பி. பானுமதி! - நான் சந்தித்த பிரபலங்கள் - 10

பி. பானுமதி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
பி. பானுமதி
பி. பானுமதி
Published on
Updated on
2 min read

பி. பானுமதி

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பானுமதி என்றால் திரையுலகம் நடுங்கும் என்பது நான் அறிந்த புதுமொழி. 1928-இல் பிறந்த பானுமதி 'வர விக்ரயம்' என்றதெலுங்குப் படத்தில் 2-ஆவது கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் பி. புல்லையா டைரக்ஷனில் 'மாலதி மாதவம்' படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு 'தாசில்தார்' என்ற படத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

'ஸ்வர்க்க சீமா' படத்தில் இவர் பாடிய 'ஓ பாவுரமா...' பாடல் மிகப் பெரிய ஹிட். அன்று முதல் 'பாவுரமா பானுமதி' என்றே அழைக்கப்பட்டார். நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப் பெற்று அவர் எழுதிய படத்திலும் நடித்த இவர் பி.யூ.சின்னப்பா, பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்று மூன்று தலைமுறை நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உள்பட எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே 'அஷ்டாவதானி' என்ற பெருமைக்குரியவர். பரணி ஸ்டூடியோவின் அதிபரான இவரை எம்.ஜி.ஆர்., 'அம்மா' என்றே அழைப்பார்.

1967-இல் கீழ்பாக்கத்தில் இருந்த நியூடோன் ஸ்டூடியோவில் எஸ். ராமநாதனின் இயக்கத்தில் ஏ. பீம்சிங்கின் மேற்பார்வையில் நடித்தார். அப்போது அந்தப் படத்தின் உதவி இயக்குநர் என்று நான்காவதாக பணிபுரிந்தேன். இதில் ஜெமினி, பாலாஜி, நாகேஷ், புதுமுகம் கல்பனா நடித்தார்கள். என் எழுத்துலகின் குரு ஜாவர் சீதாராமன் கதை, வசனம் எழுதினார்.

ஒரு நாள் பானுமதி காரை விட்டு இறங்கி, செட்டுக்குள் போகும் போது, என் தோளில் கை போட்டபடி ஜெமினி அன்று எடுக்கப் போகும் காட்சியின் வசனத்தைப் படித்து விட்டு வழக்கம் போல வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பானுமதி 'நாராயணா இங்கே வா...' என்று கூப்பிட்டார். நான் ஒரு கையில் வேட்டியைப் பிடித்துக் கொண்டு ஓடினேன்.

'நாளையிலேருந்து பேண்ட் போடு... நீ செய்யுறது கொத்து வேலை இல்லை. அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலை' என்றார். 'என்னிடம் பேண்ட் இல்லை' என்றேன். உடனே டைரக்டர் ராமநாதனைப் பார்த்து 'ராமநாதா! நாராயணனை நாளைக்கு பேண்ட் போட்டுக்கிட்டு வர சொல்' என்றார்.

அடுத்த நிமிடமே ஜெமினியைக் கூப்பிட்டார். 'ஜெமினி, நாராயணன் சின்னப் பையன். அவனைக் கெடுத்திடாதே. இன்னைக்கு என்ன சீன் எப்படி நடிக்கணும். அதைக் கவனி' என்றார். அவர் உடனே சாரி மேடம் என்று சொல்லி விட்டு மெல்ல அங்கிருந்து சென்றார்.

அன்று எடுக்கப் போகும் சீனைப் படிக்கச் சொன்னார். படித்தேன். 'உனக்கு படிக்கத் தெரியலியே... எங்கே ஜாவர், எங்கே பீம்' என்று கேட்டு விட்டு 'ராமநாதா - நாளையிலிருந்து செட்டுக்கு ஜாவர் வரணும். இல்லே பீம் வரணும். இது நான் நடிச்ச 'அந்தஸ்துலு' தெலுங்குல வெற்றிப் படம் என்று பெருமையுடன் கூறினார். அன்றிலிருந்து பானுமதி வந்த போதெல்லாம் ஜாவர் வந்தார்.

அடுத்த சில நாள்களில் டி.கே. ராமமூர்த்தி இசையில் வாலி பாடல் எழுத வந்த போது பானுமதி ரிகர்சல் பார்க்க கம்போஸிங் அறைக்கு வந்தார். ராமமூர்த்தி வாசித்துக் காட்டினார். பானுமதி உடனே 'ராமமூர்த்தி ட்யூன் நல்லாவே இல்லை. தெலுங்குல கே.வி. மகாதேவன் போட்ட ட்யூனையே போடு' என்றார். அடுத்து 'பாட்டு எழுதுறது யாரு' என்றார். வாலி அங்கே இருந்தார். ஆனால் பானுமதி அதைப் பற்றி கவலைப்படாமல் 'கண்ணதாசனை எழுதச் சொல்' என்றார்.

இது தெரிந்த பீம்சிங் அவரை சமாதானப்படுத்தினார். உடனே வாலி 'சித்தம் போக்கு சிவம் போக்கு சத்தம் போட்டா செல்வாக்கு' என்று கோபமாக எழுதினார்.

இன்னொரு நாள் ஜாவர் ஹைதராபாத்தில் இருந்தபோது புதுமுகம் கல்பனா பானுமதியிடம் கோபமாகப் பேச பானுமதி ஒன்றுமே பேசாமல் அமைதியாக நிற்க வேண்டிய காட்சி எடுக்கப்பட்டது. பானுமதி யோசித்து விட்டு 'ராமநாதா இப்படியே நான் தெலுங்குப் படத்தில் நின்னேன்.

அதுல பாப்புலர் ஆர்ட்டிஸ்ட் ஜமுனா நடித்தார். இது கல்பனா - புதுமுகம். நான் கடைசியா ரெண்டு டயலாக்காவது பேசணும்' என்று கூறி விட்டு யோசித்தார். சில நிமிடங்களில் நான் 'அம்மோவ் புதுமுகம் அடக்கி வாசி என்று சொல்லலாமா' என்று கேட்டேன். 'இதுதான் வேணும்' என்று பானுமதி நான் சொன்னதைச் சொன்னார். முதல் தடவையாக பாராட்டினார்.

அவர் பரணி கார்டனுக்கு வரச் சொல்லி ஜாவரையும் பீமையும் விட்டுடாதே. நான் செட்டுல அப்படித்தான் இருப்பேன் என்று வாழ்த்தி அனுப்பினார்.

படம் வெளியானபோது பாரகன் டாக்கீஸில் முதல் காட்சிக்கே போய் பார்த்தேன். நான் எழுதிய அம்மோவ் புதுமுகம் வசனத்துக்கு கைத் தட்டல் வந்ததைக் கேட்டு நானும் சினிமாவுக்கு கதை, வசனம் எழுதலாம் என்ற நம்பிக்கை வந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com