருக்கிறீர்கள். ஓரமாய் வைத்துவிடுங்கள்' என்றார்.
இதற்கு முதுகில் சுமந்தவரோ, 'இறந்தது எனது தம்பி அவனை சுமப்பது எனக்கு சுமையாகத் தெரியவில்லை' என்றார். இதைக் கேட்டு மயானத்தில் இருந்தோர், கண்ணீர் விட்டனர்.
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
எஸ்.எம்.எஸ்.
தன்னம்பிக்கையில் நம்பிக்கை வை. பயத்தில் அல்ல.
மஞ்சுதேவன், பெங்களூரு.
அப்படீங்களா!
அறிதிறன்பேசி வைத்திருக்கும் அனைவரும் விடியோக்களை பதிவேற்றம் செய்ய வைக்கிறது யூடியூப். படித்து தெரிந்துகொள்ளும் பல்வேறு துறைகளின் தகவல்களை விடியோக்கள் மூலம் எளிதில் அறிந்து கொள்ள உதவுகிறது யூடியூப். அதிலும் யூடியூப் ஷார்ட்ஸில் வெளியாகும் சிறு விடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.
இதிலும் ஏராளமான போலி விடியோ தகவல்கள் தொடர்ந்து வெளியாவதால் அதைத் தடுக்க கூகுளின் யூடியூப் நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வந்தது. இதன் பலனாக யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் சேவையை அந்த நிறுவனம் இணைத்துள்ளது.
யூடியூப் ஷார்ட்ஸில் ஓடும் விடியோவை நிறுத்திவிட்டு அந்தப் படத்தில் உள்ள பொருளை வட்டிமிட்டு தேர்வு செய்து அதன் விவரத்தையும் உண்மைத் தன்மையையும் அறிந்து கொள்ளும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. விடியோவில் இருந்தபடியே உண்மையான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தச் சேவை மிகவும் பயன்படும். தற்போதைக்கு பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு முதலிலும், பின்னர் அனைவருக்கும் இந்தச் சேவை அறிமுகமாகும் என்று யூடியூப் அறிவித்துள்ளது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.